தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம் பற்றிய மகத்துவங்களை அறிவோம்!!!
பங்குனி மாதம், பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். ‘பலி விழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்’ என்று பங்குனி உத்திரத்தைப் போற்றுகிறார் திருஞான சம்பந்தர். ‘பலி’ என்றால் செழித்தல், கொடுத்தல், விசாரித்தல் என்றெல்லாம் பொருள் உண்டு. ஆக… பெற்ற பயனை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழும் பலி விழாவாகவும் திகழ்ந்துள்ளது பங்குனி உத்திரம்.
எனவே, இந்த நாளில் எல்லோருக்கும் அன்னமிட்டு பசிப்பிணியைப் போக்குவார்களாம் பக்தர்கள். நாமும் அப்படியே பலரின் பசியைப் போக்குவோம்!
இந்தத் திருநாளை, ‘கல்யாண விரத நாள்’ என்றும், தெய்வத் திருமண நாள் என்றும் போற்றுவர். திருமணத் தடை உள்ளவர்கள், பங்குனி உத்திரத்தன்று முறைப்படி விரதம் கடைப்பிடித்து, தம்பதி சமேதராகத் திகழும் தெய்வங்களை பூஜித்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்குமாம்.
தெய்வத் திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன என்கின்றன புராணங்கள். ஆண்டாள், ஸ்ரீரங்கநாதர்; தேவேந்திரன்- இந்திராணி; பிரம்மன்- கலைவாணி ஆகியோரது திருக்கல்யாணம் நிகழ்ந்ததும் இந்தப் புனித நாளில்தான்.
ஸ்ரீராமன்-சீதாதேவி; லட்சுமணன்- ஊர்மிளை; பரதன்- மாண்டவி; சத்ருக்னன்- சுருதகீர்த்தி ஆகியோரது திருமணம்… பங்குனி உத்திர திருநாளில், மிதிலை நகரில் வைத்து நடைபெற்றதாம்.
மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஸ்ரீமீனாட்சி தேவியை மணந்து ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராக தரிசனம் தந்ததும் பங்குனி உத்திர திருநாளில்தான்.
முருகக் கடவுளுக்கு உகந்த திருநாள்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. இந்திரனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் செய்துகொண்டதும் வள்ளிக் குறத்தி அவதரித்த பெருமையும் பங்குனி உத்திரத்துக்கு உண்டு.
பங்குனி உத்திரத்தன்று லிங்க வடிவ சாஸ்தாவை வழிபடுவது மிகவும் விசேஷம் என்று ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்!!!
முருகப்பெருமான், சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். இந்த நன்னாளை விரத நாளாக அனுஷ்டித்து முருகனை வழிபட்டால், கன்னியருக்கு விரைவில் திருமணம் நடக்கும். மணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.
உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன்; உத்திர நட்சத்திரம் பூரணச் சந்திரனுடன் பொருந்தும் நாள் பங்குனி உத்திரம். சூரியன்- சந்திரன் இருவரது தொடர்பும் பெற்றிருப்பதால், இந்தத் திருநாளுக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
பங்குனி உத்திர விரதத்தைக் கடைப்பிடித்த ஸ்ரீமகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் மார்பில் நிரந்தர இடம் பெற்றாள். பிரம்மன்- சரஸ்வதி, தேவேந்திரன்- இந்திராணி ஆகியோருக்கும் பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டதால், திருமணம் கைகூடியதாகப் புராணங்கள் சொல்கின்றன.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன ஆன்மீக மின் இதழ் ஆசிரியர்.www.modernhinduculture.com
மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம் பற்றிய மகத்துவங்களை அறிவோம்!!!