தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர்கண்ட சிறந்த நெறிகளில் குறிப்பிடத்தக்கவை விரதங்கள். `வரிக்கப்படுவது விரதம்’, ‘உடலளவு விரதம்’, `காப்பது விரதம்’ என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு. பரமனிடத்தில் பக்திகொண்டு தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள விரதங்களைப் போன்று வேறெதுவும் துணைபுரிவதில்லை. இப்படி, இறைவனுடன் நம்மைப் பிணைக்கும் அற்புத விரதங்களில் ஒன்று கந்தசஷ்டி விரதம்.
சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெறவும், குழந்தை வரம், கல்விப் பேறு, தேக ஆரோக்கியம், பொருளாதார வளம் முதலான சகல வரங்களைப் பெற்று மகிழவும், மனதில் வரிக்கும் நற்காரியங்கள் அனைத்தும் கந்தனருளால் நல்லபடி நிறைவேறவும் வேண்டி நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒப்பற்ற விரதம்.
ஸ்ரீசுப்ரமணிய கடவுளுக்குரிய விரதங்களில் மிகவும் மகத்தானது கந்தசஷ்டி விரதம் என்பது வசிஷ்டரின் திருவாக்கு.
திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், சண்முகக்கவசம், குமார ஸ்தவம், முதல்வன் புராண முடிப்பு, கந்தர்கலி வெண்பா, கந்தசஷ்டி கவசம் போன்ற பாமாலைகளைப் பாடி இரவிலும் முருகப்பெருமானைப் பூஜிக்க வேண்டும்.
எந்த முறையில் விரதம் கடைப்பிடிப்பதாயினும் முருகப்பெருமானுக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் உணர்வுடன் பக்தி செய்து வழிபடுவதால், வந்த வினைகளும் வரவிருக்கும் வல்வினைகளும் நம்மைவிட்டு விலகியோடும். கந்தனருளால் நம் வாழ்க்கைச் செழிக்கும்.