தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆன்மீகத்தில் பெண்களின் மகத்தான பங்கு!
சமுதாயத்தில் ஆன்மீகத்தில் ஏதோ ஆண்களுக்குத்தான் பெரிய பங்கு இருப்பதாகவும் அவர்களுக்குத்தான் முன்னுரிமை என்பது போலவும் ,அதில் பெண்கள் இரண்டாம் பட்சம்தான் என்ற எண்ணம் இன்றும் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது! மற்ற மற்ற மதங்களில் அப்படி இருக்கலாம் ஆனால் இந்து/சைவ மத வழிபாட்டில் அப்படி இல்லை என்பது எமது கருத்து!!!
இப்படியரு எண்ணம் எவரின் சிந்தனையில் எழுந்தால் அது அறியாமையே! ஆன்மிகத்தில் நுழைய மனமில்லாமல், அதன் பலனைப் பெற இயலாமல்… பயன்பெற்றவர்களைப் பார்த்து வந்த ஏக்கமும் சோர்வும், குறையை மற்றொரு இடத்தில் சுமத்தி ஆறுதல் பெற விரும்புகிறது.
முனிவர்களின் மனைவிமார்கள் அத்தனைபேரும் ஆன்மிகத்தில் சிறந்தவர்கள். தம்பதி பூஜையும், சுவாசினி பூஜையும், நவராத்ரி 9 நாட்களில் ஒவ்வொரு நாளும் நடைபெறும். கன்யகா பூஜையும், ஸுமங்கல்ய பிரார்த்தனையும் ஆன்மிகத்தில் பெண்களின் பங்கை எடுத்துக்காட்டும்.
பூணூல் கல்யாணத்தில் ( உப நயனம் ) பூணூல் அணிந்த பின்னர் முதலில் தாயை வணங்கி பிக்ஷை பெறும் சிறுவன், கணவனுக்கு ஒளபாசனத்தில் ஹவிஸ்யை அளிக்கும் மனைவி, பச்சைப்பிடி சுற்றும் ஆரணங்குகள், ஹாரத்தி எடுத்து வரவேற்கும் ஸுமங்கலிகள், பாலிகை தெளிக்கும் பெண்மணிகள், சீமந்த வைபவத்தின் போது ஆல் மொட்டுகளை அரைக்கும் சிறுமிகள்……… அத்தனையிலும் பெண்மைக்கு முதலிடம் உண்டு.
வேள்விக்கு அவளே அக்னி அளிக்க வேண்டும். ஸாவித்ரீ விரதம், பிருந்தாவன த்வாதசி போன்ற விரதங்கள் பெண்மைக்கு பெருமை சேர்க்கின்றன. ஆண் குழந்தைகளை ஈன்றவள் அவள் என்பதால் பெண்மைக்கு முதலிடம் உண்டு.
அரக்கர் குலத்தை அழிக்க பெண் வடிவெடுத்து வந்தவள் மஹிஷாசுரமர்த்தினி. ‘எப்போதெல்லாம் அரக்கர்கள் தொல்லை தலை தூக்குமோ அப்போதெல்லாம் நான் தோன்றி உங்களையும் உலகையும் பாதுகாப்பேன்’ என்று சொன்னது பெண்மை (இத்தம் யதா யதா பாதா தான வோத்தாபவிஷ்யதி…).
தேவி மஹாத்மியம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் பெண்மையின் பெருமையைப் போற்றிப் புகழ்கின்றன.
ஆண்களைவிட எதிலும் குறையாத பெருமை பெற்றவர்கள் பெண்கள் என்பதை வேதம், புராணம், இதிஹாசம் அத்தனையும் வலியுறுத்தும்.
ஆகவே, பெண்களே, சுணக்கமுற்று செயல்படாமல் ஒதுங்கியிருப்பது தவறு. உரிமை இருந்தும் உபயோகப்படுத்தாமல் இருந்துகொண்டு, தனது தவற்றை மறைக்க வேறு காரணம் தேடுவது சரியாகாது.
தற்போது முழு சுதந்திரத்தில் வளைய வரும் பெண்மை, தன்னை உயர்த்திக் கொள்ள வழி இருந்தும் ஆண்மைக்கு
அடிபணிந்து அடிமையாக தங்களை ஆக்கிக்கொள்வது தவறு. உணர்ந்து செயல்படுங்கள் பெண்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

ஆன்மீகத்தில் பெண்களின் மகத்தான பங்கு!