தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இறைவழிபாடு- சாஸ்திரம் வேதங்கள் என்ன சொல்கின்றன???
அவசர உலகம். வேலைப்பளு… சீக்கிரமாக எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடவும் நேரம் இல்லை. அதற்காக, சாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து கொண்டே சாப்பிடலாமா? குளிக்க நேரம் இல்லை… குளியலைத் தவிர்க்கலாமா? கோயிலுக்குப் போக நேரம் இல்லை. ஸ்கூட்டரில், காரில், பஸ்சில் இருந்தபடியே சந்நிதியைப் பார்த்து தலையாட்டிவிட்டு செல்லலாமா????
கோயிலுக்கு செல்ல நேரம் இல்லை, ஆனால், சின்னத்திரை, கிரிக்கெட் பார்க்க நேரம் உண்டு. அதுதான் விந்தை. இறைவனை எப்படியாவது ஆராதனை செய்தால் போதாது; இப்படித்தான் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
மாறி வரும் சிந்தனைக்கு ஏற்ப, நீங்க எண்ணுமாப் போல வழிபாட்டு முறைகளை , ஆன்மிகத்தை மாற்றி அமைக்கலாம்; ஆனால் பலன் இருக்காது! பலனை தீர்மானிப்பதில் நமக்கு சுதந்திரம் இல்லை. நமது உழைப்புக்கு உகந்த ஊதியத்தை தீர்மானிப்பதில் நமக்கு சுதந்திரம் இல்லை. நாம் இழுத்த இழுப்புக்கு கடவுள் செவிசாய்க்க வேண்டும் எனும் வளர்ந்து வரும் புது சிந்தனை, சிறுபிள்ளைத்தனமானது. அபிராமி பட்டரை மேற்கோள்காட்டி தங்களது விருப்பத்தை வெளியிடுவதும், அதற்குப் பலன் இருப்பதாக நினைப்பதும் கடவுள் வழிபாட்டில் தங்களது சுணக்கத்தைக் காட்டுகிறது. நித்தமும் வேதம் ஓதவேண்டும் என்கிறது சாஸ்திரம் (வேதோநித்யம் அதீயதாம்).
ஆபரேஷன் நடந்திருப்பதால் உட்கார இயலாது; நிற்கத்தான் முடியும்; என்ன செய்வது என்று கேட்டால், ‘நின்றபடியே வேதம் சொல்’ என்றது சாஸ்திரம். ‘எனக்கு நிற்க இயலாது; உட்காரத்தான் முடியும். அதுவும் சப்பணம் இட்டு உட்கார இயலாது… என்ன செய்வது?’ என்றால், ‘எப்படி முடியுமோ அப்படி உட்கார்ந்து சொல்’ என்றது வேதம். நிற்கவும் முடியாது, உட்காரவும் இயலாது; படுத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும் எனில், படுத்துக்கொண்டே வேதம் சொல் என்கிறது வேதம் (உததிஷ்டன், உதாஸீன, உதசயான).
இந்தச் சலுகை எல்லோருக்கும் பொருந்தாது. ‘வேதம் ஓதே வேண்டுமே… ஆனால் முடியவில்லையே’ என ஏங்கும் மனதுக்கு அளித்த வெகுமதி அது. உலகவியல் சுவையை அனுபவிக்க உடல் வலிமையோடு ஓடிக் கொண்டிருக்கும் வாட்டசாட்டமான உடல்வாகு பெற்றவருக்கு இந்த சலுகை கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடவுளையே ஏமாற்றி அவரிடமிருந்து அருளைப் பெற்று விடலாம் என்கிற சிந்தனை பலன் தராது.
கடவுள் வழிபாட்டில் நுனிப்புல் மேய இடம் இல்லை. சிரமத்தைப் பாராமல் இருக்கையில் அமர்ந்து, முறையாக ஜபம் செய்யுங்கள், வழிபாடு ஆத்மார்த்தமாக வழிபாடு இயற்றுங்கள். .
தங்களுக்கு துணை செய்ய கடவுள் காத்திருக்கிறார். வெற்றி பெறுவீர்கள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

இறைவழிபாடு- சாஸ்திரம் வேதங்கள் என்ன சொல்கின்றன???