தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!!
மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், பெண்ணுக்கு எந்தக் குறையும் தகுதி இழப்பும் இல்லை. ரிஷிகளும் வராஹமிஹிரர் முதலான ஜோதிட மேதைகளும் இயற்றிய நூல்களில், ‘பெண் மூலம் நிர்மூலம்’ என்பற்கான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் வந்த நூல்களில்… யாரோ எவரோ பொன் பொக்கில் சொல்லி வைத்த வாசகம் இது!
மனிதர்கள் அனைவரும், 27 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில்தான் பிறந்தாக வேண்டும். காலத்தின் இணைப்பை மனிதனுக்கு அளிப்பதே நட்சத்திரங்களின் வேலை (நக்ஷத்ரேண யுக்த கால). அதன் இயல்புகள் மனி தனிடம் ஒட்டிக் கொள்ளாது. ஒருவனது இயல்புக்கு அவனது கர்ம வினைகளே ஆதாரம்.
ஆகவே, பாமரர்களை நம்ப வைப்பதற்காக சொல்லி வைக்கப்பட்ட இதுபோன்ற வாசகங்களை ஏற்கக் கூடாது. நாமே ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
‘மூல நட்சத்திரத்தில் பிறந்தவளை மணந்ததால், தன் தகப்பனை இழந்தான்; அவனது செயல்பாடுகள் நிர்மூலமானது’ என்று கூறி, ‘பெண் மூலம் நிர்மூலம்’ எனும் வார்த்தையை தேவையில்லாமல் உறுதிப்படுத்துகிறவர்களும் உள்ளனர்!
அது மட்டுமா? இந்த நட்சத்திரம்… இது பொருந்தாது… என்று ஓர் அட்டவணையை நம்பி, அவதிப்படும் பெற்றோர் அதிக அளவில் உள்ளனர்!
‘ஒருவரது ஆயுள், அறிவு, செயல்பாடு மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைத்தும், அவர் கருவறையில் இருக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன!’ என்று பலதீபிகை எனும் நூலில் விளக்குகிறார் மந்த்ரேச்வரர் (ஆயு கர்மச). ஆக, கர்ப்பத்தில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒருவரது ஆயுள்… பிற்காலத்தில், மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் ஒருத்தி, மருமகளாக வருவதால், எப்படி பாதிக்கப்படும்?
தவிர… அவள் பிறந்த மூல நட்சத்திரம், கணவனையோ, மாமியாரையோ பாதிக்காமல், மாமனாரை மட்டும் எப்படி பாதிக்கும்? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் நம்பலாம்.
மரணம், பொருள் இழப்பு மற்றும் காரியத் தடைகள் ஆகியவற்றுக்கு நேரடிக் காரணங்கள் பல இருக்க… நட்சத்திரத்தைக் காரணம் காட்டுவது தவறு.
பரணிப் பெண் தரணி ஆள்வாள், சித்திரை அப்பன் தெருவிலே, கேட்டை ஜ்யேஷ்டனுக்கு ஆகாது…
இது போன்ற சொல்வழக்குகள் ஏற்புடையவை அல்ல. வரும் தலைமுறையினர் புத்திசாலிகள். அவர்களை, இதில் சிக்க வைக்காமல் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு.
இன்னொரு விஷயம்… சரஸ்வதிதேவிக்கு ஏது பிறப்பு?! ‘மூல நட்சத்திரத்தில் ஸ்ரீசரஸ்வதிதேவியின் ஆராதனை ஆரம்பம் ஆகட்டும்’ என்கிறது தர்மசாஸ்திரம் (மூலேன ஆவாஹயேத் தேவீம்).
‘மூல நட்சத்திர தேவதையை வணங்க வேண்டும். படைப்புக் கடவுள் அதன் தேவதை. சுறுசுறுப்பான, வீரம் மிக்க குழந்தைகளை அளிக்க வேண்டும். எதிரிகளை வென்று, இன்னல்களை அகற்ற வேண்டும். குடிமக்களுக்கும் எனக்கும் மங்களத்தை அளிக்க வேண்டும்’ என்ற தகவல் வேதத்தில் உண்டு. ஆக, மூல நட்சத்திரத்தை நன்மை தரும் நட்சத்திரமாகவே சொல்கிறது வேதம் (மூலம் ப்ர ஜாம் வீரவதீ…). எனவே, மூல நட்சத்திரம் குறித்து தவறான எண்ணம் வேண்டாம்! அவற்றை பரப்ப வேண்டாம்! நம்பவும் வேண்டாம் நண்பர்களே!!!
ஆதாரம் இல்லாத பல தகவல்கள் ஜோதிட நூல்களில் உண்டு. இது பற்றி சோதிடரிடம் வினவுங்கள் , எந்த வித உதாரணங்களும் இன்றி , பதில் எதுவும் சொல்ல இல்லாமல் ”’முன்னோர்கள் சொன்னதை சொல்கிறேன்”’ என்று சொல்லி அகன்று விடுவர் !!! அவர்களது சொற்களையும் நாம் பின்பற்றக் கூடாது. நாம்தான் எமது வாழ்க்கையை தேர்ந்து எடுக்க வேண்டும் எமது அறிவைப் பயன் படுத்தி !!!
நன்றி: ப்ரம்மஸ்ரீ செஷாத்திரி நாத சாஸ்திரிகள்.
தொகுப்பு :
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com