-
தெரிந்து கொள்வோம் , தெளிவடைவோம் நண்பர்களே:
மூல நட்சத்திரம் மாமனார் – மாமியாருக்கு ஆகாது, பூராடம் என்றால் கழுத்தில் தாலி ஆடாது… இப்படி என்னென்னவோ ஜோதிட நம்பிக்கைகள் பெண்களின் திருமணத்துக்குத் தடையாக நிற்கின்றன. உள்ளபடி இதெல்லாம் உண்மைதானா? இந்த நம்பிக்கைகளுக்கு ஜோதிட ஆதாரங்கள் உண்டா? ‘இல்லை’ என்பதே அழுத்தமான பதில். விளக்கங்களுடன் பார்ப்போம்.ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’, ‘பெண் மூலம் மாமனாருக்கு ஆகாது’ – ஆதாரம் இல்லாத இந்த சொல்வழக்குகள் மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டன. இன்றும், மூலத்தில் பிறந்த பெண்ணை மணக்க தயங்குவோர் உண்டு. பிற்காலத்தில் வந்த ஜோதிட நூல்களில்தான், மூலத்துப் பெண் தன் மாமனாரை அலைக்கழிப்பாள் எனும் தகவல் உண்டு. ஆனால், அது சரியாகாது!
முன்னதாகவே பிறந்து, தமது ஆயுளும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட மாமனாரின் ஜாதகப் பலனை, பின்னர் வந்த பெண்ணின் ஜாதகப் பலன்… அதுவும் ரத்தபந்தம் நேரடியாக இல்லாத நிலையில், தனக்கு நெருக்கமான கணவனையும் மீறி, அவன் தந்தையைப் பாதிக்கும் என்ற தகவல் ஏற்புடையது அல்ல. ‘தன் ஜாதகப் பலனையும் மீறி பிறரது ஜாதகப் பலன் தன்னைத் தாக்கும் அல்லது நடைமுறைக்கு வரும்’ என்பது ஜோதிடம் ஏற்காத ஒன்று.
குழந்தை கருவறையில் இருக்கும்போதே ஆயுள் நிர்ணயிக்கப்பட்டு விடும் என்ற தகவல் ஜோதிடத்தில் உண்டு. ஆயுள், செயல்பாடு, பொருளாதாரம், அறிவு, மறைவு ஆகிய ஐந்தும் கருவறையில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுவிடும் என்கிறது ஜோதிடம் (ஆயு:கர்மசவித்தம் சவித்யாநிதன மேவச…). ஆக, மாமனார், அவரின் தாயார் கருவறையில் இருக்கும்போதே அவருடைய ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, பல வருடங்கள் கழித்து வந்து சேரும் மருமகளின் ஜாதகப் பலன், மாமனாரின் ஆயுளை நிர்ணயிக்காது என்பது கண்கூடு.
-ஆன்மிக மலர் ஒன்றில் , பிரம்மஸ்ரீ. சேஷாத்திரி நாத சாஸ்திரிகள். -
September 25, 2019
Comments by Dr. N. Somash Kurukkal