தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? அதன் பலன்கள் என்ன?
தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கல சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்து கொண்டிருக்கும்.
ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கிறது.
இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தீபம் ஏற்றுகிறோம்.
சந்தியா காலங்களான அதிகாலை, மாலை நேரங்கள் பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக நம் முன்னோர் கருதி வந்ததால் அந்த சமயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது நமது வழக்கமாக இருக்கிறது.
எண்ணெய், திரி இரண்டும் ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாகக் கருதுகிறார்கள். தீபம் ஒளிரும் போது எண்ணெயும்,
திரியும் சிறிது சிறிதாக அழிவது போல், ஞானத்தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும் ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்றும் தீபம் மூலம் உணர்த்தப்படுவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
மேலும் தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே ஒளிர்கிறது.
அது போல உண்மையான ஞானமும் நம்மை மேலான எண்ணங்களுக்கே தூண்டுகிறது. அந்த ஞானம் நமக்கு அமையட்டும், அந்த ஞான ஒளி நம் வாழ்க்கைப் பாதையில் ஒளிவீசி வழிகாட்டட்டும் என்ற பிரார்த்தனையோடு நாம் தீபம் ஏற்றுகிறோம்.
சடங்குகள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வைப்பதும் அந்த ஞானாக்னியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள்புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.
இனி தீபம் ஏற்றும் போதும், ஏற்றிய தீபத்தைக் காணும் போதும் இந்த அர்த்தத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!!!
தொகுப்பு:- சுவாமிநாத பஞ்சாட்சரசர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? அதன் பலன்கள் என்ன?