தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
பதினாறு சம்ஸ்காரங்கள் அல்லது சோடஷ சம்ஸ்காரங்கள்
கர்ப்பதானம்– கருவுறுதலுக்கு சமய அங்கீகாரம் அளிக்கும் சடங்கு இது. இந்தச் சடங்கு குறித்து வேறுபட்ட பல கருத்துகள் உண்டு. புதிதாய் மணமான தம்பதியர் முதல்முறை ஒருவரையொருவர் கூடுவதற்கு முன் சொல்ல வேண்டிய மந்திரங்களின் தொகுப்பு இவை என்று சிலர் கருதுகின்றனர், வேறு சிலர், இந்த மந்திரங்களைக் முதல் சம்போகத்தின்போது சொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், ஓவ்வொரு முறை கலவியில் ஈடுபடும்போதும் கணவன் இந்த மந்திரங்களை ஜபிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஹோமம் வளர்த்து ஆகுதி அளித்து இந்த மந்திரங்கள் பிரயோகிக்கப்படுவது வழக்கம் என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியானாலும், பாலுறவு அனுபவத்தை ஒரு புனிதச் செயலாக இந்தச் சடங்கு துவக்கி வைக்கிறது.
பும்சவனம் – கருவில் உள்ள குழந்தையை இவ்வுலகில் பிணைத்து, அதற்கு ஊட்டம் அளிக்கும் நோக்கத்தில், கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதத்தில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கில் கருத்தரித்த அன்னை, வேத மந்திரங்களைக் கேட்டபடியே ஒரு மணி பார்லியையும், இரு மணி கருப்பு எள்ளையும் சிறிது தயிரையும் உட்கொள்கிறாள். அரச மர வேரைக் குழைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்ட சிறிது பாலையும் வலது நாசிக்குள் பூசுவதும் உண்டு.
சீமந்தம்– கர்ப்ப காலத்தின் முக முக்கிய கட்டத்தில் தாயையும் கருவையும் பாதுகாக்கச் செய்யப்படும் சடங்கு இது. வழக்கமாக, கர்ப்ப காலத்தின் நான்காம் மாதத்தில் வளர்பிறை நாட்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சந்திரன் பிரவேசிக்கும்போது இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது. ஓம் என்ற பிரணவ மந்திரம், அல்லது பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் ஒலிக்க, ஒன்றாய்க் கட்டப்பட்ட மூன்று தர்ப்பை புற்களைக் கொண்டு அன்னையின் உச்சியில் வகிடெடுத்தல் இந்தச் சடங்கு.
ஜாடகர்மம்– குழந்தை பிறந்தபின் ஒன்றை நாட்களுக்குள் நிகழ்த்தப்படும் சடங்கு இது. பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவுவது உண்டு.
நாமகரணம்– இது குழந்தைக்கு பெயர் சூட்டும் சடங்கு. பஞ்சாங்கத்தின் துணையோடு குழந்தைக்குப் பொருத்தமான பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன்பின், அந்தப் பெயரை, தாயின் வலது செவியில், தந்தை மும்முறை கூறுகிறார். தாய், குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பெயரை மும்முறை கூறுகிறார். குழந்தை பிறந்த நாள், அல்லது அது பிறந்த பத்தாம் அல்லது பன்னிரண்டாம் நாள் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம்.
நிஷ்க்ரமணம்– குழந்தை முதல் முறை வீட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும்போது செய்யப்படும் சடங்கு. இதை நான்காம் மாதம் செய்வது வழக்கம்.
அன்னப்பிரசனம்– குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபின் செய்யப்படும் சடங்கு இது. சமைக்கப்பட்ட உணவு, முதல் முறையாகக் குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. வேக வாய்த்த அரிசியை நெய்யிலும் தேனிலும் பிசைந்து தந்தை குழந்தைக்கு ஊட்டுக்கிறார், அதன்பின் தாயும் அதை உட்கொள்வார். தற்காலத்தில், குழந்தை ஒரு கோவிலுக்கோ திருத்தலத்துக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அர்ச்சகர்களின் முன்னிலையில் இந்தச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது.
சூடாகரணம்– குழந்தையின் தலைமுடியை முதல்முறையாக மழிக்கும் சடங்கு இது. இதை, சௌலம் அல்லது முண்டனம் என்றும் சொல்வதுண்டு. குழந்தைக்கு ஒன்று, அல்லது மூன்று அல்லது ஐந்து வயது ஆனபின் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. புனர்வசு நட்சத்திரத்தில் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம். அதைவிட முக்கியமாக, இந்தச் சடங்கு நவமி, அல்லது அமாவாசையை அடுத்த ஒன்பதாம் நாளில் நடைபெறுகிறது.
