தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
இருமுடியுடன் ஐயப்ப தரிசனம்!
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா
“நோன்பிருந்து, புலன் அடக்கி உள் அன்போடு ஐயனை அழைத்தால்
அஞ்சேல் என அருள் தருவான் அருகில் வந்து “
சபரிமலை ஆலயம்: கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. பெரும்பான்மையான யாத்திரிகர்கள் இன, மத பாகுபாடு இன்றி விரும்பிச் சென்று பிறவிப்பிணி போக்கும் ஐயனை தரிசித்து முக்தி என்னும் பெரும் பேற்றை நாடி வந்து கூடும் ஒரு முக்கிய தலமாக திகழ்கின்றது,
சபரிமலை செல்லும் பாதை அரண்யத்தின் இடையில் அமைந்திருப்பதால் அங்கு செல்வது கடினமாக இருந்தாலும், ஐயப்பசாமிமார்கள் நோன்பிருந்து துளசி, உருத்திராக்க மாலை அணிந்து, ஐயனை வேண்டி ஐயப்ப சரணங்கள் சொல்லிக்கொண்டு மிக ஆனந்தமாக கடந்து செல்கிறார்கள்.
எல்லோரையும் ஐயப்பனாகவே காண்கிறார்கள். சபரிமலை யாத்திரை செல்லும்போது இருமுடி அணிந்து செல்வார்கள்.
“இருமுடி” என்பது, இரண்டு முடிச்சுகளாகும். அதன் ஒரு முடிச்சில் இறைவனை அபிழ்ஷேகித்து பூஜிப்பதற்காக; உரித்த தேங்காயில் பெரிய கண்ணை துளையிட்டு அதனுள் இருக்கும் இளநீரை வெளியேற்றிய பின் அதனுள் சுத்தமான பசு நெய் நிரப்பி ஒழுகாது இருப்பதற்காக மெழுகினால் முத்திரையிடப்பெற்ற தேங்காயும், அபிஷேகத் திரவியங்களும் இருக்கும். தேங்காயாகிய முக்கண்ணன்) சிவனுக்குள் நெய்யாகிய நாராயணமூர்த்தி நிறைந்திருப்பதனால், நெய் நிரப்பிய தேங்காய் ஹரிஹர புத்திரன் ஐயப்பனைக் குறிக்கின்றது.
நெய் இல்லாமல் இரு முடி இல்லை. நெய்யே பிரதானம். சுத்தமான பசுப் பாலில் இருந்து வெண்ணெய் பின், நெய்யாக வரும்போது பரிசுத்தமாக பலகாலம் பழுதடையாமல் இருக்கும். அது போல இந்த விரதம் இருப்பவர்கள் இந்த நெய்யப் போல , நற்குணங்களுடன் பல்லாண்டுகாலம் வாழவேண்டும் என்றும் இந்த நெய் உணர்த்துகிறது!!!
வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து இருந்து, பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ளும் இந்த சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.