திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!!
திருமாங்கல்யத்துடன் எதையும் சேர்க்கக் கூடாது. திருமாங்கல்யத்தின் தனித் தன்மையைக் காப்பாற்ற வேண்டும். மங்கல நூலில் முன்னும் பின்னும் தங்க மணிகளும், அவற்றுக்கு நடுவில் திருமாங்கல்யத்தின் தனி உருவமும் மிளிரும். சம்பிரதாயத்தை ஒட்டி கடவுள் வடிவங்களும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும்.
சுபமுகூர்த்த வேளையில் கணவனால் அணிவிக்கப்படும் நிரந்தர அணிகலன் அது. அணிவதற்கு முன் பல பேர்களது வாழ்த்துகளையும் அது பெற்றிருக்கும். அதற்கு நிகரான மற்றொரு பொருள் உலகத்தில் இல்லை.
நகைக் கலைஞரை அழைத்து நல்லதொரு வேளையில் அவரிடம் தங்கத்தைக் கொடுப்பார்கள். அவர், கடவுளை வேண்டி தங்கத்தை உருக்குவார். ‘திருமாங்கல்யத்துக்கு பொன்னுருக்க நல்ல நாள்’ என்று பஞ்சாங்கத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். மறை ஓதுபவர் காலையில் நீராடி, நெற்றியில் திலகமணிந்து வேதத்தின் சாரத்தை மனதில் அசை போட்டபடி பருத்தியில் இருந்து நூலை நூற்று, அத்துடன் மஞ்சளைச் சேர்த்து திருமாங்கல்யத்தை கோர்க்க வேண்டிய தாலிக் கயிறைத் தயார் செய்வார்.
கலாசாரத்துடன் இணைந்த இந்த அடையாளத்தை பெருமையோடு அணிந்து கொள்வார்கள் பெண்கள். இதன் மூலம் அவர்களது மனம், தாம்பத்திய வாழ்க்கை உறுதியாகி விட்டதாக எண்ணும். அந்த நம்பிக்கையே அவர்களுக்கு வெற்றியளிக்கும். ஆக, திருமாங்கல்யம் என்பது மனம் சார்ந்த விஷயம்; உடல் சார்ந்ததல்ல. மற்ற அணிகலன்களுடன் அதை ஒப்பிடக் கூடாது.
‘எனது வாழ்க்கை செழிக்க, நீ நீடூழி வாழ இந்தத் திருமாங்கல்யத்தை அணிவிக்கிறேன்!’ என்று அதை மனைவிக்கு அளிக்கும் கணவன் பெருமைப்படுவான். திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டதும், ‘இருவரும் ஒருவராகி விட்டோம்’ என்ற உணர்வை அந்த தம்பதியின் மனம் பெற்று விடும். திருமாங்கல்யம் இரு குடும்பங்களை இணைப்பது. புதிய சொந்த- பந்தங்களைத் தோற்றுவிப்பது. சேர்ந்து வாழும் சிறப்பை உணர்த்துவது. அறத்தைசெயல்படுத்த ஊக்கமளிப்பது. இவ்வளவு மகத்துவமான திருமாங்கல்யத்துக்கு வலுவூட்ட மற்றொரு பொருள் தேவைஇல்லை. சாவித்திரியின் திருமாங்கல்யம் எமனையே விரட்டியது என்ற கதையே படித்திருப்பீர்கள்!!!
சாளக்கிராமம் மற்றும் சிவலிங்கத்தை கல்லாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்ப்போம். அதுபோல திருமாங்கல்யத்தை தங்கமாகவோ, அணிகலனாகவோ பார்க்காமல் ‘மங்கல’ப் பொருளாகப் பார்ப்போம்.
நம் பெண்களில் சிலர், திருமாங்கல்யத்தின் பெருமை தெரியாமல் டாலர், சாவி, ஊசி (ஊக்கு) வேறும் ஏதும் அலங்கார மணிகள் போன்றவற்றையும் சேர்த்துத் தொங்கவிட்டு, திருமாங்கல்யத்தின் தரத்தை தாழ்த்துகிறார்கள்! அது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல நண்பர்களே!!! தாலி என்பது அலங்காரப் பொருள் அல்ல!!!
நல்ல விடயங்களை தெரிந்து கொள்வோம் , அறிவோம்!!! அதன்படி வாழ்க்கையில் நன்மைகளைப் பெறுவோம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be an image of jewelry and text
திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!!
Scroll to top