தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நண்பர்களே ஐயப்ப பெருமானின் மகிமைகளை பார்த்து வருகிறோம். இன்று அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பகுதி வெளியாகிறது.
ஐயப்ப அடியார்கள் இருமுடி தரிக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? விளக்கம் என்ன? தொடர்ந்து பாருங்கள்.
மணிகண்டன் பந்தளத்திற்கு வந்த பிறகு, அரசி கோப்பெருந்தேவி கருவுற்று இராஜராஜன் என்ற மகனைப் பெற்றாள். இராஜசேகரன் மணிகண்டனுக்கு முடிசூட்ட விழைந்தான். ஆனால் குள்ளநரிக் குணம் படைத்த ஒரு மந்திரியோ இராஜராஜனுக்கு முடிசூட்டிப் பின் அவனிடமிருந்தும் அதிகாரத்தைப் பறித்துத் தானே மன்னனாகத் திட்டமிட்டான்.
அதனால் அவன் தன் சதிவேலைகளில் மகாராணியையும் சேர்த்துக் கொண்டு, அவள் புத்திரன் மணிமுடி தரிக்க வேண்டுமெனில் மணிகண்டனை அப்புறப்படுத்த அவள் உதவ வேண்டும் என்று கூறினான்.
தாய்ப்பாசத்தால் ஒப்புக்கொண்ட அரசி, மந்திரியின் துர்ப்போதனைக்கேற்ப தனக்குக் கடுமையான தலைவலி கண்டதாக நடித்தாள்.
புலிப்பாலருந்தினாலே இத்தலைவலி நீங்கும் என்று மந்திரியால் தூண்டப்பெற்ற வைத்தியர் மன்னனிடம் உரைக்க, அன்னைக்குப் புலிப்பால் கொண்டுவர ஐயப்ப சுவாமியே கிளம்புகிறான்.
அருமை மைந்தன் துஷ்ட மிருகங்களும் அசுரர்களும் வாழும் வனம் செல்கிறானே என்று வருந்திய இராஜசேகரன், அவனுக்காய்ச் சிவனை வேண்டிக் கொண்டு, சிவனுக்கு நிவேதனம் செய்த ஒரு தேங்காயையும், காட்டுவழி செல்வதற்கு உகந்த உணவுப் பொருட்களையும் இருமுடியாகக் கட்டிக் கொடுத்தான். அப்பனுக்கே தந்தையாக விளங்கியவனின் அன்புச் செயலைப் போற்றுமுகமாவே சபரிமலை செல்லும் ஐயப்பன்மார்கள் யாவரும் இருமுடி தரிக்கிறார்கள்.
இருமுடியேந்திக் காட்டினுள் வந்த மணிகண்டனை மும்மூர்த்திகள் கட்டளைப்படித் தேவரும் முனிவரும் துதித்துப் பொன்னம்பலமேடு எனுமிடத்தில் சிம்மாசனத்தில் இருத்தி, மகிஷியின் வரலாற்றையும், அவளால் ஏற்பட்ட துயரங்களையும் அவன் சந்நிதியில் தெரிவித்துக் கொண்டார்கள்.
மிகுதி, நாலாம் பகுதி நாளை தொடரும் நண்பர்களே!!!