சாளக்கிராமம்
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும், ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலான பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது.
திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கார வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து, பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாக கருதப்படுகின்றன.
சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமல்லாமல், இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடம் இருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு.
சாளக்கிராமம் சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ‘ஸ்வயம் வியக்தம்’ என்னும் சிறப்பைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார். சாளக்கிராமம் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.
சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்கிறார். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால், அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்தால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வதாக ஐதீகம். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12-ம், அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை, 108 திவ்ய தேசத் தகுதியில் வைத்து பாவிக்க வேண்டும் என்பார்கள். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும்.
ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது, ‘லட்சுமி நாராயண சாளக்கிராமம்.’ நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது ‘லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்.’ இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ‘ரகுநாத சாளக்கிராமம்.’ இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது ‘வாமன சாளக்கிராமம்.’ வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது, ‘ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்.’ விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும், அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ‘ரணராக சாளக்கிராமம்.’ பதினான்கு சக்கரங்களும் கொண்டது ‘ஆதிசேஷ சாளக்கிராமம்.’ சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது ‘மதுசூதன சாளக்கிராமம்.’
ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது ‘சுதர்சன சாளக்கிராமம்.’ மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது ‘கதாதர சாளக்கிராமம்.’ இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ‘ஹயக்ரீவ சாளக்கிராமம்.’ இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது ’லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.’ துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது ‘வாசுதேவ சாளக்கிராமம்.’ சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது ‘பிரத்யும்ன சாளக்கிராமம்.’ விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது ‘அநிருத்த சாளக்கிராமம்.’
சாளக்கிராம வழிபாடு சகல வளங்களும் தரும் என்பது ஐதீகம்.