தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நண்பர்களே, ஐப்பசி மாத பெருமைகளை பார்த்து வருகிறோம், இன்று ஐப்பசி மாத அன்னாபிஷேகம் ஏன் சிறப்புப் பெறுகிறது என்று பார்ப்போம்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த நாளில் சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.
சரி அன்னாபிஷேகம் ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்யப்படுகிறது. ஏனெனில், ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். சந்திரனுக்கு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திர மனைவியர் உண்டு. இவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பும் பிரியமும் கொண்டிருந்தான். இதனால்,
அவன் மற்றவர்களிடம் பாரபட்சம் காட்ட… அவர்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் மாமனார் சும்மா இருப்பாரா? விஷயம் தெரிந்து கொந்தளித்தார். ஆவேசமானார். சந்திரனின் மீது கடும் கோபம் கொண்டார்.
உன் உடலானது தேஜஸ் இழந்து, பொலிவிழந்து தேயட்டும் என சாபமிட்டார். அதைக் கேட்டு சந்திரன், நடுங்கிப் போனான். கெஞ்சினான். துக்கித்துக் கலங்கினான்.
சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேயத் தொடங்கியது. இப்போதைய திங்களூர் தலத்தை எடுத்துச் சொல்லி, அங்கே சிவனாரைப் பூஜித்தால், சாபவிமோசனம் கிடைக்கும் என தட்சன் சொல்ல, அந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி, கடும் தவம் இருந்தான். ஆனாலும் அவனுடைய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக மங்கிக் கொண்டே வந்தது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருந்தன.
தான் செய்த தவறை முழுமையாய் உணர்ந்து கலங்கினான் சந்திரன். அப்போதுதான் அந்தத் தருணத்துக்குக் காத்திருந்தவர் போல், சிவனார் அவன் முன்னே திருக்காட்சி தந்தருளினார். சாபத்தில் இருந்து விமோசனம் அளித்தார். மேலும் சந்திரனைப் பெருமைப்படுத்தும் விதமாக, அந்தப் பிறையை, தன் சிரசில் அணிந்து அவனுக்கு பெருமை சேர்த்தார்.
சந்திரன் இழந்த பதினாறு கலைகளும் மீண்டும் அவனிடமே வந்தாலும் கூட, முழுமையான பொலிவுடன் ஐப்பசி பெளர்ணமி நாளில் மட்டுமே சந்திரன் மிகுந்த தேஜஸூடன் காட்சி தருகிறான் என்கிறது புராணம்.