தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!
அம்பாள் வழிபாடு!!! — பத்திரகாளி அம்பாள்!!!
அன்னை அம்பாளை பல ரூபங்களில் மனதில் இருத்தி வழிபடுகிறோம்!
ஆதிசக்தி அனந்தகோடி பிரம்மாண்டங் களின் நாயகி. ஆதியும் அந்தமும் இல்லாதவள். சகலத்துக்கும் ஆதாரமாகவும் மூலமாகவும் விளங்கும் அம்பாளை ‘மாதா’ என்று போற்றுகிறது லலிதா ஸஹஸ்ர நாமம்.
ஒரு தாய் எப்படி தன் குழந்தையின் மீது கருணையுடன் திகழ்வாளோ, அப்படியே ஆதிபராசக்தியும் நம்மீது கருணையுள்ளம் கொண்டவளாக விளங்குகின்றாள். அவ்வகையில் நம்மையெல்லாம் ரட்சிக்க வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வடிவங்கள் எடுத்து அருள்பாலிக்கிறாள். அவற்றில் ஒன்றுதான் காளிமாதா திருவடிவம்.
அனைத்து காலங்களிலும் நம்மை காக்கக் கூடிய சக்தியே காளி. `பத்ரம்’ எனில் நன்மை. எனவே அவளை பத்ரகாளி எனச் சிறப்பிக் கிறோம். அதாவது அனைத்து காலங்களிலும் நன்மை செய்பவள் என்று போற்றுகிறோம். இந்த அன்னையை வழிபட்டால் யம பயமே இல்லை என்கின்றன ஞானநூல்கள்.
மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கி இருக்கும் நிலையில், `அவள் ஒருவளே ஆதி சக்தி’ என்பதை உணர்த்துவதே ஆகும். ஆகவே உருவம், உறைவிடம் குறித்த வீண் சஞ்சலம் தேவை யில்லை.
அவள் எல்லா யுகங்களிலும் நமக்கு நன்மை அளிப்பினும், கலிகாலத்தில் உயரிய பலன்களை அருள்பவளாகத் திகழ்கிறாள். ‘பயப்படவேண்டாம், நான் அபயம் அளிக்கிறேன்’ என்று பிள்ளைகளா கிய நம்மை எப்போதும் சகலவிதமான ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி அருள்வாள் காளிதேவி.
காளியை வழிபடுபவர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பலம், புஷ்டி, பெரும் கீர்த்தி, கவி புனையும் சக்தி, போக மோக்ஷம் முதலான உயர்ந்த பலன்களை அடைவர். காளியின் அனுக்கிரஹத்தால் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. காளி உபாசகனே புண்ணியசாலியாகவும், குலம் தழைக்கச் செய்யும் புத்திரனாகவும் ஆகிறான். அவன் ஜீவன் முக்தனாகவும் விளங்குகிறான். காளியை வழிபடுவதால், தெற்கு திசையின் அதிபதியான யமதர்மராஜனைப் பற்றிய பயம் நம்மை அணுகாது.
சிவம்-சக்தி இரண்டும் ஒன்றே; பிரிக்க முடியாதவை; நித்தியமானவை. காளி தேவி நித்தியமானவள். மகா மாயா ஸ்வரூபிணி. அவளுக்கு ரூபம் என்பது கிடையாது. ஒளிமயமானவளும் காலத்தை நடத்துபவளுமாகிய பராசக்தி, தீய சக்திகளை அழித்து நல்லோரைக் காப்பதற்காகவே தாமஸ, ராஜஸ, ஸாத்வீகக் குணங்களுக்கும் தாம் செய்ய வேண்டிய காரியங்களுக்கும் உகந்தவாறு ரூபங்களை ஏற்று அருள்பாலிக்கிறாள்.
தெற்கில் இருக்கும் யமன் இவளின் திருப்பெயரைக் கேட்க பயம் கொள்வான் என்பதால் தக்ஷிணகாளி எனப்படுகிறாள். இன்னொரு காரணமும் சொல்லலாம். மோக்ஷத்தை அளிக்கக்கூடிய சிவஞானத்தை அருளும் ‘சிவஞான ப்ரதாயினியாக’ விளங்குவதாலும் அவள் `தக்ஷிணகாளி’ எனப் போற்றப்படுகிறாள் என்றும் ஞான நூல்கள் விளக்குகின்றன.
ஆதி காளி, பத்ரகாளி, ச்மசான காளி, கால காளி, குஹ்ய காளி, காமகலா காளி, தன காளி, ஸித்தி காளி, சண்டி காளி, டம்பர காளி, கஹனேச்வரீ காளி, ஏகதாரா காளி, சாமுண்டா காளி, வஜ்ராவதீ காளி, ரக்ஷா காளி, இந்தீவரீ காளி தனதா காளி, ரமண்யா காளி, ஈசான காளி, மந்த்ரமாலா காளி, ஸ்பர்சமணி காளி, ஸம்ஹார காளி, தக்ஷிண காளி, ஹம்ஸ காளி, வீர காளி, காளி, காத்யாயனி, சாந்தா, சாமுண்டா, முண்டமர்தினி, பத்ரா, த்வரிதா, வைஷ்ணவி என்று காளியை பல வடிவங்களில் வர்ணிக்கின்றன ஞானநூல்கள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

Comments by Dr. N. Somash Kurukkal