கர்ணவேதனம்– காது குத்தும் சடங்கு. ஆண் குழந்தைகளின் வலது காதிலும், பெண் குழந்தைகளுக்கு இடது காதிலும் முதலில் துளை இடப்படுகிறது. தந்தை தன் மடிவில் குழந்தையை வைத்துக் கொண்டு காது குத்துவது வழக்கம். ஆனால், தற்போது, ஆசாரி ஒருவரைக் கொண்டு இது செய்யப்படுகிறது.
வித்யாரம்பம்– குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதானதும், அதன் கல்வியைத் துவக்கும் சடங்கு இது. குழந்தைக்கு அகரமுதலியின் முதல் சில எழுத்துக்கள் கற்றுத் தரப்படுகின்றன. உலோகத்தாலான ஒரு பாத்திரத்தில் அரிசி குவிக்கப்பட்டு, அதில் இந்த எழுத்துக்களையும் சில மந்திரங்களையும் உரக்கச் சொல்லிக்கொண்டே, குழந்தை எழுதுகிறது.
உபநயனம்– யக்ஞோபவீதம் என்று அழைக்கப்படும் பூணூல் அணிவிக்கப்படும் சடங்கு இது. ஐந்து வயது அடைவதற்குமுன் ஆண் குழந்தைக்கு உபநயனம் செய்யப்படுகிறது. முடியிடப்பட்ட முப்புரி நூலொன்று இடம் வலமாக தோளில் அணிவிக்கப்படுகிறது. பிரம்மோபதேசம் என்று சொல்லப்படும் காயத்ரி மந்திரோபதேசமும் அளிக்கப்படுகிறது. உபநயனம் என்ற சொல்லின் வேரசைகள், உப என்பதன் பொருள் அருகில், நயனம்- கொணர்தல், என்ற பொருள் உள்ளவை.
எனவே உபநயனம் என்றால் குழந்தையை குரு அல்லது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று முறையான கல்வி புகட்டுதல் என்று பொருள்படும். பிரம்மோபதேசம் முடிந்தபின் உபநயனம் அளிக்கப்படுகிறது. இது அவனுக்கு இன்னொரு கண் கொடுத்து, புதிய பிறவி அளிப்பதாக நம்பப்படுகிறது.
ப்ரைஸார்த்தம்– வேதக்கல்வியின் துவக்கம். இந்தச் சடங்குக்குப்பின் குழந்தைக்கு வேதங்களும் உபநிடதங்களும் கற்பிக்கப்படுகின்றன. குருகுலவாசமும் இனி துவங்குகிறது.
ருதுசுத்தி– பெண்ணின் முதல் மாதவிடாயின்போது நடத்தப்படும் சடங்கு. இது தொடர்பாக எண்ணற்ற சடங்குகளும் பழக்க வழக்கங்களும் உண்டு.
சமாவர்த்தனம்– பிரம்மச்சரிய ஆசிரமம் என்று சொல்லப்படும் மாணவ பருவம் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்கு இது.
விவாகம்– திருமணச் சடங்கு. ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் கூடுவதற்கு சமய அந்தஸ்து கொடுக்கும் புனிதச் சடங்கு இது. வாழ்வில் வளர்ச்சி காண இது ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறது. திருமணம், புலன் இன்பங்களைத் துய்ப்பதற்கு மட்டமான ஏற்பாடு அல்ல. காம விழைவுக்கு நிறைவு காணும்போதே, இல்லற வாழ்வின் பொறுப்புகளையும் கடமைகளையும் சமபங்கு பகிர்ந்து கொள்ளவும் அறிவுருத்தப்படுகிறது. மிருக இச்சைகளைக் கட்டுப்படுத்தி உயர்வான நோக்கங்களையும் அனுபவ யதார்த்தங்களையும் நோக்கித் திருப்பி, நான்கு புருஷார்த்தங்கள், அல்லது இந்து சமூகத்தின் நான்கு இலட்சியங்களை அடைய விவாகமே முதல் படி. . சமூக ஒழுங்கு நலனைக் காக்கவும் திருமண அமைப்பு உதவுகிறது.
அந்த்யேஷ்டி– நீத்தார்களுக்காகச் செய்யப்படும் சடங்கு. மரணதின சடங்குகள் மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் பிற தேவதைகளுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஸ்ராத்த்ங்கள் என்னென்ன என்று வெவ்வேறு சாஸ்திரங்களில் இந்த சம்ஸ்காரம் குறித்து விளக்கமாக விவரிக்கப்படுகின்றன.
நன்றி: சாந்தரூப சிவாச்சாரியார், அவுஸ்திரேலியா.