வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவோம்.
அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். இல்லத்துத் திருஷ்டியெல்லாம் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.
விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த பூஜையாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விளக்கேற்றுவது என்பது முதலில் செய்யப்படுகிற வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.
பொதுவாகவே தினமும் விளக்கேற்றச் சொல்கிறது சாஸ்திரம். அதுவும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குறிப்பாக, செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றி நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும். அதேபோல், எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் விளக்கேற்ற வேண்டும். ஏதேனும் ஒரு உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளவேண்டும். வீட்டில் நாம் சமைக்கும் உணவை என்றாலும் ஆண்டவன் முன் வைத்து வழிபடலாம். விசேடமாக எதுவும் தினமும் தயாரிக்க வேண்டியதில்லை.
அதேபோல், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலானவற்றை பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.
செவ்வாய்க்கிழமை என்பது அம்பாளுக்கு வழிபாடு செய்யும் நாள். மேலும் முருகக் கடவுளுக்கு உகந்த நாள். அம்பாள் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.
அதேபோல், வீட்டில் வெள்ளி விளக்கு இருந்தால், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெள்ளி விளக்கு ஏற்றி வழிபடுங்கள். அம்மனுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த செந்நிற மலர்ககளைச் சூட்டி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். நிச்சயம் இறைவன் அருள் பாலிப்பான்!
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ( E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization
www.modernhinduculture.com
வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவோம்.