அறிவோம் அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!!
ஆடி மற்றும் மார்கழி மாதத்தை பீட மாதங்கள் என்பர். மாதங்களுக்கு நடுவில் பீடங்கள் போல அமைந்து உள்ளதால், இந்தப் பெயர். இதை அறியாதவர்கள் , புரியாதவர்கள் தமது எண்ணப்படி தம் இஷ்டப்படி ” பீடை மாதங்கள் என்று திரிச்சு சொல்லிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை!!! மார்கழி- மகாவிஷ்ணுவுக்கும், ஆடி மாதம் அம்மனுக்கும் விசேஷமானது.
எமனுக்கு உரிய திசை தெற்கு. எம பயம் போக்கும் கால சக்தி அம்பிகை. தட்சிணாயனத்தின் ஆரம்பமான ஆடி மாதத்தில் அம்பிகையை வழிபட்டால், நமக்கு நன்மை கிடைக்கும். ஆகவே, நம் முன்னோர் இந்த வழிபாட்டை அமைத்து உள்ளனர்.
அம்மனுக்கு உகந்தது எலுமிச்சம் பழம். அம்பிகையின் அம்சம் எலுமிச்சம் பழத்தில் கலந்திருக்கிறது என்பது ஐதீகம். ஆகவே, துர்சக்திகளைத் விரட்டும் சக்தி எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. குளிர்ந்த பார்வையும், வெப்பத் திருமேனியும் உடையவள் சக்தி. கனிவான அருள் தரும் தாயின் மேனி வெப்பத்தைக் குளிரச் செய்வது இந்த எலுமிச்சம் பழம்.
இதில் நெய் தீபம் ஏற்றி மாரியம்மனை வழிபட்டால், கிரக நிலைகளில் உள்ள துன்பத்தைப் போக்கி வியாழ நோக்கம் என்னும் திருமண பந்தத்தை ஏற்படுத்தி சுபவாழ்வு தருவாள். இளநீர் அபிஷேகமும், உடைத்த தேங்காயில் நெய் தீபம் இடுவதும் அம்பிகையைக் குளிர்விக்கும் செயலாகும். இதனால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளில் மங்கள கௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. மணமான பெண்கள் புகுந்த வீட்டிலும், மணமாகாத பெண்கள் பிறந்த வீட்டிலும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தன்று அதிகாலையில் நீராடி, நெற்றிக்குத் திலகமிட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். அம்மன் படத்தின் முன் சந்தனம்- குங்குமம் இட்ட எலுமிச்சம் கனியைப் படைத்து, சக்தி கவசம், துர்கா சகஸ்ர நாம பாராயணம் செய்து நைவேத்திய பிரசாதம் படைத்து வழிபட வேண்டும். ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் தவறாமல் இதைக் கடைப்பிடிப்பதன் மூலம் திருமண பாக்கியம், மாங்கல்ய பலம் ஆகியவை கிடைப்பதுடன், வாழ்வில் வளம் கொழிக்கும்.
முன்னோரின் ஆசி பெற்றுத் தரும் புனித நாள் ஆடி அமாவாசை. இது பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய உகந்த நாள். கடல், குளம், நதி, ஓடை ஆகிய நீர்த் தடங்களில் பித்ருக்களின் ஆன்மா சாந்தியடையச் செய்யப்படுவது தர்ப்பண பூஜை. இதனால்

முன்னோரின் ஆன்மா மகிழ்ச்சியடைந்து, தங்கள் சந்ததியை வாழ்த்துகிறது. பிதுர் லோகம், சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது.
சூரியன் தட்சிணாயன புண்ணிய காலத்தில் சஞ்சரிக்கத் தொடங்குவது ஆடி மாதம் ஆகும். ஆகவே ஆடி அமாவாசை பித்ருக்களின் தர்ப்பணத்துக்கு உகந்த காலமாக விளங்குகிறது. இதனால் முற்பிறவியில் நாம் அறியாது செய்த பாவங்கள் நீங்கி, அதனால் ஏற்பட்ட துன்பங்கள் மறையும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
அறிவோம் அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!!
Scroll to top