தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!
வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில், அகல் விளக்கு உபயோகிப்போம்! பதிலாக மெழுகுவத்தியை வேண்டாமே!!!
வெளிச்சத்துக்காக வேண்டுமானால் மெழுகு வத்தி ஏற்றி வைக்கலாம். வழிபாட்டுக்கு, அகல் விளக்கு தீபமே ஏற்றது. வழிபாட்டுக்கு ஏற்றப்படும் தீபம் வெளிச்சமும் தரும். ஆதலால், இரண்டுக்கும் அகல் விளக்கே போதுமானது. அது பிறந்த தினமோ அல்லது வேறு எந்த நல்ல விடயங்களாக இருந்தாலும் மெழுகு வர்த்தி வேண்டாமே!!! அது எங்களின் கலாச்சாரமும் இல்லை!!!
அப்படி வீட்டில் ஒரு நல்ல நிகழ்ச்சி நடைபெறும் போது மேசையில் ஒரு பக்கத்தில் ஒரு காமாட்சி விளக்கை ஏற்றி வைக்கலாம் , மெழுகு வர்த்திக்குப் பதிலாக!!! அணைக்க வேண்டிய தேவை இல்லை!
தீபத்துக்கு இலக்கணம் உண்டு. அது, ஐந்து பூதங் களின் கலவை. அகல்- பிருதிவி (மண்); எண்ணெய்- அப்பு (திரவம்- தண்ணீர்); ஜோதி- நெருப்பு. தீபத்தை செயல்பட வைப்பது காற்று. அதன் பிரகாசம் பரவ, இடமளிப்பது ஆகாசம். ஆக, உயிருள்ள வடிவமாக உருப்பெற்றது தீபம். ‘பரம்பொருளின் வடிவம் நீ. உள்ளதை உள்ளபடி விளக்குகிறாய். ஆன்மா எது? ஆன்மா அல்லாதது எது? என்ற பகுத்தறிவை எனக்கு வழங்கு!’ என்று தீபத்தை வேண்டச் சொல்வதுடன், தீப தானம் செய்வதன் சிறப்பையும் எடுத்துரைக்கிறது தர்ம சாஸ்திரம். அரக்கர்களை அழிக்க, அம்பாள் ஜோதி வடிவில் தோன்றியதாக புராணம் கூறும். தீப ஜோதியில் அம்பாளின் திருவுருவைப் பார்க்கும் அன்பர்கள் உண்டு.
திருவண்ணாமலை தீபத்தின் சிறிய வடிவமே அகல் விளக்கு. ஆண்டவனை ஆராதிக்க தீபம் வேண்டும். இறை ஆராதனையின்போது அலங்கார தீபம், பஞ்ச முக தீபம், நாக தீபம், கும்ப தீபம், கற்பூரம்… என்று ஒன்றன் பின் ஒன்றாக இறைவனுக்கு தீபங்கள் காட்டப்படும். கோயில்களில் நடைபெறும் லட்ச தீப திருவிழாவும் தீபத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.
தீபம் , எட்டு மங்களப் பொருள்களில் ஒன்று. காலை மற்றும் மாலை வேளைகளில் கோயிலுக்குச் சென்று தீப தரிசனம் செய்வதால் ‘அறியாமை’ இருள் அகலும்.
தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் பருத்தி ஆகியவை முறையே தீபத்தின் எரிபொருளாகவும் திரியாகவும் செயல்படும். பூமித் தாயின் பங்கு- மண்ணால் ஆன அகல் விளக்கு. இப்படி, இயற்கையின் தூய்மையான பொருட்களில் உருப்பெற்றது தீபம்.
முற்காலத்தில், ஆதவன் மறைந்த பிறகு வெளிச் சத்துக்கு அகல் விளக்கையே பயன்படுத்துவர். கார்த் திகை தீபம், கோபுரத்திலும் இருக்கும் குப்பையிலும் இருக்கும். நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயில் ஜோதி மிளிர வேண்டும். அப்போது, கண்கள் கூசாது; பார்வை நீடித்திருக்கும். உயிர் பிரிந்த உடலுக்கும் ஒரு தீபம் உண்டு. மறைந்தவரின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றுவர். இம்மையில் சுகாதாரத்தையும் மறுமையில் மோட்சத்தையும் தர வல்லது தீபம்.
ஜோதிடம், தீப ஒளியின் தரத்தை வைத்து வருங்காலத்தை விளக்குகிறது. தரையில் கோலம் போட்டு, அதன் மேல் பெண்கள் தீபம் ஏற்றுவர். தீபத்தில் குங்குமம் மற்றும் மலர் வைத்து வணங்கி வழிபடுவோம். தீபத்தை நிறைவு செய்வதும், பெண்கள் வாயிலாக நிகழும். அவர்கள், பால்- பழம் போன்றவற்றை அளித்து தீபத்தை நிறைவு செய்வார்கள் (அணைப்பார்கள்).
ஒரு முகம், இரு முகம், ஐந்து முகம் என்று ஜோதியின் எண்ணிக்கை அடிப்படையில் தீப விளக்குகள் பல வகையாகத் தென்படும். திருவிளக்கில் (குத்து விளக்கு) பாதம், ஸ்தம்பம் (தண்டு), முகம் என்று பாகங்கள் உண்டு. வட்ட வடிவமான பாதத்தில், ஸ்தம்பம் அதாவது தண்டு இணைந்திருக்கும். அதன் மேல் முனையில் தாமரை போன்ற விரிந்த முகம் இருக்கும். இதில், பூவின் நடுவில் அமைந்த கர்ணிகை போன்று நாளங்கள் அமைந்திருக்கும். இது தவிர, யானை தீபம், கன்னிகை தீபம் போன்றவையும் உண்டு.
இறை மூர்த்தங்களின் திருவுலாவின்போது, தீபம் ஏற்றி வரவேற்போம். நமது வீடுகளில் காலை- மாலை இரு வேளைகளிலும் தீபம் ஒளி வீசும். துளசி மாடத்திலும் அகல் விளக்கு ஏற்றி வைப்போம். புதுமனை புகும்போதும் கையில் தீபம் ஏந்தியபடி உள்ளே நுழைய வேண்டும். இப்படி வாழ்க்கையோடு இணை பிரியாத ஒன்றாக தீபம் திகழ்கிறது. ‘வீட்டில் விளக்கேற்ற மருமகள் வேண்டும்’, ‘மலைமேல் ஏற்றிய விளக்கு போல்’ முதலான உவமைகளும் வழக்கில் உண்டு.
இப்படி, எண்ணற்ற பெருமைகளுடன் திகழும் தீபத்துக்கு சற்றும் குறைவில்லாதது மெழுகு வத்தி என்று நீங்கள் கருதினால், அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com


வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில், அகல் விளக்கு உபயோகிப்போம்! பதிலாக மெழுகுவத்தியை வேண்டாமே!!!