சிராத்தமும், மஹாளயமும் பிண்டமும் காகமும் ………… அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
சிராத்தமும், மஹாளயமும் பிண்டமும் காகமும் ………… அறிவோம்!!!
எப்பவும் எங்கேயும் காக்கை வராது என்பது அபத்தம். காக்கை இல்லாத ஊரே இல்லை. ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசங்களிலும் அவை உண்டு. எங்களுக்குத்தான் தெரியவில்லை!
செடி- கொடிகளும் மரங்களும் அதிகம் இல்லாத பட்டணங்களில்கூட மாட- மாளிகைகள் மற்றும் கோபுரங்களில் கூட்டம் கூட்டமாக காக்கைகளைக் காணலாம். கிராமங்களில் அவற்றின் அட்டகாசம் சகிக்காது. அவை மின்சாரக் கம்பிகளில் வரிசையாக உட்கார்ந்திருக்கும். உறைபனிப் பிரதேசத்தில் ஒருவேளை, அவை கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கலாம்.
கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை ஓட வைத்தது காக்கை. காலையில் சுப்ரபாதம் பாடி நம்மை எழுப்புகிறது காக்கை. இரவு வரை சளைக்காமல் வளைய வருவது காக்கை இனம். அவை வருவதற்குத் தடங்கல் இல்லாத இடத்தில் தாங்கள் குடியிருக்க வேண்டும். வீடு கட்டுமுன், வாசல் வரை ரோடு வசதி இருக்கிறதா? தண்ணீர் வசதி எப்படி? என்றெல்லாம் யோசிக்கும் நாம், இந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
நம்மால் செய்ய இயலும் ஒரு விஷயத்துக்கு மாற்று வழியைத் தேடக் கூடாது. ஏதாவது சாட்டுப்போக்கு சொல்லி தப்ப மனம் எண்ணிக் கொண்டிருக்கும்! எங்காவது ஓர் இடத்தில் முற்றுப்புள்ளி வேண்டும். காக்கைக்குப் பிண்டம் வைப்பதை ஓர் எல்லையாக நினைக்க வேண்டும். இக்கட்டான தருணத்தில் செயல்படுத்த வேண்டிய மாற்று வழியை, சாதாரணச் சூழலிலும் பயன்படுத்த நம் மனம் விரும்பும்.
கிராமத்தில் திவசம் செய்பவன் வீட்டுக்கு வெளியே பிண்டத்தை வைத்து, கை தட்டி ‘கா! கா!’ என்று காகத்தை அழைப்பான். உடனே காகங்கள் பறந்து வரும். தினமும் காகத்துக்கு உணவளிப்பது நமது பண்பாடு. அதைக் கடைப்பிடித்தாலே போதும். எங்கிருந்தாலும் தக்க தருணத்தில், காகம் வந்து விடும்.
நம்மிடம் இல்லாத ஒரு அறம் காகத்திடம் உண்டு!!பிண்டம் வைத்தவுடன் தனியாக உண்ணாமல், தனது பங்காளிகளையும் கூவி அழைத்து உணவைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கு காகத்தின் தனிச் சிறப்பு. ‘பிறருக்குப் பகிர்ந்தளிக்காமல், உண்பவன் பாவத்தை உண்கிறான்’ என்ற வேதக் கொள்கையைப் பறைசாற்றும் பெருமை அதற்கு உண்டு (கேவலாகோ பவதி கேவலாதி).
இப்படி, உண்மையில் செயல் வடிவில் அறத்தைப் பரிந்துரைக்கும் காகத்துக்கு ஆதரவளிக்க வேண்டாமா… சிந்தியுங்கள்! புண்ணியத்தை சேருங்கள் நண்பர்களே!
அடைமழை பெய்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு கூவியும் காகம் வரவில்லை. இதுபோன்ற தருணங்களில் மழை நின்றதும் கிணறு, குளம் மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் பிண்டத்தைக் கரைக்கலாம். ஆனால், இதற்கும் ஒரு மாற்று வழி தேடக் கூடாது. போக்குவரத்து சுலபமாக இருக்கும் இந்த நாளில் இது சாத்தியமே!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

சிராத்தமும், மஹாளயமும் பிண்டமும் காகமும் ………… அறிவோம்!!!
Scroll to top