மாங்கல்யம், தாம்பூலத்தின் ( வெற்றிலை) சிறப்பு பற்றி அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மாங்கல்யம், தாம்பூலத்தின் ( வெற்றிலை) சிறப்பு பற்றி அறிவோம்!!!
வாக்குறுதிக்கு சாட்சி தாம்பூலம். அதை சம்ஸ்காரமாக மாற்றி, மங்களகரமான திருமண ஆரம்பத்தை மங்களப் பொருளான தாம்பூலத்தின் மூலம் ஆரம்பிக்கவேண்டும் என்பது தர்ம சாஸ்திரத்தின் வழிகாட்டல்.
தாம்பூலம் ( வெற்றிலை) என்பது நமது பண்பாட்டின் அடையாளம். திருமணத்தை உறுதிசெய்ய நிச்சயத் தாம்பூலம். திருமணத்தை நிறைவு செய்ய முகூர்த்த தாம்பூலம். விருந்தினரின் வாய் மணக்க புக்தத் தாம்பூலம். தெய்வ வழிபாட்டில் உபசரிக்க தர்ப்பூரத் தாம்பூலம். மக்கள் செல்வம் பெருக தானத் தாம்பூலம். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கல தாம்பூலம். நவராத்திரியில் நங்கையர்களுக்கு கொலுத் தாம்பூலம். இப்படி, வரவேற்பிலும், கெளரவிப்பதிலும், பிரிவு உபசாரத்திலுமாக எங்களுடைய கலாசாரத்தில் எங்கும் தாம்பூலம்… எதிலும் தாம்பூலம்தான்!
இனி மாங்கல்யத்தின் ( தாலி) மகிமையை அறிவோம்!
குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு தங்க அணிகலன்களை அணிவிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம். வேதமும் தங்கத்தைத் தரித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் (தஸ்மாக் சுவர்ணம் ஹிரண்யம் தார்யம்). அதன்படி அணிவிக்கப்படுவதே தாலி. தங்கம் மங்கலப் பொருட்களில் ஒன்று. தங்கத்தாலான தாலியும் மங்களகரமானது. மங்களம் அளிப்ப தால் அதற்கு, ‘திருமாங்கல்யம்’ என்று பெயர்.
திருமாங்கல்யதாரணம் என்பது திருமணத்தில் சிறப்பான ஒரு பகுதி. தன் வாழ்க்கைக்கு-முழு மகிழ்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அந்தப் பெண்ணுக்குத் திருமாங்கல்யத்தை அணிவித்து மகிழ்கிறான் அவன். அவனது மகிழ்ச்சிக்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது திருமாங்கலயம்.
என் வாழ்க்கைக்கு – மகிழ்ச்சிக்கு தேவையான திருமாங்கல்யத்தை உனக்கு அணிவிக்கிறேன். நீ அழகின் வடிவம். உன் அழகுக்கு அழகு சேர்க்கிறேன். நீ நீடுழி வாழ வேண்டும்’ என்கிற கருத்தை வலியுறுத்தும் மந்திரம்தான் எல்லோருக்கும் தெரிந்த ‘மாங்கல்யம் தந்துனானேன…’ என்பது. உலகின் தாயான பார்வதிக்கு உலகின் தந்தையான பரமேஸ் வரன் திருமாங்கல்யத்தை அணிவித்தார் என்ற தகவலை ‘காமேசபந்த மாங்கல்ய சூத்ரசோபித சுந்தரா’ எனும் தொடரின் மூலம் அறியலாம். திருமாங்கல்யத்தின் அடையாளம் மூன்று கோடுகளாக அம்பிகையின் கழுத்தில் பதிந்திருப்பதாக ஆதிசங்கரர், செளந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார்.
மங்கல தேவதா’ என்பது லட்சுமியின் பெயர். மங்கள தேவதாயை நம: என்று திருமாங்கல்யத்தை வழிபடுகிறோம். ‘மஹா விஷ்ணு ஸ்வரூபஸ்ய வரஸ்ய’- கல்யாணம் பண்ணிக் கொள்பவனை உலகைக் காப்பாற்றும் விஷ்ணுவாக பாவிக்கிறோம். லட்சுமியின் இருப்பிடமான நிவாஸனாகவும், கெளரிக்குப் பாதி உடலை அளித்த பரமேஸ்வரனாகவும் தம்பதியைக் கொண்டாடுவது உண்டு. தெய்வத் தம்பதி போன்று இணைந்து வாழ, மங்கள சூத்திரத்தின் இணைப்பு அவசியம். தாலிகட்டி இணைப்பை உறுதிப்படுத்துகிறார்கள் தம்பதிகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர் . www.modernhinduculture.com
மாங்கல்யம், தாம்பூலத்தின் ( வெற்றிலை) சிறப்பு பற்றி அறிவோம்!!!
Scroll to top