ஆலயங்களில் நடைபெறும் கொடி ஏற்றம் மற்றும் பேரிதாடன கிரியை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
ஆலயங்களில் நடைபெறும் கொடி ஏற்றம் மற்றும் பேரிதாடன கிரியை!!!
நம்மூர் ஆலயங்கள் தோறும் வருடாந்தம் பிரம்மோத்ஸவம் ஆரம்பத்தில் கொடியேற்ற விழா நடைபெறுகின்றது. கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழிநின்று பிரம்மோத்ஸவத்தை ஆற்றும் ஆலயங்கள் அவற்றை அனுசரித்தே கொடியேற்ற விழாவை பேணுவதனைக் காணமுடியும்.
பிரம்மோத்ஸவம் அல்லது மஹோத்ஸவம் என்று அழைக்கப்பெறும் ஆண்டுப் பெருவிழாவில் முதல் நாள் நிகழ்வாக கொடியேற்றம் என்ற துவஜாரோஹணம் நடக்கிறது. இதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் முதல் நாளே ஆரம்பமாகி நிகழத் தொடங்கி விடுகின்றன. அந்த அந்த ஆலய சம்பிரதாயப் பிரகாரம் கணபதி ஹோமம் அல்லது விஷ்வக்சேன ஆராதனத்துடன் மூலதேவதா மற்றும் பிராம்மண அனுக்ஞை முதல் நாள் இடம்பெறும். தொடர்ந்து உற்சவமூர்த்தி மற்றும் அஸ்திரதேவரிடமும் அனுக்ஞை பெற்று பெருவிழாவை ஆரம்பிக்கும் முகமாகப் பிரார்த்தித்துக் கொள்வர்.
அடுத்து ஆலயம் அமைந்திருக்கும் கிராமத்தில் வசிக்கும் அசுரர்- பைசாசர்கள் போன்றோரால் பெருவிழாவிற்கு எந்த இடையூறும் உண்டாகாமல் இருக்க “கிராமசாந்தி” என்ற கிரியை செய்யப்பெறும். அடுத்து ஆலயம் அமைந்துள்ள இடத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும் பொருட்டு “வாஸ்து சாந்தி” செய்யப்பெறும்.
தொடர்ந்து மிருத்சங்கிரகணம் என்ற கிரியை இடம்பெறும். ஏழு கும்பங்கள் வைத்து அவற்றில் சுத்த- லவண- இக்ஷு- ஸூரா- சர்ப்பி- ததி- க்ஷீர (பால்) என்ற ஏழு கடல்களையும் ஆவாகிப்பர். பிரம்ம மண்டலம் முதலாக அக்கினி மண்டலம் ஈறாக ஒன்பது மண்டலங்களையும் வரைவர். இவற்றுடன் மண்வெட்டியையும் வைத்துப் பூஜை செய்த பின் பூசூக்தம் (Bhu Suktam) பாராயணம் செய்து பிரதான ஆச்சாரியார் மண்டியிட்ட வண்ணம் சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார். இது விவசாயத்திற்கு உதவும் மண்வெட்டிக்கு வழங்கப்பெறும் விசேட உபசாரமாகக் கொள்வர்.
இதனைத் தொடர்ந்து மஹோற்சவ யாகசாலையின் வாயு திக்கில் 16 பதங்கள் வரைந்து நடுவிலுள்ள 4 பதங்களில் சந்திர கும்பத்தை ஸ்தாபித்துப் பூஜை செய்வர். எஞ்சியுள்ள 12 பதங்களிலும் வைகர்த்தன் -விவஸ்தன்- மார்த்தாண்டன்- பாஸ்கரன்- ரவி- லோகப்பிரகாசன்- லோகசாட்சி- திரிவிக்கிரமன்- ஆதித்தன்- சூரியன்- அம்சுமாலி- திவாகரன் என்ற 12 சூரியரையும் ஆவாஹித்துப் பிரார்த்திப்பர். பசுப்பாலில் நெல்- எள்ளு- உளுந்து- பயறு- கொள்ளு- அவரை- கரும் பயறு- வெண்கடுகு- துவரை என்ற நவதானியங்களையும் இட்டு திக்பாலகர்களை பிரார்த்தித்து “ஓஷதி சூக்தம்” ஓதி பிரதான அர்ச்சகர் இடுவார். இவ்வளவு கிரியைகளும் கொடியேற்ற வைபவத்திற்கு முதல் நாள் செய்து வைப்பது வழமையாகும்.
