தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 1.
வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!!
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்
உற்சவம் (உத்சவம்) என்னும் சொல் விழா என்று பொருள் பெறும். இச் சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும், மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள்கள் கூறுவர்.
நைமித்திக உற்சவங்களில் சிறந்தது மஹோற்சவம் என்று சிறப்பித்துச் சொல்லப் பெறும் பிரமோற்சவமாகும். நித்திய கிரியைகளின்போது ஏற்படும் குற்றம் குறைகளுக்குப் பிராயச்சித்தமாக அமைவது இந்த மஹோற்சவமாகும்.
கொடித்தம்பம்:
மஹோற்சவம் நிகழ்வதற்குக் கொடிமரம் அவசியம். இது நந்தி, பலிபீடம் என்பவற்றையடுத்து மனிதனின் முள்ளந்தண்டை நிகர்ந்து நிமிர்ந்து நிற்கும். மூங்கில், கருங்காலி, வில்வம்,தேவதாரு, பலாசு, தென்னை முதலிய மரங்களுள் ஒன்று கொடிமரமாகப் பயன்படித்தப்பெற்றிருக்கும். உலோக தகடுகளால் போர்த்தப்பெற்று மேலே கொடிச்சீலை விரிந்து நிற்கத்தக்க அமைப்புக்களையும் கொண்டதாக உருவாக்கப்பெற்றிருக்கும்.
நிலமட்டத்திலிருந்து கர்பக்கிரக விமானத்தின் (ஸ்தூபியின்) கலச மட்டம் வரையிலான உயரமே கொடிமரத்தின் உயரமாகும். இதன் அடியிலுள்ள சதுரவடிவமான பாகம் பிரம்மபாகம். அதன் மேலுள்ள எண்கோன அமைப்பு விஷ்ணுபாகம். அதற்கு மேல் விருத்தமாக அமைவது ருத்ரபாகம்,
கொடிச்சீலை:
கொடிமரத்தில் ஏற்றப்பெறும் கொடிச்சீலையின் நீளம் தம்பத்தின் உயரத்தைப்போல் இரு மடங்கு உடையயதாக இருக்க வேண்டும். அதன் ஒன்பதில் ஒருபாகமாக எடுத்த சதுரத்தில் மேலந்தத்திலிருந்து அந்த ஆலய மூர்த்தியின் வாகனம் படத்தின் மையத்தில் வரையப்பெறும். அதன் முதுகில், அவ்வாலய மூர்த்தியின் அஸ்திரதேவர் வரையப்பெறும். இது ஆன்மா மலபரிகாரம் அடைந்ததைக் குறிக்கும். இவற்றைவிட சூரிய சந்திரர்களும், அஷ்ட மங்கலப் பொருள்களும் வரையப் பெற்றிருக்கும்.
சித்தாந்தக் கருத்துக்கள்:
இப்படம் தெளிவாகத் தெரியும் வண்ணம் மேற்புறத்தில் குறுக்குச் சட்டம் ஒன்று கட்டப்பெற்று அதன்மேல் கொடியேற்ற உதவும் கயிறு கட்டப்பெறுவதற்கமைவாக மேற்பாகம் முடிச்சாக அ,ஐக்கப் பெறும். அம்முடிச்சு பிரம்மக் கிரந்தி எனப்பெறும். இதில் இணைக்கப்பெற்று கொடியை ஏற்றப் பயன்பெறுகின்ற மஞ்சட்கயிறு ஆன்மாவை இறைவனிடம் சேர்ப்பிக்கும் திருவருட்சக்தியாகும். கொடித்தம்பம் பதியாகிய இறைவனையும், கொடிச்சீலையிலுள்ள நந்தி (அல்லது அவ்வாலய மூர்த்தின் வாகனம்) பக்குவமடைந்த ஜீவான்மாவாகிய பசுவையும் குறிக்கும். இடையேகாணப்பெறும் தற்பைக்க்யிறு பாசமாகிய மும்மலங்களாகும். பக்குவான்மாவை வழிநடத்தும் திரோதான சக்தியை க் கொடிச்சீலை குறிக்கின்றது.
