தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கும்பாபிஷேகப் பெருவிழாவும் அதன் தத்துவங்களும் விரிவான விளக்கங்களும்!!!—— பகுதி 1.
மிக நீளமான விளக்கங்களாக இருப்பதானால் இரு பிரிவுகளாக பகிரப்பட்டுள்ளன நண்பர்களே!
கடந்த சில நாட்களாக இலங்கையிலும் பல வெளிநாடுகளிலும் தமிழ் நாட்டிலும் பல கும்பாபிஷேகங்கள் நடைபெறுவதை அறிந்திருப்பீர்கள், தரிசித்தும் இருப்பீர்கள்!
இலங்கையில் அளவெட்டி பெருமாக்கடவை ஸ்ரீ ஆதி துர்க்காம்பாள் ஆலயம், சீரணி ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் , சுன்னாகம் ஸ்ரீ ஹரிஹர ஐயனார் ஆலயம் , கோண்டாவில் சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயம் , கொழும்பு மட்டக்குளி ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அம்பாள் ஆலயம் , ஜெர்மனி சுவேற்றா ஸ்ரீ கனக துர்க்காம்பாள் ஆலயம், கனடா Toronto ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் , இன்னும் இங்கு குறிப்பிடப் படாத ஆலயங்களிலும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல ஆலயங்களிலும் அண்மைய நாட்களில் குடமுழுக்குப் பெற்றுள்ள ஆலயங்களாகும் !
இந்த கும்பாபிஷேகங்கள் பற்றிய பல பதிவுகளை அவ்வப்போது பல நூல்களில் இருந்து திரட்டி தொகுத்து எமது முகநூலில் வெளியிட்டு அவற்றை எங்களின் இணையதளத்திலும் (www.modernhinduculture.com ) சேர்த்துள்ளோம் , எங்கள் இணையதளத்திலும் எங்களால் வெளியிடப்பட்ட நூல்களிலும் அவற்றைப் பார்க்கலாம். அந்த வகையில் இன்னும் மேலதிக தகவல்களுடன் இந்தக் கட்டுரைத்தொகுப்பு வெளியாகிறது நண்பர்களே!!!
கும்பாபிஷேகமும் அதன்போது நிகழ்த்தப்பெறும் கிரியைகள் பற்றிய முழு விளக்கங்களும்!!!
கோயில்களில் கருவறையில் உள்ள தெய்வத் திருவுருவங்கள் இறைவனுடைய உண்மையான திருமேனி (உடல்)களாகவே
கருதப்படுகின்றன. இறைவன் எங்கும்
நிறைந்தவனாக, எல்லாம் வல்லவனாக,
அணுவுக்கணுவாய், அப்பாலுக்கப்பாலாய், ஓருருவம், நாமமின்றி, அகிலத்தை ஆள்பவன்
இறைவன். என்றாலும் உருவமில்லாத ஒரு பொருளை நம் உள்ளத்தில் நிலைநிறுத்தி வழிபாடு செய்ய முடியாது என்ற காரணத்தினால் உருவ வழிபாடு தோன்றியது.
கல்லாலும், மண்ணாலும், உலோகங்களினாலும் செய்யப்பெற்ற இறைவனின் திருவுருவங்களில் இறைவனின் பேரருள் எழுந்தருளச் செய்து அவற்றை இறைவன் வீற்றிருக்கும் ஆலங்களில் பிரதிஷ்டை செய்யப்பெறும் கிரியைகளே கும்பாபிஷேக விழாவாகும்.
மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழா என்பது நினைக்கும் போதெல்லாம் இன்பம் தரவல்லது. கும்பாபிஷேகத்தை அதன் விளக்கங்களை உள்வாங்கி தரிசிப்பது மேலும் இன்பம் தரவல்லது. விரிவான கிரியைகளைக் கொண்டும் பல்வேறு ஆழமான தத்துவங்களின் அடிப்படையிலும் ஆற்றப்பெறும் கும்பாபிஷேகக் கிரியைகளில் மிக ஈடுபாட்டுடன் இணைந்து பணியாற்ற
விரும்பும் ஒவ்வொருவரும் ஓரளவேனும்
அக்கிரியை முறைகளை அறிந்திருப்பது
அவசியம். ஆகவே, மிகச் சுருக்கமாக
கும்பாபிஷேகக் கிரியைகளை எம் அறிவிற்கேற்ப விளக்குவதே இன்றைய இந்த பதிவின் நோக்கம் நண்பர்களே!
பஞ்சபூதங்களாக தோற்றமளிக்கும் இறைவன் ஆகாயவடிவில் எங்கும் பரந்தும், வாயுவாகவும் அக்கினியாகவும் மிளிர்கின்றான். நீராகவும் மண்ணாகவும் அவன் காட்சி கொடுக்கிறான். எனினும் அவனை மண் உருவில் நாம் உணர்தல் இலகுவாக இருப்பதால் மண்ணோடு தொடர்புற்று இருப்பதாகிய செம்பு, பொன் முதலிய உலோகங்களிலும் கல்லிலும் இறைவனை ஆவாஹித்து வழிபடுவதைக் காணலாம்.
