அறிந்து கொள்வோம் நண்பர்களே.
பிராணாயாமம்–மூச்சுப் பயிற்சி செய்வோம்.பலன் பெறுவோம்.
பிறந்தது முதல் இறப்பது வரையில் அனைவருமே சுவாசிக்கிறோம். மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களும் விலங்குகளும்கூட சுவாசிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிர்களில்கூட சுவாசம் என்பது நடைபெறுகிறது. சுவாசமே உயிரின்- உயிர் வாழ்தலின் ஆதாரம்.
இந்த சுவாசத்தை முறைப்படுத்தி, ஆயுளை நீட்டிப்பது என்பது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அனைத்து உயிரினங்களிலும் சுவாசம் என்பது தானாகவே நடைபெறும் ஒரு அனிச்சை செயலாகவே உள்ளது. மனிதர்களால் மட்டுமே அதை முறைப்படுத்தி, நமது இச்சைக்கு உட்பட்ட ஒரு செயலாக மாற்றியமைக்க முடியும். இந்த சுவாசப் பயிற்சி களின் சூட்சுமங்களைக் கூறும் சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.
“ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி
வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே’
சுவாசம் என்பது இரு பகுதிகளைக் கொண்டது. உள்ளே மூச்சை இழுப்பது (உள் சுவாசம்), மூச்சை வெளியே விடுவது (வெளி சுவாசம்). சுவாசப் பயிற்சியின்போது இடது நாசியின் வழியாக (இடகலை நாடி) மூச்சை உள்ளே இழுத்து, வலது நாசியின் வழியாக (பிங்கலை நாடி) வெளியே விட வேண்டும். இந்த இரு நாடிகளையே “இருகாலும்’ என்கிறார் திருமூலர்.
“ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.’
உள்ளே, வெளியே என இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளையும் நிறைக்கும் (பூரிக்கும்) காற்றை தன் வசப்படுத்தும் (பிடிக்கும்) கணக்கை பெரும்பாலான மனிதர்களும் உணர்ந்து கொள்வதில்லை என முதல் இரு அடிகளில் திருமூலர் குறிப்பிடுகிறார்.
“காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.’
காற்றை வசப்படுத்தும் கணக்கை அறிந்து கொண்ட வர்களுக்கு அதுவே யமனை அல்லது மரணத்தை (கூற்றை) வெல்லுகின்ற (உதைக்கும்) வழிமுறையாகும். (குறியதுவாமே!) காலனை எட்டி உதைக்கும் வழியே மூச்சுப் பயிற்சி என்கிறார் திருமூலர்!