தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 8.
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
யாக பூஜை:
ஆலயத்தின் ஈசான திக்கிலே மேற்கு வாசலாக யாக மண்டபம் அமைந்திருக்கும். துவஜாரோகணத்தன்று இங்கு யாக பூஜை ஆரம்பமாகும். தீர்த்தத் திருநாளன்று பகல் யாகபூஜை நிறைவு பெறும்.
துவஜாரோகணத்துக்கு முதல்நாளிரவே இங்கு வாயு மூலையில் சந்திரகும்பம் ஸ்தாபித்து அங்குரார்பணம் நிகழ்த்தப் பெற்றிருக்கும். யாக மண்டபத்தின் மத்தியிலே அமைந்த வேதிகயில் (மேடையில்) மூலமூர்த்திக்குரிய ஸ்நபன கும்பங்கள் வைக்கப் பெற்றிருக்கும். வேதிகையின் மேற்குப் புறத்தில் ஓமகுண்டம் இருக்கும். நான்கு திக்குகளிலும் வாசல்கள் விட்டுப் பரிவார கும்பங்கள், யாகேஸ்வரன், யாகேஸ்வரி கும்பங்கள் புண்ணியாஹ கும்பம் முதலியன அமைந்திருக்கும்.
யாகமண்டப அமைப்பானது எல்லா ஆலயங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆயினும் பரிவார கும்பங்களில் ஆவாகனம் செய்து பூஜிக்கப் பெறும். தேவர்கள் மூலமூர்த்திக்கு ஏற்ப மாறுபடும். பிரதிஷ்ட மகாகும்பாபிசேகம், சங்காபிஷேகம் என்பனவற்றுக்கு அமைக்கப் பெறும் யாக மண்டபத்திற்கும் மஹோற்சவ யாக மண்டபத்திற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.
தத்துவ உட்பொருள்:
மஹோற்சவம் முப்பொருள் தத்துவத்தை விளக்குகின்ற வகையை முன்பு பார்த்தோம். ஐந்தொழில் விளக்கமாக இது அமையும் விதத்தை இப்போது பார்ப்போம்.
வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், பேரீதாடனம், ரக்ஷாபந்தனம், துவஜாரோகணம், திருக்கல்யாணம் என்பன படைத்தலைக் குறிக்கும். வாகனோற்சவம், பலிதானம் என்பன காத்தலைக் குறிக்கும். வேட்டைத்திருவிழா, தேர்த்திருவிழா என்பன அழித்தலைக் குறிக்கும். சூர்ணோற்சவம், அங்குர விசர்ஜனம், துவஜ அவரோகணம், மௌனோற்சவம், ரக்ஷபந்தன விசர்ஜனம் என்பன மறைத்தலை குறிக்கும். சண்டேஸ்வர உற்சவம், ஆசார்ய உற்சவம் என்பன அருளலைக் குறிக்கும்.
வேட்டைத் திருவிழா:
இவ்விழாவை மிருக யாத்திரை எனவும் கூறுவர். துஷ்ட மிருகங்களைக் கொன்றொழித்து மக்களைக் காத்தற்காக மன்னர்கள் வேட்டையாடுதலை கைக்கொண்டிருந்தனர். இதேபோல் எம்மைத் துன்புறுத்தும் மும்மகங்கள், அறுபகைகள் (அசுரத் தன்மை) போன்றவற்றையும், கொடிய நோய்கள் என்பவர்றையும் வேட்டையாடி அழிப்பதற்காக இறைவன் வேட்டைத் திருவிழாவை மேற்கொள்வதாக ஐதீகம். ஆயுதங்களுடன் மூர்த்தியை அலங்கரித்து எழுந்தருளச் செய்து பூந்தோட்டத்திலோ அல்லது வேறு ஆலயங்களிற்குச் சென்று (மிருகங்களின் உருவங்களை வைத்து) அங்கு அஸ்திர தேவரைப் பூஜித்து நீற்றுப் பூசனிக்காய் பலியிடுவது வழக்கம்.
தேர்த்திருவிழா:
சுவாலித்து எரியும் அக்கினியின் தோற்றத்தில் அமைக்கப்பெற்ற தேரானது அழித்தலைக் குறிப்பது. தேரின் பாகங்கள் பிரபஞ்சத் தோற்றத்தையும் அதன் பீடம் இருதயத்தையும் குறிப்பன. அங்கு இறைவன் வீற்றிருந்ததும் தேர் ஓடுகின்றது. வாழ்க்கைத் தேர் சிறப்பாக ஓடுவதற்கு நமது இருதய பீடத்திலே இறைவனை எப்போதும் எழுந்தருளி வைத்திருக்க வேண்டும். தேர் சரியான பாதையிலே ஓடுவதற்கிசைவாகச் சறுக்குக் கட்டைகள் போட்டு அதனைக் கட்டுப்படுத்துவதுபோல நமது வாழ்க்கையையும் நல்வழிகளில் நெறிப்படுத்த வேண்டும். மேலே கோபுரம்போல் குவிந்து செல்லும் தேர்க்கலச முடிவிற் குடைநிழல் தெரிகின்றது. மனம் குவிந்து மேலான சிந்தனையுடன் இறைவனைத் தியானித்தால் அவனது அருட்குடை நிழல் நம்மைத் துயர வெளியிலிருந்து பாதுகாக்கும்.
தேர்க் காலிலே தேங்காயைச் சிதற அடித்து நமது துன்ப துயரங்களைச் சிதற வைப்பதையும், வலிய தேங்காய் ஓடு பிரிந்து வெண்ணிற உட்பாகம் வெளிப்படச் செய்து மல நீக்கத்தை உருவகப் படுத்துவதையும் இந்தத் தேர்த் திருவிழாவில் காணலாம்.
இக்கட்டுரையிம் ஒன்பதாவது பகுதி – 9 அடுத்த பதிவில் தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 8.

