அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:;
சிவாய நம:’ என்று சிந்தித்து இருப்பவர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பதை மனதில் கொண்டு, நீங்கள் , தினமும் எம்பெருமானை வழிபடுங்கள். மனமுருகி வழிபடுங்கள் , கோவிலுக்கு போக முடியவில்லையா, உங்கள் வீட்டு சாமி படத்திற்கு முன்னால் நின்று வழிபடுங்கள். தேவாரங்கள் படியுங்கள். படிக்க முடியவில்லையா, யாரும் படித்தால் அமைதியாக கேளுங்கள். நாளைக்கு ஒருவன் வருவான் – அவன் பெயர் காலன்; ஆலகாலன், அந்த ஆலகாலன் வருகிற போது நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற பொன்னும், பொருளும் போகமும் உங்களைக் காப்பாற்றப் போவதில்லை. இந்த சிவப்பரம்பொருள் ஒன்றுதான் காப்பாற்றும்.
என்ன ஆதாரம் என்று கேட்டால், அன்றைக்கு திருக்கடையூரிலே மார்க்கண்டேயன் என்று சொல்லக் கூடிய சிறுவன், ‘சிவனே!’ என்று அணைத்துக் கொண்ட போது, அந்த எமனை காலால் எட்டி உதைத்து தன்னை நம்பிய அந்த மார்க்கண்டேயனைக் காப்பாற்றினார் என்பது தான். நாளை உங்களுடைய வாழ்க்கையில் ஆலகாலன் – எமதர்மன் வரும் போது அந்த சிவன் உங்களுக்குத் துணை நிற்பான் என்பதற்கு உள்ள ஒரே ஆதாரம் இதுதான்.