வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும் விழுமிய துணையாக அமைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான். அவனது திருவருள் எங்கணும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கணும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்குச் சான்று. மக்களுக்கு உயித்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான், அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புதத் தெய்வம்.
ஆடியார்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும், ஒற்றுமைத் தெய்வம் வள்ளி தெய்வயானை சமேதராய் விளங்கும் அழகுத் தெய்வம். இத்தகைய சிறப்பினால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அடியார்களை உள்ளன்புடன் முருகனைத் தரிசித்து விழிபடும் வண்ணம் ஆற்றப்படுத்துகின்றார். முத்தமிழால் வைதாரையும் விழ வைப்பவனாகிய முருகன் யாவும் நிறைவு பெற்ற பூரணப் பொருள்.
உபநிடத வாக்கியம் பூரணத்தின் சிறப்பைக் கூறும் ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே என்ற உபநிடதச் சிந்தனையின் படி பூர்ணமாகிய பொருளிலிருந்து பூர்ணம் உதயமாகியுள்ளது என்பது விளக்கப்படுகின்றது. பூர்ணமாகிய சிவப்பரம்பொருளிடமிருந்து பூருணமாகிய முருகப் பெருமான் உதமாகியுள்ளான் என்றும் கொள்வதில் தவறில்லை. புதியரில் புதியவனாகவும் முடிவிற்கு முடிவானவனாகவும் விளங்கும் முருகன் நினைத்தவுடன் அடியார்களுக்கு அருள்பாலிப்பவன்.
Comments by Dr. N. Somash Kurukkal