தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 4.
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
கோடி ஏற்றம் : காலை ரட்ஷாபந்தனத்துடன் துவஜாரோகண விழா ஆரம்பமாகும்.
ரட்ஷாபந்தனம்:
ரட்ஷா என்பது காப்பு. காவலுக்காக கட்டப்பெறுவது. காப்புக்கட்டுதல் எனவும் கூறுவர். எடுத்த கருமம் தடையின்றி நிறைவேறுதற்கும், அக்கருமமன்றி வேறு செயல்களில் ஈடுபடாது தடுப்பதற்கும் காப்பு கட்டப் பெறும்.
சிவாச்சாரியாரும், தர்மகர்த்தாவும் ரட்ஷாபந்தனம் செய்துகொண்டபின் உற்சவம் முடியும் வரை ஆலயச் சூழலை விட்டு அப்பாற்செல்லலாகாது. இக் கால எல்லையில் அவர்களின் உறவினரால் ஏற்படும் ஆசௌசம் (துடக்கு) முதலியன அவர்களைத் தீண்டா.
காவலுக்காக கட்டப் பெறும் காப்பு மூர்த்திகளுக்கும் கட்டப் பெறுவது வழக்கம். எல்லா உலகங்களையும் காக்கும் அவருக்கே காவலா என ஐயுறலாம். சகல பிரஞ்சங்களும் இறைவனுள் அடங்கும். அவருள் அடங்கிய அனைவருக்கும் காவல் செய்யும் காரணமாகவே அத் திருவுருவங்களுக்கு காவல் செய்யப் பெறுகின்றது. மேலும் தன் குழந்தைகளின் நோய் தீரத் தான் மருந்துண்ணும் தாய் போல நமக்காக இறைவன் காப்புக்கட்டும் பாவனையும் இதில் தொனிக்கிறது.
“கங்கணம் கட்டுதல்” என்ற மரபுச் சொற்றொடர் இங்கு நோக்கற்பாலது. ஒரு காரியத்தை விடாது முயன்று செய்துமுடிக்கத் தீர்மானிப்பதைக் கங்கணம் கட்டுதல் என்று சொல்லுவர். கங்கணம் என்பது காப்பு. எடுத்தகாரியத்தை நிறைவேற்றி முடிக்கும் ஆயத்தம் கொள்வது இக்கிரியையின் நோக்கம் எனவும் கொள்ளலாம்.
ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் தேங்காய், வெற்றிலை-பாக்கு, பழம், மாவிலை, விபூதி என்பனவும்; ரட்ஷா சூத்திரம் (மஞ்சள் பூசிய காப்புக்கயிறும்) வைக்கப் பெற்றிருக்கும்.
துவஜாரோகண் தினத்தன்று காலையில் நீராடி நித்திய கர்மானுஷ்டானங்கள் யாவும் நிறைவேற்றிய சிவாச்சாரியார்; வழமையான நித்திய பூஜைகள் யாவும் முடித்துப் பூர்வாங்க கிரியைகளையும் செவ்வனே நிறைவேற்றிய பின் ரட்ஷாபந்தன் பொருகளைப் பூஜிப்பர். இதன்பின் மங்கள வாத்தியங்கள் முழங்க; சிவாச்சாரியார் தனது வலக்கை மணிக்கட்டில் ரட்ஷை நூலைக் கட்டி விபூதியால் முடிச்சிலே காப்பிட்டுக் கொள்வார். இதன் பின் சகல மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப் பெற்றும். இதனைப் பெரும்பாலும் ஸ்நபன கும்ப பூஜையின் பின் அபிஷேகம் செய்யும் போது செய்வதே வழக்கம்.
ஸ்நபன கும்ப பூஜைகள்:
துவஜாரோகணத்திற்குரிய கொடிப்படம், தம்பம், அஸ்திரதேவர், நந்தி, பலிபீடம் முதலியவற்றுக்கும், மூலமூர்த்துகளுக்கும் விசேஷ அபிஷேகங்கள் செவதற்காக ஸ்நபன கும்பங்கள் மண்டபத்திலே வைக்கப் பெறும். கொடிச்சீலைப் படத்திலுள்ள அஸ்திர தேவப் பிரதிஷ்டைக்கும், நந்திக்கும், பலிபீடத்திற்கும் கும்பங்கள் வைக்கப் பெறும். இவற்றைவிட; சாந்திகும்பம், யாகேஸ்வரன், யாகேஸ்வரி (சிவம் வர்தனி) கும்பங்கள் என்பனவும்; ஓமகுண்டமும் தயாராக அமைக்கப் பெற்றிருக்கும். மண்டபத்தின் ஒரு புறத்திற் கொடிப்படம் கட்டப் பெற்றிருக்கும்.
கும்பங்கள் யாவற்றுக்கும் பூஜைகள் செய்து அக்கினி காரியம் செய்வர். கொடிப்படத்திற்குப் புண்ணியாகநீர் தெளித்து பிம்பசுத்தி செய்தபின் அதிலுள்ள நந்திக்கு நயோன் மீலனம் (கண் திறத்தல்) செய்யப் பெறும். ரட்ஷாபந்தனமும் கொடிப்படத்திற்குச் செய்யப் பெறும்.
இக்கட்டுரையின் பகுதி ஐந்து ( 5) தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 4.

