மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 3.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 3.
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
மிருத்சங்கிரகணமும் அங்குரார்ப்பணமும்:
ஐந்தொழில் விளக்கமாகிய மஹோற்சவத்தில் படைத்தலைக் குறிப்பான இவையிரண்டும். நற்காரியங்கள் எதனையும் தொடங்கும்போது முளைப் பாலிகையிடுதலாகிய அங்குரார்ப்பணம் மிக முக்கியமாகச் செய்யப் பெறும். இதற்கு வேண்டிய மண்ணை மந்திர சகிதமாகப் பெறுவதே மிருத்சங்கிரகணமாகும் (மிருத் – மண்; ச்ங்கிரணம் – சேகரித்தல்). ஆலயத்தின் ஈசானம், மேற்கு, வாயு அல்லது வடக்குத் திசையில் இது செய்யப் பெறும். அஸ்திர தேவரையும் எழுந்தருளச் செய்து மங்கள வாத்திய சகிதம் குரு இங்கு வந்து சேருவார். அஸ்திர தேவரையும், அதற்கு முன் (கிழக்கே) சப்தவாரிதி கும்பத்தையும் ஸ்தாபிப்பர். அதற்கு கிழக்கே நவபதம், அதற்கும் முன் அஷ்டதள பத்மம் (எட்டிதழ் கமலம்); அதற்கு முன் நாற்கோணம் என்பனவற்றை அரிசிமாவினால் அமைப்பர். நாற்கோணத்தில் மண்வெட்டி ஒன்று கூர்ச்சம், மாவிலை என்பன கட்டப்பெற்றதாக வைக்கப் பெற்றிருக்கும்.
பூர்வாங்க கிரியைகளை நிறைவேற்றியபின், கும்பத்திலே ஏழு சமுத்திரங்களையும், நவகோஷ்டத்தில் பிரம்மாவையும் எட்டு மண்டல தேவர்களையும், பத்மத்திலே அட்டதிக்குப் பாலகர்களையும் பூமிதேவியையும் பூஜிப்பர். மண்வெட்டியின் குற்ற நீக்கத்திற்காக தைலம், பால், தயிர்,இளநீர் என்பனவற்றால் அபிஷ்கித்த பின் மும்முறை மண்ணை வெட்டி ஒரு தட்டிலிட்டு பட்டினால் மூடுவர். சப்தரிஷி கும்ப ஜலத்தினால் மண் எடுத்த இடத்தை அபுஷேகம் செய்து நவதானியமிட்டு சமதளமாக்குவர்.
தெய்வ காரியத்தின் பொருட்டு இங்கே மண் எடுக்கிறேன் என்னை மன்னித்து எனக்கு அனுமதி தருக” என்று பூமாதேவியைப் பிரார்த்தனை செய்வதும் மண்வெட்டிய இடத்தை மீண்டும் சமதள்மாக்கி அங்கு நவதானியம் இட்டு ஏழுகடல் நீரினால் (சப்தவாரிதி கும்பம்) நீராட்டுவது முதலிய அம்சங்களில் காணப்பெறும் இயற்கை நேயமும் மனித மேம்பாட்டுணர்வுகளும் கவனிக்கத்தக்கன.
மேலும் இங்கு ஓதப்பெறும் பூசூக்தம், ஓஷதி சூக்தம் முதலிய வேத மந்திரங்கள் அற்புதமான உட்பொருள்கள் கொண்டவை இயற்கையைப் போற்றித் துதிப்பவை.
யாகசாலையின் பின் வாயுதிக்கிலே (வட-மேற்கு) கார்த்திக, உரோகினி சகிதமாக அமிர்தேஸ்வர கும்பம் வைத்து (அமிர்தேஸ்வரன் – சந்திரன்) சுற்றிவர துவாதசாத்தியர்களுக்கு (பன்னிரு சூரியர்) பன்னிரண்டு சிறிய மண்சட்டிகளும் வைக்கப் பெற்றிருக்கும். மிருத்சங் கிரகணத்தில் எடுத்துவந்த மண்ணினால் இவை நிரப்பப் பெற்று வில்வம், அரசு, மாவிலை இவற்றால் அலங்கரிக்கப் பெறும்.
பூர்வாங்கக் கிரியைகளை அடுத்து சந்திரனையும், பன்னிரு சூரியர்களையும் பூஜித்தபின் தூய்மையான பாத்திரம் ஒன்றிலே பசுப்பால் விட்டு அதில் அதில் நவதானியத்தை இட்டு பூஜித்து உரிய மந்திரங்களுடன் பாலிகைகளில் (மண்சட்டிகள்) அதனை விதைப்பர். சந்திரகும்ப நீரை இவற்றிற்கு வார்த்து மீண்டும் கும்பத்தை நீரால் நிரப்பி ஸ்தாபிப்பர். இவ்வங்குரார்ப்பண முளையானது பசுமையாக நன்கு செழித்து வளர்ந்தால் கிராமம் சிறக்கும் என்பது ஐதீகம் (அங்குரம் – முளை).
பகுதி 4 தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 3.
Scroll to top