ஆன்மாவைப் பதிந்து நிற்கின்ற பாசமலங்கள்; ஆன்மா பக்குவமடைந்து திருவருட்டுணையால் இறைவனைச் சேரும்போது வலிகுன்றி வாளாவிருக்கும். (இல்லாமல் போவிடுவதில்லை) இடையே அங்கிருக்கும் தர்ப்பைக் கயிறு காட்டுகின்றது.
கொடியேற்றியதும், திருவருட் சக்தியாகிய நூற்கயிறும்,பாசமாகிய தர்ப்பைக் கயிறும், திரோதான சக்தியாகிய கொடிச்சீலையும் அதில் வரையப்பெற்றுள்ள ஆன்மாவாகிய நந்தியும் தம்பத்தோடு சுற்றப்பெற்று அதனோடு ஐக்கியமாகி மறைய, இறைவனை விட வேறாக ஒரு பொருள் இல்லை என்ற உண்மை தெளிவாகின்றது.
பூர்வாங்கக் கிரியைகள்:
மஹோற்சவ ஆரம்ப தினமாகிய துவஜாரோகண தினத்திற்கு (கொடியேற்ற நாளுக்கு) முதல் நாள் மாலையிலே சில பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகிவிடும். ஆசாரிய வரணம் முதல் அங்குரார்ப்பணம் வரையிலான சிரியைகள் முதல் நாளிலே நடைபெரூவது நன்று.சில இடங்களில் மிருத் சங்கிரகணம், அங்க்ரார்ப்பணம் இரண்டையும் கொடியேற்றும் நாளிலே செய்தலும் உண்டு
ஆசார்ய வரணம்:
வரணம் என்பது வரிதல். மஹோற்சவக் கிரியைகள் நடத்துவதற்குரிய குருவினை வரிதல், அதாவது நியமித்தல் என்பதே இக் கிரியையின் பொருள் (நியமித்தல் என்பது அதிகார தோரணையில் கட்டளையிடுதல். ஆனால் வரிதல் என்பது அக்காரியத்தை செய்யும்படி வேண்டுதல்).
ஆலய தர்மகர்த்தா, உபயகாரர் ஆகியோர் குருவின் இல்லத்திற்கு மங்கலப் பொருட்கள் சகிதமாக, மங்கள வாத்தியங்களுடன் செல்வர். சாயங்கால சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மானுஷ்டானங்களை முடுடித்து ஆசார்ய லட்ஷணத்துக்கமையத் தம்மை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பிரதான குருவையும், சாதகாசாரியர் உதவியாளர் யாவரையும் வணங்கி வீதிவலமாக ஆலயத்திற்கு அழைத்து வருவர்.
மண்டபத்திலே அமர்ந்து விநாயகரைத் துதித்து ஆசமனம், பிணாயாமம், சங்கல்பம் முதலியன செய்தவுடன் உபயகாரர் நமஸ்கரித்து மஹோற்சவத்தைப் பொறுப்பேற்று நடத்துமாறு வேண்டுவர்.
ஆரம்பக் கிரியைகள்:
குருவை அழைத்து வந்ததும், சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, சமளீகரணம், சாமான்யார்க்கியம், புண்ணியாகவாசனம் என்பவற்றைச் செய்வர்.
அநுஜ்ஞை:
அநுஜ்ஞை என்பது அனுமதி பெறுதல் ஆகும். ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி அதில் தேங்காய், வாழைபழம், வெற்றிலை பாக்கு, சந்தணம், மஞ்சள், நாணயம், புஷ்பம், பத்திரம், தர்ப்பை என்பனவற்றை வைத்து அவற்றைப் புண்ணியாக தீர்த்தத்தினால் தூய்மைப்படுத்தி அவற்றுக்குப் பூசை நிகழ்த்துவர்.
