தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
தை மாதம் பிறக்க உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்!
உத்தராயன காலத்தை தேவர்களின் பகல் பொழுது என்றும், தக்ஷிணாயன காலத்தை தேவர்களின் இரவுப் பொழுது என்றும் சொல்வர்.
நம் சநாதன தர்மத்தில், ஒவ்வொரு காலமும் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ‘உத்தரம்’ என்றால் ‘வடக்குத் திசை’ என்றும், ‘பதில்’ என்றும் சம்ஸ்கிருதத்தில் அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வகையில், நம் சந்தேகங்களை அனுபவத்தில் உணர்ந்து தெளிவுபடுத்துகிற சிறந்த காலம் எனும் அடிப்படையில் `உத்தராயனம்’ என்று ரிஷிகள் பெயர் சூட்டியுள்ளார்களோ என்னவோ?!
`கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!’ என்கிறது கீதை. இந்தத் தத்துவத்துக்குள் ஓரு விஷயம் உள்ளார்ந்து கிடப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, ‘கடமையைச் செய்தால், அதற்கான பலன் கிடைத்தே தீரும்!’ என்பதுதான் அது.
ஆடி தொடங்கி மார்கழி வரையிலும் நாம் செய்யும் வழிபாடுகளுக்கும், உலக ஆதாயம் சார்ந்த நமது செயல்பாடுகளுக்கும் பலன் கிடைக்கத் தொடங்கும் காலம் தை மாதம் என்று சொல்லலாம். உதாரணத்துக்கு ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் உழவர் பெருமக்கள், அறுவடையின் பலனைப் பெறுவது தை மாதத்தில்தான்.
இதையொட்டியே, நம் பெரியோர்கள் `தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று சொல்லி வைத்தார்கள் போலும்.
பலனை நாம் அனுபவிப்பதோடு, அதை எல்லா உயிர்களுக்கும் பகிர்ந்தளித்தும் மகிழ வேண்டும் எனும் உயர்ந்த தத்துவத்தை உணர்த்தும் வகையிலேயே திகழ்கிறது, தைப் பொங்கல் திருநாள்.
சூரியனை தைபொங்கல் தினத்தில் மட்டுமல்ல. தினமும் வழிபடலாம். ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம: ஓம் பாஸ்கராய நம! என்று சொல்லி ஆதவனை வழிபட்டு பலன் பெறுவோம்..
–நன்றி ஷண்முக சிவாச்சாரியார்.
தகவல் பகிர்வு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.