தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நம்மில் சிலர் இருக்கிறார்கள், தமது சொந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு ,தமக்கு விரும்பிய நேரத்தில் ஆலயத்துக்கு வருவார்கள். அந்த நேரம் ஆலயம் சாத்தப் பட்டிருக்கும். சலித்துக் கொள்வார்கள். தமது தவறை மறந்து விட்டு ” ஐயர் கோவிலை சாத்திவிட்டு போய் விட்டார் என்றோ அல்லது இண்டைக்கு நேரத்துக்கு கோயில் சாத்திவிட்டார்கள்” என்ற முணுமுணுப்புடன் திரும்பி செல்வதை பார்த்திருக்கிறோம். எல்லா நேரமும் ஆலயம் திறந்திருக்கும் என்று எண்ணுவது தவறானது.
24 மணி நேரமும் கோயில்கள் திறந்திருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது. ஒவ்வொரு ஆலயமும் ஒரு ஆகம விதியின் அடிப்படையில் அமைந்திருக்கும். எந்த விதியின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டமோ அந்த விதியை தவறாமல் பின்பற்றுவார்கள்.
பொதுவாக சிவாகம விதியின்படி ஆறு கால பூஜை என்பது உண்டு. உஷக்காலம், காலசந்தி, உச்சிகாலம், சாயரக்ஷை, சாயரக்ஷை இரண்டாம் காலம், அர்த்தஜாமம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. உஷக்காலம் என்பது சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னதாக அதாவது ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.
சூரிய உதயம் ஆறு மணிக்கு என்று எடுத்துக்கொண்டால் அதிகாலை நான்கரை மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியைக் கொண்டு வந்து சந்நதியைத் திறந்து பூஜை செய்வார்கள். கால சந்தி என்பது சூரிய உதயத்தில் இருந்து ஏழரை நாழிகைக்குள் நடத்தப்பட வேண்டும். அதாவது காலை ஒன்பது மணிக்குள்ளாக இந்த பூஜையானது நடத்தப்படுகிறது. உச்சிகால பூஜையானது நண்பகலில் நடக்கும். சாயரக்ஷை என்பது சூரிய அஸ்தமனத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக அதாவது மாலை நான்கரை மணியிலிருந்து துவங்கும். இரண்டாம் கால சாயரக்ஷை பூஜையானது தோராயமாக இரவு ஏழரை மணியளவில் நடைபெறும்.
அர்த்தஜாம பூஜையானது சுமார் பத்து மணியளவில் நடைபெற்று பள்ளியறை பூஜை என்பது நடைபெறும். இந்த நடைமுறை எல்லா ஆலயங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. நண்பகலில் உச்சிகால பூஜை முடிந்தவுடன் சந்நதியை மூடிவிட்டு மீண்டும் சாயரக்ஷை பூஜைக்கு முன்பாகத்தான் திறப்பார்கள். அதே போல இரவினில் அர்த்தஜாம பூஜை முடிந்தவுடன் சந்நதியினை பூட்டி சாவியை பைரவர் சந்நதியில் வைத்துவிட்டு ஆலயத்தையை பூட்டிவிடுவார்கள். இது சரியான நடைமுறையே.
நமது வசதிக்காக 24 மணிநேரமும் ஆலயங்கள் திறந்திருக்கவேண்டும் என்று எண்ணக்கூடாது. ஒவ்வொரு கால பூஜையிலும் அபிஷேகம் முடிந்து அலங்காரம், நைவேத்யம் நடைபெறும் சமயங்களில் திரையிடப்பட்டிருக்கும். அந்த நேரங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையும் சரியானதே. இறைவனின் தரிசனத்தைக் காண நாம் காத்திருப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. அவ்வாறு காத்திருந்து தரிசனம் செய்யும்போது கிடைக்கும் உணர்வே அலாதியானது என்பது நாம் அனைவரும் அனுபவித்து உணர்ந்த உண்மைதானே.