முன்னோர் வழிபாடு!!!

September 28 
தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
முன்னோர் வழிபாடு!!!
‘தாயை வழிபடு’, ‘தந்தையை வழிபடு’ என்று கூறி, முன்னோர் ஆராதனைக்கு முன்னுரிமை அளிக்கிறது வேதம் (மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோபவ). ஆமாம்! முன்னோர் ஆராதனையை அறமாகச் சொல்கிறது வேதம்.
மனிதன் பிறக்கும்போது மூன்று கடன்களுடன் (கடமைகள்) பிறக்கிறான் கல்வியை ஏற்று நிறைவு செய்தால் ரிஷிகள் கடன் அடைந்துவிடும். வேள்வியில் இணைந்தால் தேவர்கள் மகிழ்வார்கள். குழந்தைச் செல்வத்தை ஈன்றெடுத்தால் பித்ருக்கள் (இறந்த முன்னோர்) கடன் தீர்ந்துவிடும் என்கிறது சாஸ்திரம் (ப்ரம்ச்சர்யேண ரிஷிப்ய: யஞ்ஞேன தேவேப்ய: ப்ரஜயாபித்ருப்ய: ய: புத்ரீ…). ரிஷிகள், தேவர்கள், முன்னோர்கள் ஆகியோர் தினம் தினம் வழிபட வேண்டியவர்கள். அனுதினமும் நீரை அள்ளி அளித்து இந்த மூவரையும் வழிபடுவது உண்டு (ப்ரம்ம யக்ஞம்).
மாமரத்தின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாம்பழத்தின் கொட்டை, மற்றுமொரு மாமரத்தை உற்பத்தி செய்து சங்கிலித் தொடர் போல் மாமரத்தின் பெருக்கத்தை நிறைவு செய்கிறது.
தகப்பனும் தனது ஜீவாணுக்கள் வாயிலாக மகன்களை ஈன்றெடுத்து, வேதம் சொல்லும் அறத்தை நடைமுறைப்படுத்தி உலக இயக்கத்திற்கு ஒத்துழைக்கச் செய்கிறார். நம்மை ஈன்றெடுத்து வளர்த்து, திருமணத்தில் இணையவைத்து, பரிணாம வளர்ச்சியில் தென்படும் பருவங்களுக்கு உகந்த வகையில் தேவைகளை நிறைவேற்றி… இவ்வாறு நமக்குச் செய்யும் பணிவிடையையே தமது வாழ்வின் நோக்கமாக ஏற்றுக்கொண்டவர்கள் நம் முன்னோர். பூத உடலைத் துறந்து தெய்வமாக விளங்கும் அவர்களை ஆராதிப்பது நமது கடமை.
பிறந்த மனிதன் தினமும் இருவேளை உணவு உட்கொள்கிறான். முன்னோர்களுக்கு, அவர்கள் பூத உடலைத் துறந்து தெய்வமான நாளில், அவர்களின் நினைவோடு அறுசுவை உணவை அன்னதானமாக அளித்து கடமையை நிறைவேற்ற வேண்டும் (ப்ரத்யப்தம் பூரி போஜனாத்). தான் இறந்த பிறகும், தனது உடலைத் துறந்து சென்ற நாளில், தமது குடும்பம் செழிப்பாக இருக்கும் பொருட்டு அன்னதானம் அளிக்கச் சொல்லி விடைபெறுகிறார் தகப்பன். இறந்தும் அவர்கள் நம் நினைவில் இருக்கிறார்கள். பித்ரு லோகத்தில் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது எண்ணத்தை அறிந்து, அவர்களின் நினைவு நாளில் அன்னதானம் செய்ய வேண்டும். அந்த அறம் அவன் குடும்பத்தைச் செழிப்பாக்கிவிடும்.
தன்னலமற்ற நம் முன்னோர்களை வழிபடுவது சிறந்த அறம். ‘என் மனதில் பதிந்து விளங்கும் முன்னோர்களே! தங்களைப் பணிவிடை செய்ய விழைகிறேன். உங்களால்தான் நான் நல்ல தகப்பனைப் பெற்றவனாகப் பெருமை அடைகிறேன். எனது இந்த விருந்தோம்பல் தங்களை நல்ல புதல்வனைப் பெற்றவனாக மகிழவைக்கும்’ என்ற தகவல் வேதத்தில் உண்டு. (ஆகந்தபிதர: பித்ருமாஹைப் யுஷமாபி:பூயாஸம். ஸுப்ரஜஸோமயாயூயம் பூயாஸ்த). தகப்பனின் பூத உடல் நெருப்பில் மறைந்தாலும், தனயனின் மனதில் அவர் குடிகொண்டிருப்பார். அவ்வாறு மனதில் பதிந்த தகப்பனை நினைத்து ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் எள்ளும் தண்ணீரும் அளிக்கவேண்டும். ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களி லாவது அவர்களுக்கு நீரும் எள்ளும் அளிக்க மறக்கக் கூடாது.
அவர்களுடைய நினைவு முன்னேற்றத்தின் முன்னோடி. அவர்களுக்கான பணிவிடை இணையாத எந்த ஸம்ஸ்காரமும் இல்லை. பதினாறு வகை ஸம்ஸ்காரங்களிலும் அங்கமாக முன்னோர் ஆராதனை இருக்கும். அதற்கு நாந்தீ சிராத்தம் என்று சிறப்புப் பெயர் உண்டு. நாந்தீ என்ற சொல்லுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சி (ஸமிருத்தி) என்று பொருள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின் இதழ் ஆசிரியர் . www.modernhinduculture.com
No photo description available.
முன்னோர் வழிபாடு!!!
Scroll to top