மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 7.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 7.
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
ஆசீர்வாதம்:
ஆலயத்திற்கும், கிராமத்திற்கும், நாட்டிற்கும், ஆலய பரிபாலகர்களுக்கும், எசமானர்களுக்கும்,பக்த ஜனங்களுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் சர்வ மங்களமுண்டாகிச் சகல செல்வபோகங்களும் நிறைந்து, இறுதியில் முக்தியின்பம் பெற வேண்டுமென்றும் வாழ்த்தி விண்ணப்பிப்பதே ஆசீர்வாதமாகும்.
ஒவ்வொரு ஆசீர்வாத வாக்கியங்களையும் சிவாச்சாரியர் கூற ஏனைய குருமார்கள் (பிராம்மணோத்தமர்கள்) “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைக் கூறுவர்.
சந்தியாவாஹனம்:
மூலமூர்த்திக்கு நேரெதிராகக் கோபுரவாசலுக்கு அண்மையில் பிரம்மசந்தி எனப்பெறும் ஸ்தானமும், கிழக்கு முதல் ஈசானம் வரையிலான எட்டுத் திசையிலமைந்த ஸ்தானங்களும் நவசந்திகள் எனப்பெறும். இவ்விடங்களில் அந்தந்த சந்திக்குரிய தேவர்களை மகிழ்வித்து அவர்களுக்குரிய வேதம், பண், ராகம் என்பவற்றை இசைத்து மஹோற்சவ காலத்தில் அங்கு சாந்நித்தியமாகி நின்று மூலமூர்த்திக்குச் சேவையாற்றித் திருவிழாக் காலப் பந்தோபஸ்துக்கு அநுசரணையாக இருந்து காவல் புரியும்படி வேண்டுதல் சந்தியாவாஹனத்தில் நடைபெறும்.
தமிழ்வேதம் என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் தேவார திருமுறைகளுக்கு எமதுஆலய வழிபாட்டுக் கிரியைகளில் முக்கிய இடம் கொடுக்கப்பெறுவது அவசியம். நவசந்திகளிலும் அந்தந்தத் தேவர்களுக்குரிய பண்முறை அமைந்த திருமுறைகளைப் பாடவேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவது அத்துணை சிரமமானதன்று. ஆனால்
பெரும்பாலான கோவில்களில் உரிய பண்களுக்கு அமைந்த தேவாரங்களை பாடாமல் நினைவில் வந்த ஏதோவொரு தேவாரத்தைப் பாடுவதைக் காணும்போது மனவருத்தமாக உள்ளது. சில இடங்களில் பண்ணையும் புலப்படுத்தும் ஆற்றலின்றி அப்பண்ணாற் பெயரிட்ட பதிகத்தில் ஒரு பாடலைச் சும்மா படித்தலும் கவலைக்குரியதே.
பத்ததியைக் கவனித்து உரிய தேவாரப் பாடல்களை முன்கூட்டியே தயார்செய்து வைத்திருந்து முறைப்படி பாடுவதற்கான ஏற்பாடுகளைச் சிவாச்சாரியார்களும், த்ர்மகர்தாக்களும் செய்ய வேண்டும். அதேபோல குறிப்பிட்ட ராகதின் பெயரைச் சொல்ல அதனை நாதஸ்வர வித்துவான் வாசிப்பதும் இங்கு இடம்பெறுகின்றது. ஒரு சில நிமிடங்களுக்காவது ராகத்தை வாசிக்க வைத்து அந்த ராக தேவதையின் சாந்நித்தியத்தை அங்கு நிகழச் செய்வது நன்றாகும்.
கட்டியம்:
சுவாமி வீதிவலம் வர ஆரம்பிக்கும்போது சொல்லப்பெறும் வரவேற்பு இது. அரசர் கொலுமண்டபத்துள் பிரவேசிக்கும் போது கட்டியக்காரன் பராக் சொல்லி அறிபிப்பது போன்றதே இதுவும். இதற்கெனக் கட்டியப் பொல்லும் ஒன்று செய்யப்பெற்று அதனை ஒருவர் சுவாமிக்கு முன் தாங்கிவருதல் சில இடங்களில் உண்டு. சுவாமி வீதிவலம் வருவத்ற்காகப் புறப்படுகிறார் என்றும், இன்ன இன் தேவர்கள் சமுகமளிக்கிறார்கள் என்றும் தனிதனியே அறிவிக்கப் பெறும்.
விநாயகர் முதல் சண்டேஸ்வரர் ஈறாக எல்லத் தெய்வங்களையும் கூறி அவர்களின் சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுக் கோபுர வாசலில் வைத்துச் சொல்லுதல் கட்டியத்தில் இடம்பெறும். வீதிவலம் முடிந்து திரும்பும் போதும் அதே வாக்கியங்கள் சொல்லப் பெற்று இன்னார் வீதியுலா முடிந்து மீண்டும் வருகிறார் என்றும் அறிவிக்கப்பெறும்.
இக்கட்டுரையிம் எட்டாம் பகுதி – 8 அடுத்த பதிவில் தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 7.
Scroll to top