தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 2.
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
பலி கொடுக்கும்போது சொல்லப் பெறும் மந்திரத்தின் பொருள் “ஆபத்துகளை நீக்கும் வடுக வைரவரே”, எல்லோரையும் காப்பவரே, எல்லாப் பயங்களையும் போக்குபவரே, வெப்பசுரம், குளிர்சுரம் முதலிய கொடிய நோய்களை நீக்குபவரே, புத்திர லாபத்தைத் தருபவரே, எல்லா உயிரினங்களையும் காத்தருளும், எல்லாக் கெட்ட பிராணிகளையும் அழித்தருளும். இந்த பலியினை ஏற்றருள்க”
வாஸ்து சாந்தி:
நிலத்தில் உள்ள குற்றம் குறைகளை நீக்குவதற்காக செய்யப்பெறுவது வாஸ்து சாந்தி என்னும் கிரியை. பூமிக்கு அதிபதி பிரமாவை மகிழ்வித்து வழிபாடியற்றுவது வாஸ்து சாந்தியில் இடம்பெறுகிறது. வாஸ்து சாந்தி ஆலய மண்டபத்திலே செய்யப் பெறுகின்றது.
வாஸ்து சாந்திக்குரிய வாஸ்து மண்டலம்; நெல்லினை மேடையாகப் பரப்பி அதன்மேல் வாழையிலை இட்டு அதன் மேல் அரிசியைப் பரப்பி அதன்மேல் எள்ளினால் அல்லது அரிசி மாவினால் கோடுகள் வரைந்து அமைக்கப்பெறும். இவ் மண்டலம் இரு வகையாக அமைக்கப் பெறும். ஆண் தெய்வங்களுக்கு உரியது மண்டூகபத வாஸ்து சாந்தி மண்டலம். பெண்தய்வங்களுக்குரியது பரமசாயிபத வாஸ்து சாந்தி மண்டலம். சக்தி அம்சமான முருகனுக்கும் இதுவே உரியது.
இம் மண்டலத்துக்கு ஈசான திக்கில் காயத்திரி, சாவித்திரி ஆகிய இரு சக்திகளுடன் கூடிய பிரம்மவிற்கும், சிவம் வர்த்தனிக்கும், மண்டலத்துக்கு கிழக்கில் புண்ணியயாக வாசனத்துக்கும் கும்பங்கள் வைத்து அதன் முன் ஓமகுண்டம் அமைக்கப் பெற்றிருக்கும்.
இங்கும் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் முதலிய பூர்வவாங்கக் கிரியைகளைச் செய்து சிவம் வர்த்தனியையும், பிரம்மாவையும் கும்பத்தில் பூஜித்து மண்டலத்தில் வாஸ்து புருசனையும் பிற தேவதைகளையும் பூஜித்து நெற்பொரியினால் பலிதானமும் கொடுத்து முறைப்படி அக்கினி காரியமும் செய்வர்.
இங்கு கிராமசாந்தியைப் போலவே நீற்றுக்காயொறைப் பலியிடுவர். அதன் பின் வைக்கோல், தர்ப்பை முதலியவற்றால் மனித உருவாகச் செய்யப்பெற்ற வாஸ்து புருசனைப் பூஜித்துப் அக்கினியில் பொருத்தி எரிமூளச் செய்தபின் அவ்வுருவத்தை ஆலய மண்டபங்கள், வீதிகள் முதலிய இடங்களில் இழுத்து வந்து ஈசான திக்கில் போட்டு விடுவர். இவ்வுருவத்தின் பின்பாக வாஸ்து கும்ப நீர் தெKஇத்துச் செல்வர். வெட்டிய நீற்றுப் பூசணிக்காயையும் இதனுடன் எடுத்துச் சென்று போட்டுவிடுவர். இவற்றைக் கொண்டு சென்றவர்கள் நீராடிவிட்டு ஆலயத்தினுள் வருதல் வேண்டும். (கை கால்களையாவது நன்கு சுத்தம் செய்தல் அவ்சியம்)
இக்கட்டுரையின் மூன்றாம் பகுதி தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 2.

