மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 6.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 6.
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
துவஜஸ்தம்ப ஆவாகணம்:
அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து ஆவாகனம் செய்தபின், கொடிக்கம்பத்தினச் சாந்தி கும்பநீரால் புரோஷித்து ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்பனவற்றையும், நான்கு வேதங்களையும் தம்பத்தில் பூஜித்து ரட்ஷாபந்தனம் செய்து சாந்தி கும்பத்தினால் அபிஷேகம் செய்யப் பெறும். ஆலய மூலமூர்த்தியைத் தம்பத்திலே ஆவாகனம் செய்து எழுந்தருளிவித்து ஏற்கனவே ஸ்தாபித்து வைத்த ஸ்நபன கும்பங்களால் அபிஷேகம் செய்வர்.
இதன் பின்னர் கொடிப்படத்தை வீதிவமாகக் கொண்டுவந்து கொடியிலிணைக்கப்பெற்றுள்ள மஞ்சட் கயிற்றைத் தம்பத்தின் நுனியிலிணைத்துப் படம் தெரியும்படியாகக் கட்டி வைத்துப் படத்தில் உள்ள நந்தி, அஸ்திரதேவர் ஆகியவற்றுக்கென ஸ்தாபித்த கும்பங்களினால் புரோக்ஷித்து, அபிஷேகம் செய்யும் பாவனையிற் கண்ணாடியைப் படத்திற்கு முன் பிடித்து அதில் அபிஷேகம் செய்வர். தம்பத்திலும், அதைச் சுற்றிலும் சகல தேவர்களையும் பூஜிப்பர்.
சமஸ்த தேவதாவாஹனம்:
சகலவிதமான தேவர்களையும் பெயர் சொல்லி அழைத்து மஹோற்சவ காலத்தில் தத்தம் பரிவாரங்கள் குழு எழுந்தருளுமாறு அழைப்பதே சமஸ்ததேவதா ஆவாகனம். எல்லா வாத்தியங்களையும் நிறுத்திவிட்டு சாதகாசிரியர் இசையோடு இதை வாசிக்கும்போது கேட்க இனிமையாக இருக்கும்.
துவஜாரோகணம் (கொடியேற்றம்):
சிவாச்சாரியார் சங்கல்பம் செய்து நவக்கிரகங்களை மகிழ்விக்கும் வகையில் தானம் வழங்கி, நடைபெறவுள்ள காரியம் தடையின்றி நிகழும் பொருட்டு யாத்ரா தானம் வழங்கி, மூலவருக்குப் பஞ்சாராத்திரிகம் காட்டி வணங்கி விநாயகரை நினைத்துத் தேங்காய் உடைத்துவிட்டு ஏகாக்ர சித்தமாக (ஒரே சிந்தனையுடன்) தம்ப நுனியைக் கொடிப்படம் சேரும்வரை மெதுவாக கொடியை ஏற்றுவார்.
சிவாச்சாரியார் கொடிச்சீலையைப் பற்றி அது ஒழுங்காக மேலேற வகை செய்ய, உதவியாளர் கொடிக் கயிற்றைப் பற்றி மெல்ல இழுத் ஏற்றுவது மரபு. கொடிச்சீலையுள் மஞ்சள் கயிறு மறையும்படி வைத்து அதனைப் பலமாக முறுக்கி, தற்பைக் கயிற்றையும் அதனுடன் சேர்த்துத் தம்பத்தில் வலமாக மூன்று முறையாவது ஐந்து முறையாவது சுற்றப்பெறும். இறுதியில் மூலமூர்த்தியை நோக்கியிருக்குமாறு மேற்குப் பக்கத்தில் பிரம்மக்கிரந்தி முடிச்சு இட்டுப் பட்டுகள், மாவிலை, கூர்ச்சம் என்பனவற்றையும் வைத்து அலங்கரிப்பர்.
துவஜஸ்தம்ப பூஜை:
இதன் பின் தைலக்காப்பு முதல் பன்னீர் ஈறாக சகல விதமான அபிஷேகங்கள் செய்து அலங்கரித்துத் திக்பாலகர் முதலானோருக்குத் தேங்காய்ப் பிரமாணத்தில் அன்ன உருண்டையை பலியாக வழங்கி, நைவேத்திய தூப தீபாராதனைகள் நடத்துவர். அதன் முடிவில் அழகிய சுலோகங்கள் அமைந்த “பணிமாலா” முதலிய தோத்திரங்களைச் சொல்வர்.
மூர்த்திகளின் சிறப்பியல்புகளைத் தாள லயத்தோடு அழ்லிய வாக்கியங்களில் அமைத்துச் சொல்வது தாளம் எனப்பெறும். ஒவ்வொரு மூர்த்திக்கும் இத்தகைய தாளங்களும், அவரவர்களுக்கு விருப்பமான வேதப்பகுதி, தேவாரப்பண், தாளம், வாத்தியம், நிருத்தம், ராகம் என்பனவும் கூறப்பெற்றுள்ளன. அவற்றை உரிய இடங்களில் பயன்படுத்துவர்.
துவஜஸ்தம்ப பூஜையும், தோத்திரமும் முடிந்ததும் கணபதி தாளம் முதலில் சொல்லப்பெறும். அவருக்குரிய வேதம், பண், ராகம் முதலியன இசைக்கப் பெற்றதும்; மூலமூர்த்தியின் வாகனத்துக்குரிய தாளம் (விருஷப தாளம், மூஷிக தாளம், சிம்ம தாளம், மயூர தாளம் முதலியன) இசைக்கப் பெறும். இதன் பின் அஸ்திர தேவருக்கும் சுற்றுப்பலி போடப்பெறும். பலிபீடமும் பூஜிக்கப் பெறும்.
இக்கட்டுரையின் அடுத்த பகுதி 7 பின்னர் தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 6.
Scroll to top