மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 10. — இறுதிப்பகுதி!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 10. — இறுதிப்பகுதி!
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
கொடியிறக்கம்:
சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல் நடத்தும் வழக்கமும் உண்டு.
கணபதி தாளம் முதலியவற்றை துவஜாரோகணத்தின் (கொடியேற்றத்தின்) போது செய்ததுபோற் செய்து சமஸ்த தேவதா விசர்ஜனம் செய்வர். (கொடியேற்ற நாளில் சம்ஸ்தேவதா ஆவகனம் செய்து சகல தேவர்களையும் அழைப்பது போல கொடியிறக்கும் போது அவர்களை சுவஸ்தானங்களுக்கு எழுந்தருளச் செய்வதே சமஸ்த தேவதா விசர்ஜனமகும்)
நிதானமாக கொடிக்கயிற்றை அவிழ்த்துக் கொடியைச் சகல வாத்தியக் கோஷங்களுடன் இறக்கிக் கொடித்தம்பக் கூர்ச்சத்தை மூலமூர்த்தியிடமும் கொடிப்படத்தை நந்தியிடமும் சமர்ப்பித்து நீராஜனம் செய்வர்.
இதன் பின் உற்சவ மூர்த்தியை வீதிவலம் வரச் செய்வர். கொடியிறக்க நாளில் முதலில் வெளிவீதி வலம் வந்த பின்னரே உள்வீதி வலம் வருதல் முறை. வெளிவீதி வலம்வரும்போது நவசந்திகளிலும் முதலாம் நாள் ஆவாகனம் செய்த தேவர்களை மகிழ்வித்த பின் உத்வாகனம் செய்வர்.
இதன்பின் உள்வீதியில் வலம் வரும் போது:
கிழக்கு கோபுர வாசலில் இருந்து தென்கிழக்கு வரை மங்கள வாத்தியமும்;
அங்கிருந்து தெற்கு வாசல்வரை வேதபாராயணமும்;
அங்கிருந்து தென்மேற்கு வரை தமிழ் வேதபாராயணமும்;
அங்கிருந்து மேற்குத் திசைவரை சங்கு நாதமும்;
அங்கிருந்து வடமேற்கு வரை தவில் தாள வாத்தியமும்;
அங்கிருந்து வடக்கு வரை நாதஸ்வர கீத இசையும் இசைத்து;
அங்கிருந்து வடகிழக்கு வரை மௌனமாகவும்;
அங்கிருந்து வாயில்வரை சகல வாத்திய கோஷங்களுடனும் வந்து இருப்பிடம் சேர்ப்பர்.
சண்டேஸ்வர உற்சவம்:
இதன்பின் பைரவர், சண்டேஸ்வரர் பூஜைகள் முடித்து சண்டேஸ்வரமூர்த்தியை வீதிவலம்வரச் செய்வர். சண்டேஸ்வரமூர்த்தி சிறிய விக்கிரகமாக அமைந்திருப்பதால் சிறுவர்கள் அதனைத் தூக்கிக்கொண்டு விளையாட்டாக ஓடிவருவதைப் பல இடங்களில் காணமுடிகிறது. இது தவறான ஒன்றாகும். தலைசிறந்த பக்தராகவும், பக்தகோடிகளின் வழிபாட்டுப் பலனை அனுகிரகம் செய்பவராகவும் உள்ள சண்டேஸ்வரரைப் பணிவுடனும், பக்தியுடனும் கௌரவமாக வீதிவலம் வரச் செய்தல் அவசியமாகும்.
சண்டேஸ்வர உற்சவத்தின் பின் சிவாச்சாரியார் சகல மூர்த்திகளின் ரக்ஷா பந்தனங்களையும் (காப்பு) அகற்றித் தமது கரத்திலுள்ள ரக்ஷா பந்தனத்தையும் நீக்குவார்.
ஆசார்ய உற்சவம்:
மஹோற்சவத்தின் இறுதிக் கட்டமாக அமைவது ஆச்சாரிய உற்சவம். இறைவன்; குரு, லிங்கம், சங்கமம் என்ற மூன்று இடங்களில் நின்று அருள் செய்வதாகச் சாஸ்திரங்கள் பகரும்.
குரு கிரியைகளை நடத்தும் சிவாச்சாரியார், லிங்கம் என்பது பிம்பமாகிய திருவுருவமாகும். சங்கம் என்பது திருவடியார் கூட்டம். சங்கம வழிபாட்டை எடுத்துக் காட்டுவது மஹேசுர பூஜை (அன்னதானம்) ஆகும். மஹோற்சவம் நிறைவு பெற்று மறுநாளில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது மரபு.
மஹோற்சவ காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றி வைத்துத் திருவருட் பேறினைத் தந்தருளும் குரு மூர்த்தியாகிய சிவாச்சாரியாரைப் பூமாலை முதலியவற்றல் அலங்கரித்து மங்கள வாத்திய சகிதம் வீதிவலமாக அழைத்து வந்து மண்டபத்தில் அமரச் செய்து அடியார்கள் யாவரும் அவரை வணங்கி இயன்ற அளவு குருதட்சணை வழங்கி, விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு குருவின் அருளுரையை செவிமடுத்த பின் அவரை விடுதிவரை அழைத்துச் சென்று பின்னர் தமதில்லம் திரும்புவர்.
கடந்த 10 பகுதிகளையும் பலர் படித்த விபரங்கள் கண்டு கொண்டோம். மேலும் பலர் தமது முகநூல் பக்கங்களில் share பண்ணி உள்ளதையும் கண்டோம். எங்கள் மகிழ்ச்சிகளையும் நன்றிகளையும் தெரிவிக்கிறோம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 10. — இறுதிப்பகுதி!
Scroll to top