கந்த சஷ்டி – சூர சம்ஹாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

கந்த சஷ்டி – சூர சம்ஹாரம்

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தக்கன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உரு வாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான்.

ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவ த்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும்; சிவசக்தி அன்றி வேறொரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எ ல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக் கூடிய அதோ முகம் (மனம்) என்ற ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.

அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். தன் மைந்தர்களான அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன் றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ‘ஆறுமுகசுவாமி’ என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது.

இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம் புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர்.

மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்- சிவமே ஆறுமுகம் என்பதுண்டு.
முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

நன்றி- ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து:

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
கந்த சஷ்டி – சூர சம்ஹாரம்
Scroll to top