தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நல்ல விடயங்கள், தெய்வ காரியங்கள் என்று செய்யும்போது கலசம் வைத்து ,தேங்காய் வைத்து வழிபாடுகள் செய்கிறோம் , நண்பர்களே ஏன் அப்படி செய்கிறோம் என்று பார்ப்போம்!
பூர்ணமான- முழுமையானவரே இறைவன். அவர் அருள்பெற நாம் முழுமையானவராக இருத்தல் அவசியம். யோக மார்க்கத்தில் மூச்சுப்பயிற்சியில் `கும்பகம்’ என்று ஒரு முறை உள்ளது. அதாவது மூச்சுக்காற்றை உள்ளிழுத்தலோ, வெளிவிடுதலோ இல்லாது நிலைநிறுத்துதலே `கும்பகம்’ என்று கூறுவர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் இடத்தில் நிலைபெற்று இருக்கச் செய்யும் மிகப்பெரிய ஆற்றலை நம் சமயம் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது.
எப்படி ஒரு `சிம்’ கார்டில் அனைத்துத் தகவல்களும் பதியப்பெற்று அவற்றை ஒரு கருவியில்வைத்து நாம் வேண்டிய நபரிடம் எப்போது வேண்டுமானாலும் பேச முடியுமோ, அதுபோன்று நம் ஆகமங்கள் ஆசார்யரின் மந்திர சக்தியை ஒரு கும்பகத்தில் பதியச் செய்து தெய்வத்தன்மையை உருவேற்றி, சில காலங்கள் வேள்வி செய்து பிறகு, அனைத்துக் காலங்களிலும் அருளும் உருவத் திருமேனிகளுக்கு அவற்றைச் சேர்ப்பதே `கும்பாபிஷேகம்’ என்று போற்றப்படுகிறது. இங்கே `கும்பம்’ என்பது குடத்தைக் குறிக்கும் சொல் அல்ல. முன் கூறப்பட்ட `கும்பகம்’ எனும் நிலைநிறுத்தலைக் குறிப்பது.
எப்படி ஆலயத்தில் கும்பகம் எனும் முறையில் இறைவனை நிலைநிறுத்துதல் என்பது நடைபெறுகிறதோ, அது போன்று அவரவர் வீடுகளில் அவரவரின் நன்மையைப் பொருட்டு, கலசம் வைத்து வழிபடுவார்கள். இதில், கலசம் கடவுளின் உடலாகவும், மேலே வைக்கும் தேங்காயானது தலையாகவும், கலசத்தின் மேல் சுற்றியுள்ள நூல் நரம்புகளாகவும், மேல் சாத்திய துணி சருமமாகவும் கொள்ளப்படும். இன்னும் உடலில் உள்ள சக்திகளையும் உள்ளடக்கித் திகழும் கலசத்தில் எல்லாம்வல்ல இறைவனைக் கண்டு பக்தியோடு வழிபட்டுப் பயன்பெறக் கூடிய உயரிய வழிபாடே கலச வழிபாடு. இதைச் செய்யும்போது நமது எண்ணமானது பொருளை மறந்து இறையை அனுபவித்தல் அவசியம்.
நன்றி: ஷண்முக சிவாச்சாரியார்.