தைத்திரிய உபநிஷத் பஞ்சபூத உருவாக்கம் பற்றி “ஆத்மன ஆகாச’: ஸம்பூத:, ஆகாசாத்
வாயு:, வாயோரக்நி:, அக்நேராப: அத்ப்ய: ப்ருத்வீ” என்று அழகாகச் சொல்கிறது. கும்பாபிஷேகக் கிரியைகளிலும்
இப்படியான முறைப்படுத்தப்பெற்ற ஒழுங்கை அவதானிக்கலாம்.
ஆகாய வெளியில் இருந்து காற்றின் துணையுடன் சூர்யாக்னி எடுக்கப்பெற்று, கும்பாபிஷேக யாகசாலையில் அக்னி ஆவாஹனம் செய்யப்பெற்று,
“கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை”
என்று ஞானசம்பந்தப்பெருமான் சொல்வது போல் உரிய வேதாகமப் பிரகாரம் எரியோம்பும் வழிபாடு நடக்கிறது.
அங்கிருந்து கும்பத்தில் உள்ள புனிதநீரிலும் இறைவனை உருவேற்றி செம்மைசால் ஆராதனைகள் நடைபெற்றுப் பின்அங்கிருந்து இறைமூர்த்தத்துடன் “ஸ்பரிஸாஹூதி” என்ற உன்னதமான கிரியையூடாகவும் கும்ப அபிஷேகம் மூலமாகவும் விக்கிரகத்தில் இறையருட் பிரவாகம் ஏற்படுத்தப் பெறுகின்றது.
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை
பரமானந்தமாகிய பரம்பொருளை அர்ச்சகர் மந்திரம், பாவனை, கிரியைகள் மூலம் திருவுருவில் நிலைபெற்றிருந்து சர்வான்மாக்களுக்கும் அருள்புரியும் வண்ணம் செய்தலே மஹாகும்பாபிஷேகம்.
இறைவனை ஆவாஹிக்கும் திருவுருவை நமது தேசத்தில் அநேகமாக, நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பஞ்சபூத சேர்க்கையைத் தெளிவுறக் காட்டும் கருங்கல்லிலும் பஞ்சபூதங்களையும் பிரதியீடு செய்யும் பஞ்சலோகத்திலும் ஆக்குவது வழக்கமாக இருப்பதனை அவதானிக்கலாம்.
முக்கியமாக பேரரசர்கள் கட்டியபெருங்கோயில்களில் ஆலயக் கருவறை விமானத்தையே பொன் வேய்ந்த போதும் மூலமூர்த்தியை கற்சிலையாகவே அமைத்துள்ளமையும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.
“அர்ச்சகஸ்ய ப்ரபாவேன சி’லாபவதி
சங்கர”
என்று இதனையே காட்டுவர். வெறும் சிலையானது அர்ச்சகரின் மந்திர பாவனை மற்றும் கிரியைகளாலேயே சிவமாக…. சங்கரனாக (இறைவனாக) மாற்றம் பெறுகிறது. எனினும் விரிவான கிரியைகளுடன் கூடிய கும்பாபிஷேகத்தை ஆற்றும் போது பக்திக்கு முதன்மை தரப்பட வேண்டியதும் அவசியம்.
பக்தியற்ற வெறும் கிரியைகள் உயிரற்ற உடல் போன்றவை.
ஆகவே, கும்பாபிஷேகத்தில்ஈடுபடக்கூடிய குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், கோயில்சார் அடியவர்கள், கும்பாபிஷேக விழா ஏற்பாட்டுக் குழுவினர், யாவரும் பக்திமயமாக இவ்வழிபாட்டில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். நால்வகைப் பேறும் அருளவல்ல கும்பாபிஷேகம் தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பேறுகளையும் அருளவல்லது கும்பாபிஷேகம். சிவாகமங்கள் கும்பாபிஷேகத்தையும் நான்கு வகையாக வகைப்படுத்திப் பேசும்.!!!
ஆவர்த்தனம், அநாவர்த்தனம், புனராவார்த்தனம், அந்தரிதம் என்பனவே அவை. ஆலயம் இல்லாத இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் அமைத்து, புதிதாக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது அநாவர்த்தனம். முன்பிருந்த ஆலயம் முற்றாக அழிந்து விட்டால் அவ்விடத்தில் மீள ஆலயம் செய்து பிரதிஷ்டை செய்வது ஆவர்த்தனம். ஆலயத்தினுள் கொலை, கொள்ளை முதலியன நடைபெற்றால் அங்கே மூர்த்திகரம் குன்றாமலிருக்க, பிராயச்சித்தமாகச் செய்யப்பெறுவது அந்தரிதம். இத்தகு கும்பாபிஷேகங்கள் “பிராயச்சித்த கும்பாபிஷேகம்” என்ற பெயரிலே கடந்த கால போரனர்த்தங்களின் போது இலங்கையில் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளன. பூஜை, உத்ஸவங்கள் நடைபெறக் கூடிய கோயிலில் திருத்த வேலைகளின் பொருட்டு பாலஸ்தாபனம் செய்து செய்யப்பெறும்
கும்பாபிஷேகம் சம்பிரோக்ஷண
புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம். பொதுவாக இத்தகு கும்பாபிஷேகங்கள் நடைபெறுவதையே பலரும் அறிந்திருக்கக் கூடும்.