அங்கு வந்திருக்கும் பிராமணோத்தமர்களிடமும், விக்கினேஸ்வரப் பெருமானிடமும், மூலமூர்த்தியிடமும், அஸ்திரதேவரிடமும், உற்சவமூர்த்தியிடமும் சென்று பூஜை செய்து மஹோற்சவத்தை நன்முறையில் நடத்த அனுமதியும் ஆசியும் தந்தருளுமாறு வேண்டுவர்.
கிராம சாந்தி:
ஆலயம் அமைந்துள்ள கிராமத்திலுள்ள தீய சக்திகள், துஷ்டதன்மைகள் முதலியவற்றால் பெருவிழாவிற்கு இடையூறு ஏற்படாமல் மங்கலம் உண்டாகும்படி காவற் தெய்வமாகிய வைரவப் பெருமானுக்கு விஷ்ட பூசி, ஓமம், பலி என்பன செய்தலே கிராம சாந்தியாகும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு பகைகள் முதலியவற்றால் ஏற்படும் தீமைகளும்; அஸ்ரீஅர், இராட்சசர், பூதர், பைசாசர் என உருவகப் படுத்தப் பெறுகின்றன. எவையானாலும் தீயனவற்றை ஒழிப்பதே கிராமசாந்தி.
இதைப் புரிந்துகொள்ளாத பலர்; மஹோற்சவத்திற்கு முதல் நாள் பேய், பிசாசுகளை கட்டி வைப்பதாகவும்; கொடியிறக்க நாளில் அவிழ்த்து விட்வதாகவும் கூறுவர். இக் கிரியைகளின் போது சிறுவர்களை அருகே வரக்கூடாது எனப் பயமுறுத்துவர். சிலர் இக் கிரியைகளைத் தரிசிக்காமல் விலகிக் கொள்வதுமுண்டு.
தெய்வ காரியங்களீல் இப்படிப் பயப்படும்படியான கிரியைகள் எதுவுமில்லை என்பதை யாவரும் உணர்ந்து இக் கிரியைகளின் உட்பொருளை அறிய முற்பட வேண்டும். கிராமசாந்திமூலம் கிராமத்தின் காவலை உறுதிப்படுத்த வைரவரிடம் வேண்டுதல் நடத்துவது போலவே மஹோற்சவ இறுதியில் வைரவரை மகிழ்விக்கும் வகையில் வைரவர் மடை நடாத்துவதும் கவனிக்கத்தக்கது.
ஆலயத்தின் கிழக்கு, மேற்கு அல்லது நிருதி திசையில் ஒரு தற்காலிக மண்டபம் அமைத்து வைரவருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பம் வைத்து ஒழுங்கு செய்தபின் அஸ்திரதேவரை மங்கள வாத்திய சகிதம் வீதி வலம் வரச்செய்து அங்கு எழுந்தருளச் செய்வர். கும்பங்களை மட்டுமின்றி யந்திரங்களை வைத்து அவற்றிலும் வைரவர் முதளானோரை ஆவகனம் செய்து பூசைகள் நிகழ்த்துவர். ராட்ஷசர் முதலானோருக்குப் பலி உருண்டைகள் வழங்கித் திருப்தி செய்தபின் வைரவரை அக்கினியிலும் ஆவாகனம் செய்து அன்னம், வடை முதலியனவும் ஆகுதியாக இடுவர். பலிப் பொருளான நீற்றுப் பூசனிக்காய், கத்தி ஆகியவற்றையும் பூஜித்து பசுகாயத்ரியை உச்சரித்து, நீற்றுக்காயை வெட்டிப் பலி கொடுத்து அதன் உட்பாகத்தை ஓமம் செய்வர். பூர்ணாகுதி கொடுத்தபின் சக தேவர்களுக்கும் தாம்பூலம் நைவேத்தியம் செய்து நீராஜனம் செய்தபின் சுவஸ்தானங்களுக்கு எழுந்தருளிவிப்பர். இதன் பின் வலம் வந்து கைகாகளைச் சுத்தம் செய்தபின்னர் ஆலயத்தினுள் செல்லுதல் மரபு.
பகுதி இரண்டு தொடரும்!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modenhinduculture.com
மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 1.

