தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஐயப்ப விரத காலமான இந்த நேரத்தில் ஐயப்ப மகிமைகளை கூறி வருகிறோம். சில தினங்களுக்கு முன் சாஸ்தாவின் எட்டு அவதாரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு வருகிறது. இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும் நண்பர்களே.
சாஸ்தாவின் அவதாரங்கள் பற்றிய எங்கள் பதிவை பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் பார்த்திருப்பதாகவும் இருபத்தைந்து நண்பர்கள் அதை share பண்ணியதாகவும் முகநூல் நிர்வாகம் அறியத் தந்துள்ளது நண்பர்களே. அனைவர்க்கும் எங்கள் நன்றிகள்.
ஆத்மாவைத் தெரிந்து கொள்ளாத, அல்லது தெரிந்து கொள்ள மறுக்கிற பௌதிக அறிவாம் அஞ்ஞானமே மகிஷன் என்ற அசுரனாய்த் தோன்றிற்று. அவனை ஞானாம்பிகையான பதினெண் கரங்களுடைய அன்னை துர்கா மஹாலக்ஷ்மி வதம் செய்தாள். அவளையே “மகிஷாசுர மர்த்தினி” என்று போற்றிக் கொண்டாடி நவராத்திரியில் விழா எடுக்கிறோம்.
இந்த அஞ்ஞானத்திற்கு ஒரு சகோதரி உண்டு! தன்னைத் தானே தெரிந்து கொள்ளாமல் “நான் பெரியவன்! எனக்கு எல்லாம் தெரியும்!” என்று நெஞ்சை நிமிர்த்துகிற போலித்தனம் இருக்கிறதே, அகங்காரம், இதைத் தான் அஞ்ஞானத்தின் சகோதரியாகச் சொல்லியிருக்கிறது. இந்த அகங்காரமே ஒரு வடிவமெடுத்து மகிஷனின் சகோதரியாக, மகிஷியாகப் பிறந்தது.
மகிஷி முற்பிறப்பில் தத்த மஹரிஷியின் பத்னியான லீலாவதியாக இருந்து, அவர்தம் ஆத்மிக கொள்கைகளுக்கு மாறாக நடந்ததால் மகிஷ முகத்துடன் அசுரகுலத்தில் பிறக்கும் சாபம் பெற்றாள்.
பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, ஹரி-ஹரர்களாகிய இரு புருஷ சக்திகளுக்குப் பிறந்து, பனிரெண்டு வருடம் பிரம்மச்சரியம் அனுஷ்டித்த ஒரு தேவகுமாரனால் மட்டுமே தனக்கு முடிவு வரவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றாள்.
மகிஷவதம் நிகழ்ந்ததற்குத் தேவர்களே காரணம் என்று அறிந்து அவர்களை வாட்டி வதைத்தாள். இதனால் பெரும் இடர்களுக்கு உண்டான தேவர்கள் பூதநாதனான ஸ்ரீ தர்ம சாஸ்தாவை தமக்கு விமோசனம் அளிக்க வேண்டித் துதித்து வந்தனர்.
ஹரி-ஹரர் இருவர் சக்தியும் இணைந்து ஹரிஹரசுதனாகத் தர்மசாஸ்தாவின் மணிகண்டன் அவதாரம் நிகழ்ந்துவிட்டது. பனிரெண்டாண்டுகள் பிரம்மச்சரிய விரதம் பூண்டுப் பந்தள அரண்மனையில் வசித்து வந்தார் மணிகண்டன்.
–மிகுதி தொடரும் நண்பர்களே.