பூரணமான மஹாகும்பாபிஷேகம் அறுபத்துநான்கு கிரியைகளைக் கொண்டது என்று ஆகமங்கள் விவரிக்கின்றன. இத்தகு பாரிய முயற்சியாகிய கும்பாபிஷேகம் பல
ஆண்டுகளுக்கு (பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) நடைபெறுவதால் அதனைப் பார்ப்பது, கலந்து கொள்வது, பங்கேற்று சேவை செய்வது பெரும் புண்ணியமாகும்.
கும்பாபிஷேகத்தை பெரியளவில் பாதுகாப்பு, பிரசார, சுகாதார ஏற்பாடுகளுடனும் செய்வது
நல்லது. ஆயினும் இவை கும்பாபிஷேகக் கிரியைகளை குழப்பாததாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விழாக்களுக்கு வருகை தருகிற அரசியற்பிரமுகர்கள் தெய்வகாரியத்திற்கு இடையூறின்றி தரிசனம் செய்து செல்ல முயலவேண்டும். கும்பாபிஷேக நிகழ்வுகளை வர்ணனை செய்வதும் கும்பாபிஷேக மலர் வெளியீடு செய்வதும் கூட வழக்கில் இருந்து வருகிறது.
புனரமைப்பின் போது செய்யப்பெறும்
பாலஸ்தாபனம் சைவாகமக் கிரியைகளை காமிகம், காரணம், போன்ற ஆகமங்களின் படி செய்வது வழக்கம்.
தமிழில் “இளங்கோயில்” என்று போற்றப் பெறுவதும் “தருணாலயங்கள்” என்று சொல்லப் பெறுவதும் பாலாலயங்கள் என்று கூறப்படுகின்றன. கும்பாபிஷேகத்திற்கு முன்னர் கோயில் திருப்பணி செய்யப்பெறும் போது சிறிய பாலாலயம் ஒன்று அமைக்கப்பெற்று மூலவரின் நாமம் தாங்கிய பாலமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். சிற்சில இடங்களில் மூலமூர்த்தியையே பெயர்த்து திருப்பணி வேலை நிறைவுறும் வரையில் பாலாலயத்தில் பிரதிஷ்டை பண்ணி வைத்திருப்பதும் வழக்கம்.அங்கே அப்படிப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வதை
“பாலஸ்தாபன கும்பாபிஷேகம்” என்று கூறுவர்.
பாலஸ்தாபனம் செய்யப்பெறும்போது மூல பிம்பத்திலிருந்து கும்பத்தில் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து, பின் கும்பத்திலிருந்து பாலபிம்பத்தில் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். இதையே “பாலஸ்தாபன கும்பாபிஷேகம்” என்பர். பாலஸ்தாபன காலத்திற்கு ஏற்ப கத்தி, கண்ணாடி, சித்திரம், பாதுகை, ஆயுதம், மரச்சிலை, கல்லுருவம் ஆகியவற்றை பாலபிம்பமாகப் பயன்படுத்திப் போற்றி வழிபடுவர்.
கும்பாபிஷேக ஆயத்தங்களின் போது ஆரம்ப நிகழ்வுகளாக
மேற்கொள்ளப்படும் அவசியமான பூஜைகள் பற்றிய விளக்கம்…….
(1) அனுக்ஞை – (அனுமதி வாங்குதல்) செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் (புரோகிதர்) தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
(2) மஹா சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
(3) பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
(4) கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
(5) வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
(6) பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.
(7) வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு செய்யப்படும் பரிகாரம்}
(மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அந்த பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். {ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் சாந்தி பரிகாரம்}
(9) அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
(10) ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} பூஜைகளை செய்யும் ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.
(11) கும்ப அலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.
(12) கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.
(13) யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
(14) சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரனை வழிபடுதல்.
(15) மண்டப பூஜை – அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
(16) பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.
(17) நாடி சந்தானம் – யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். {இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இணைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்)
(18) விசேஷ சந்தி – 36 தத்துவ தேவதைகளுக்கும் பூஜை செய்வது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது
(19) பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
(20) ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
(21) அஷ்டபந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.
(22) பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.
(23) கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
(24) மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
(25) மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.
தொடர்ச்சி பகுதி 2ல் தொடரும்!
தொகுப்பு:-
சுவாமிநாத பஞ்சாட்சரசர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com


கும்பாபிஷேகப் பெருவிழாவும் அதன் தத்துவங்களும் விரிவான விளக்கங்களும்!!!—— பகுதி 1.