பிரதான அர்ச்சகர் தன்னை “பூதசுத்தி- அந்தர்யாகம்” என்ற ஆத்மார்த்தக் கிரியைகளால் தயார்ப் படுத்திக் கொண்டு ரட்சாபந்தனம் என்ற கங்கணம் கட்டிக் கொள்வார். ஒரு தாம்பாளத்தில் அரிசியை நிரவி அதில் தேங்காய் வைத்து அதன் மேல் மஞ்சள் பூசிய பவித்ரமுடிச்சிட்ட பருத்தி நூல்களை வைத்து அஷ்ட நாகங்களையும் வழிபட்டு தமக்கு இரட்சாபந்தனம் செய்த பின் இறை மூர்த்தங்களுக்கும் இரட்சாபந்தனம் சாற்றி விடுவார்.
இவற்றினை அடுத்து கொடியேற்றும் துணியில் வரையப்பெற்றுள்ள படத்திற்கு இறை உருவேற்றும் முகமாக “படபிரதிஷ்டை” செய்யப்பெறும். இது போலவே தம்பப் பிரதிஷ்டையும் அஸ்திரப் பிரதிஷ்டையும் பலிபீடப் பிரதிஷ்டையும் தனித்தனியே விஷேட ஆகுதிகள் வழங்கி ஹோமம் செய்து ஸ்நபன கும்பபூஜை செய்து ஆற்றும் வழக்கம் இருக்கிறது.
கொடித்தம்பத்தின் நீளத்தைப் போல இருமடங்கு நீளமாக கொடிச்சீலை அமைய வேண்டும். இக்கொடிச் சீலையை மூன்று பாகமாகப் பிரித்து அதில் முதற் பாகத்தை மேலும் மூன்று பாகமாக்கி நடுப்பாகத்தில் சற்சதுரம் வரைய வேண்டும். அதில் சுவாமிக்குரிய வாகனத்தையும் (ரிஷபம்- மயில்- எலி- யானை-கருடன்) அஸ்திரத்தையும் (திரிசூலம்- அங்குசம்- வேல் – சக்கரம்) வரைவதுடன் அதனைச் சுற்றி குடை- கொடி- இரட்டைச்சாமரை- வலப்புறம் சூரியன்- இடப்புறம் சந்திரன் -பத்மம்- சக்ரம் -சங்கு- மத்தளம் -தீபம் -தூபம்- ஸ்ரீவத்ஸம் – சுவஸ்திகம்- கும்பம் ஆகிய மங்கலப் பொருள்களை வரைதல் வேண்டும். கொடிச்சீலையின் மேற்பாகத்தில் பிரம்ம முடிச்சு இடப்பெற வேண்டும்.
சைவசித்தாந்த மரபுப்படி,
கொடிமரம்- பதியாகிய இறைவன்
கொடிச்சீலை- பசுவாகிய ஆன்மா
கொடிமரத்தில் சுற்றப்பெறும் தர்ப்பைக்கயிறு- பாசம் என்ற மலங்கள்
கொடிச்சீலை ஏற்றப் பயன்பெறும் கயிறு- திருவருட்சக்தி
என்று கருதப்படுகிறது. ஆக இறைவனுடன் பாசமும் பற்றும் அறுத்து ஆன்மா கலப்பதையே கொடியேற்ற உற்சவம் வெளிப்படுத்தும்.
கொடியேற்று முன் கொடிப்படத்தில் வரையப்பெற்ற உருவங்களுக்கு கண் திறக்கப்பட்டு (நயனோன்மீலனம்) கங்கணம் சாற்றப்படும். பூர்வ சந்தானம் மற்றும் பச்சிம சந்தானம் ஆகிய கிரியைகள் செய்யப்பட்டு “ஸ்பரிசாகுதி” நிகழும். இதன் மூலம் கொடிச்சீலையில் இறை சாந்நித்யம் ஏற்படச் செய்து தொடர்ந்து நடக்கிற பிரம்மோத்ஸவத்தில் அதனை வழிபடு பொருளாக மாற்றி இறையருட் செல்வமாக்குவர்.
குண்டத்தில் பூஜிக்கப் பெற்று ஆஹுதிகள் வழங்கப்பட்ட அக்கினியில் ஆதாரசக்தியையும் சுவாமியின் வாகனத்தையும் ஆத்ம- வித்தியா- சிவ தத்துவங்களையும் பூஜித்து மும்மூர்த்திகளையும் தத்துவேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் பூஜித்து தனித்தனியே மும்முறை ஆஹுதி செய்வர்.
