தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
பிள்ளையாரின் அவதாரங்கள் குறித்து பார்க்கவ புராணம் விரிவாக விளக்குகிறது. அனுக்கிரகம் நிறைந்த ஆனைமுகனின் சில அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும் அறிவோம்:
வக்ரதுண்டர்: காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டுவந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரைத் தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர் துராசுரனை அழித்து அருள்புரிந்தார்.
சிந்தாமணி கணபதி: அபிஜித் என்ற அசுரனுக் கும் குணவதிக்கும் இறையருளால் பிறந்த கணன் என்பவன், கபிலரை துன்புறுத்தி அவரிடம் இருந்த சிந்தாமணியைக் கவர்ந்தான். இதனால் வருந்திய கபிலர் விநாயகரை மனமுருகி வழிபட்டார். அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.
கஜானனர்: பார்வதி பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன.
விக்ன விநாயகர்: வரேண்யன் புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி விக்னங்களை அகற்றியவர் விக்ன விநாயகர். இவர், வரேண்யன் என்பவனுக்கு உபதேசித்ததே கணபதி கீதை ஆயிற்று.
மயூரேச கணபதி: சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடித்து வழிபட்ட பார்வதிதேவியிடம் அவதரித்து, மயில் வடிவினனான ஸிந்து என்ற அசுரனை அழித்து, அவனையே வாகனமாகக் கொண்டவர் இந்த விநாயகர்.
பாலசந்திரர்: தேவர்களை அடக்கியாண்ட அநலன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கி னார். அதனால் உண்டான வெம்மை நீங்க, மிக குளிர்ச்சியான சந்திரனை நெற்றியில் அணிந்து பாலசந்திரர் என்று பெயர் பெற்றார்.
தூமகேது: புகை வடிவான அசுரன் ஒருவனை அழிப்பதற்காக அவதரித்தவர் தூமகேது விநாயகர். மாதவன், ஸுமுதா என்ற அரச தம்பதியருக்குப் பிள்ளையாகத் தோன்றி, தூம கேதுவை வதைத்தார் இந்த பிள்ளையார்.
கணேசர்: பலி என்னும் அரக்கனைக் கொல்ல கணங்களுக்குத் தலைவனாக வந்து வெற்றி கண்டதால் கணேசர் என்ற திருப்பெயர் பெற்றார் பிள்ளையார்.
கணபதி: பார்வதி பரமேஸ்வரர் யானையின் சித்திரத்தைப் பார்த்துக் களிக்கும்போது அவதரித்தவர் கணபதி.
மகோற்கடர்: காச்யப முனிவரின் பிரார்த்தனையால், அதிதியிடம் பிறந்தவர் மகோற்கடர். தேவாத்த நாராத்ரர்கள் இவரால் சம்ஹாரம் செய்யப்பட்டனர்.
துண்டி கணபதி: துராஸதன் என்ற அரக்கனை அழிக்க, உமையவளின் திருவருளால் அவதரித்தவர் துண்டி கணபதி.