மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 9.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 9.
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
அநேக தத்துவங்களை விளக்கும் தேர்த்திருவிழா (பதினைந்துநாள் மஹோற்சவத்தில்) பதின்நான்காம் நாள் பகல் நடைபெறும். வழமையான கிரியைகள் நடைபெற்று உள்வீதி வலம் வந்து வெளியே கொண்டுவந்து சுவாமியை தேரிலே வீற்றிருக்கச் செய்வர். முன்னதாக தேர்த்தட்டு புண்ணியாக வாசனம் செய்து சுத்தம் செய்யப் பெற்றிருக்கும். தேரினில் சுவாமி இருக்கையில் யாத்ராதானம் முதலியவற்றை வழங்கி விநாயகரைப் பிரார்த்தித்துத் தேங்காய் உடைத்ததும் தேர் புறப்படும்.
தேர் வீதி வலம் வந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்தும் வழக்கம் எங்கும் உண்டு. உக்கிரமூர்த்தியாக அழித்தல் தொழில் முடிந்து வரும் இறைவனைக் குளிர்விக்கும் பாவனையே இது. சுவாமிக்குப் பச்சை சாத்துவது மட்டுமன்றி சிவாச்சாரியார்களும், உதவியாளர்களுங்கூட அவ்வேளையில் பச்சை வேட்டி சால்வைகளுடன் காணப்பெறுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
சூர்ணோற்சவமும் தீர்த்தத் திருவிழாவும்:
மறைத்தலாகிய தொழிலைக் குறிப்பது சூர்ணோற்சவம். ஆன்மாகளை ஆணவமாதி மலங்களில் அழுந்தச் செய்து அநுபவ வாயிலாக இறையுணர்வு பெறச் செய்வத்தே ஆண்டவனின் அருள் நோக்கம். “நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல” என்ற ஆன்றோர் வாக்கு நோக்கற்பாலது. துன்பத்தின் பின்னர்தான் இன்பத்தை நன்கு அனுபவிக்கலாம்.
உடலைப் பற்றியுள்ள அழுக்குகளோடு மன அழுக்குகளான காமம், குரோதம் முதலியனவற்றையும் நீக்குவதற்கு அடையாளமாகத் திருப்பொற்சுண்ணம் இடித்து இறைவனுக்குச் சாத்தப்பெறுகின்றது. இறைவனை முழுக்காட்டி நாமும் தீர்த்தமாடுகின்றோம்.
சூர்ணம் என்பது தூள். பொன்நிறமான பொடி என்பது பொன்வண்ணச் சுண்ணம் எனக் கூறப்பட்டுப் பின்னர் போற்சுண்ணம் என மருவியது. மஞ்சட்பொடி முதலியவற்றைத் தயார் செய்து வைத்திருந்து சவர்க்காரம் பூசிக் குளிப்பதுபோல முற்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அதனையே இங்கு திருப்பொற்சுண்ணத்திற்குப் பயன் படுத்துகின்றோம். தீர்த்தத் திருவிழா அருளலைக் குறிக்கும்.
யாக தரிசனம், மஹாபிஷேகம்:
திருப்பொற்சுண்ணமிடித்து தீர்த்தமாடியபின் சுவாமியை யாக வாசலில் கொண்டுவந்து யாகதரிசனம் செய்வித்துப் பூர்ணாகுதி வழங்குவர். ரக்ஷை தயாரித்து மூர்த்திகளுக்குச் சாத்துவர். உற்சவமூர்த்தியை உரிய இடத்தில் எழுந்தருளச் செய்தபின் யாக கும்பங்களை உத்தாபனம் செய்து பிரதான கும்பங்களை எடுத்துவந்து மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்வர். அங்குரவிசர்ஜனம் செய்து முளைப்பாலிகைகளைச் சகல மூர்த்திகளுக்கும் சாத்தி நீராஜனம் செய்வதை அடுத்து வழமையான வைரவர் பூஜை, சண்டேஸ்வரர் பூஜைகளுடன் தீர்த்தோற்சவம் நிறைவு பெறும். பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதங்களுடன் ரக்ஷையும், முளைப்பாலிகைகளும் வழங்கப் பெறும். அடியார்கள் அவற்றையும் பக்தியோடு தரிசிப்பார்கள்.
இக்கட்டுரையின் இறுதிப் பகுதி – 10 அடுத்த பதிவில் தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 9.
Scroll to top