தோடர்ந்து மூலமந்திர ஹோமம்- சம்வாத ஹோமம் இடம்பெறும். குண்ட சமீபத்தில் வைக்கப்பட்டுள்ள சாந்தி கும்பத்தில் அஸ்திர மந்திர ஜபம் இடம்பெறும். சிருக்-சிருவங்கள் என்ற நெய் விடும் பெரிய இரு கரண்டிகளையும் கைகளில் ஏந்தி நெய் நிரப்பி “சுவா” என்று அக்கினியில் சிறிது ஆஹுதி செய்து அவற்றைக் கையிலேந்தி சாந்தி கும்பத்தையும் பரிசாரகரின் உதவியுடன் எடுத்துக் கொண்டு நாடி நூல் வழியே கொடிப்படத்தை அடைந்து படத்தில் ஒவ்வொரு பாகத்திற்கும் முறையே “ஹா” என்ற ஓசையுடன் நெய் விடுவர். இதுவே ஸ்பரிசாகுதி என்பர்.
அடுத்து “பேரி தாடனம்” (Bheri thaadanam) என்ற கிரியை செய்யப்பெறும். இது உற்சவாசாரியார் முறைப்படி பேரிகை என்ற மேளத்தை பூசித்து மந்திரத்துடன் ஒலித்து இறைவனுக்கு செய்யப் பெறும் உற்சவத்தில் அனைத்து தேவர்களையும் எழுந்தருளச் செய்ய வேண்டும் சடங்காகும்.
ஈழத்திலும் தமிழகத்திலும் சிவாலயங்களில் பின்பற்றப்படும் பத்ததிகளின் படி,
1. “பிரம்மஜஜ்ஞானம்” வேதத்தால் பிரம்மதியானம் செய்து ஒரு முறையும்
2. “இதம் விஷ்ணு” வேதத்தால் விஷ்ணுவை தியானித்து இரு முறையும்
3. “த்ரயம்பகம்” வேதத்தால் ருத்ரனைத் தியானித்து மும்முறையும்
4. “வியோமசிதி” வேதத்தால் ஒரு முறையும்
5. “சகல புவன பூதிம்” என்ற மந்திரத்தால் இரு முறையும்
6. “பிரம்மேந்திர நாராயண’” என்ற மந்திரத்தால் மும்முறையும்
பிரதான குருக்கள் மேளம் அடித்து பின் வாத்திய காரரிடம் கொடுத்து “கணபதி தாளம்” வாசிக்கச் செய்வார். இதுவே “பேரீதாடனம்” என்பதாம். சங்ககாலத்திலேயே விழா ஆரம்பமாக இருப்பதை வள்ளுவன் முரசறைந்து அறிவித்ததாய் செய்திகளுள்ளமை இங்கு சிந்திக்கத்தக்கது.
ஒரு முறை ,சிதம்பரத்தில் உமாபதிசிவம் இல்லாமல் கொடியேற்றிய போது அக்கொடி ஏறாமல் நின்று விட்டது. அசரீரி அறிவுறுத்த உமாபதி சிவம் வரவழைக்கப்பட்டார். கொடிக்கவி பாடினார். கொடி எத்தடங்கலும் இன்றி பட்டொளி விசிப்பறந்தது.
“வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
தாக்கா துணர்வரிய தன்மையனை –நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்கும் அருள் நல்கக் கொடி”
இதனூடாக கொடியேற்றுதல் சாதாரண காரியமன்று என்பதும் இறையருட் துணையுடன் செய்யப்பெற வேண்டிய காரியம் என்றும் புலப்படும். கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது.
கொடிப்பட பிரதிஷ்டையின் பின் கொடிப்படத்தை ஊர்வலமாகக் கொண்டு வந்து உற்சவ மூர்த்தியையும் அலங்கரித்து துவஜஸ்தம்பத்தின் அருகே எழுந்தருளச் செய்து புண்ணியாக வாசனம் செய்வர். ஸ்தம்பத்திற்கு நியாசபூர்வமாக ஆராதனை செய்த பின் சமஸ்த தேவதா ஆவாஹனம் என்பதனைச் செய்வர். இது அகில தேவர்களையும் கொடித்தம்பத்தில் அருள்முகமாக எழுந்தருள வேண்டுவதாகும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
ஆலயங்களில் நடைபெறும் கொடி ஏற்றம் மற்றும் பேரிதாடன கிரியை!!!
Scroll to top