பூர்வசந்தானமும் பச்சிமசந்தானமும்:
கொடிச்சீலைப் படத்தில் உள்ள நந்தி, அஸ்திரதேவர் இரண்டையும் பிரதிஷ்டை செய்தற் பொருட்டு (அதாவது அங்கு தெய்வ சாந்தியத்தை ஏற்படுத்துவதற்காக) இரண்டு வகை ஜிரியைகள் செய்யப் பெறுகின்றன. முதலில் பசுபோதத்தை நீக்குவதற்காகச் செய்யப்பெறுவது பூர்வ சந்தானம். இதன் பின் அக்கினியிலும், கும்பத்திலும் பூஜித்த தெய்வ சாந்நித்தியத்தைப் படத்திலே ஒடுக்குவது பச்சிம சந்தானம்.
அக்கினி கும்பத்திலிருந்து கும்பம், படம், மூர்த்தியின் திருவுருவம் என்பவற்றை இணைக்கும் வகையில் இடப்பெறும் நூல் நாடீசந்தானம் எனப்பெறும். இந்நூலின் வழியாக தெய்வ சாந்நித்தியத்தை அக்கினியில் இருந்து படத்திற்கு எழுந்தருளச் செய்வர்.
திருவுருவத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து; பிரம்ம பாகம் (கீழ்ப்பகுதி), விஷ்ணு பாகம் (மத்திய பகுதி), ருத்திர பாகம் (மேற்பகுதி) என்று பாவித்து மும்முறை ஸ்பர்சாகுதி செய்வர். ஆத்மதத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்னும் தத்துவங்களையும் அவற்றின் அதிபதிகளையும் பிருதுவி முதலிய அஷ்ட மூர்த்திகளையும், அவற்றின் அதிபதிகளையும் இங்கு பூஜிப்பர். இவ்விதம் பிரதிஷ்டைகள் நிறைவேறியதும் அக்கினியில் பூர்ணாகுதி கொடுத்து ரட்க்ஷை (கரிப் பொட்டு) எடுத்து கும்பங்கள் படம் யாவற்றுக்கும் இடம்பெறும்.
அபிஷேக ஆராதனைகள்:
அதன் பின் கும்பங்களை வீதிவலமாக கொண்டு வந்து அபிஷேகம், அலங்காரம் என்பன நிறைவேற்றித் தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும். உற்சவ மூர்த்திக்கு (எழுந்தளுளி மூர்த்தி) விசேட பூஜைகள் நடத்தி எழுந்தருளுவித்து கொடித்தம்பத்தை பார்த்த வண்ணம் வடக்கு முகமாக இருக்கச் செய்வர்.
பேரீதாடனம்:
நாததத்துவமே பிரபஞ்ச சிருஷ்டிக்கு மூலகாரணம். நடராஜ மூர்த்தியின் வலக்கரமொன்றில் இருக்கும் உடுக்கிலிருந்து பிறக்கும் ஓசையே ஒலிகள், மொழிகள், இசைகள் என்பனவற்றிற்கும் சகல சிருஷ்ட்டிக்கும் ஆதாரமாக இருக்கின்றது. சரஸ்வதி வீணை வாசிப்பதும், கண்ணன் வேய்ங்குழல் ஊதுவதும், நாரதர் தம்புரா இசைப்பதும், நடராஜ தாண்டவத்தின் போது மகாவிஷ்ணு தாளம் கொட்டுவதும், நந்தி மத்தளம் வாசிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை.
இங்ஙனம் படைத்தல் தொழிலைக் குறிக்கும் கொடியேற்ற விழா ஆரம்பத்தில் நாத தத்துவத்தை பேரீ எனப்பெறும் மேளத்தில் பூஜித்து, மந்திர சகிதமாக குரு; மேளத்தில் ஒலியெழுப்பி சகல தேவர்களையும் அங்கு எழுந்தருளும்படி வேண்டுதலே பேரீதாடனமகும்.
மேளம் அடிக்கும் கம்பினைச் சிவசக்தி ரூபமாகப் பாவனை செய்து சிவாச்சாரியார் அதனை எடுத்து வேதமந்திரங்களைக் கூறீ முறையே ஒருமுறை, இருமுறை, மும்முறை என்ற வகையில் மேளத்தை அடித்துப் பின்னர் “ எம்பெருமானின் மஹோற்சவ விழாவை நடத்துவதற்காக சகல தேவர்களையும் இங்கு அழைக்கிறேன். சகல மங்கள் வாத்தியங்களையும் இப்போது ஆரம்பித்து வைக்கிறேன்” என்று பிரார்த்திப்பார். பேரீதாடனம் என்னும் இக்கிரியை சில இடங்களில் கும்பபூஜை ஆரம்பமாகும் போதெ செய்யப்பெற்று விடுவதுமுண்டு.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா,
இணையதள மின்இதழ் ஆசிரியர்.
Comments by Dr. N. Somash Kurukkal