தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஷோடசோபசார பூஜை என்றால் என்ன? அதன் விரிவாக்கம் என்ன? அறிவோம்!!!
ஆலயங்கள் உட்பட பல வழிபாட்டு இடங்களில் பல பூஜை முறைகளைப் பார்க்கிறோம். அவற்றை அப்படியே வணங்கி விட்டு வராமல் என்னசெய்கிறார்கள்? எப்படி வழிபாடு இயற்றுகிறார்கள் என்பதையும் சற்று உள் வாங்குவோம் நண்பர்களே!!!
‘ஷோடசம்’ – என்றால் பதினாறு. உபசாரம் என்றால் பணிவிடை. பணிவிடையின் அட்டவணையில் 16 இனங்கள் உண்டு. பணிவிடை பலவாறாக இருந்தாலும், 16 உபசாரங்களில் முழுமையான பணிவிடையை முடித்துத் தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்.
இறைவனின் அழகு வடிவை மனதில் இருத்த வேண்டும் (த்யானம்). இறையுருவத்தில் இறைவன் ஸாந்நித்தியத்தை வரவழைக்க வேண்டும் (ஆவாஹனம்). இருக்கை அளித்து அமரச்செய்ய வேண்டும் (ஆசனம்).
அவரது பாதங்களை சுத்த நீரால் தூய்மைப்படுத்த வேண்டும் (பாத்யம்). அவருடைய கைகளில் நீர் அளித்து வரவேற்க வேண்டும் (அர்க்யம்). புறச் சுத்தம் முடிந்த பிறகு, அகத் தூய்மைக்கு ஆசமனீயம் அளிக்க வேண்டும் (ஆசமனீயம்). இன்சுவை அளித்து மனம் மகிழ வைக்க வேண்டும் (மதுபர்க்கம்).
வாய் மந்திரம் ஓத, கைகள் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும் (ஸ்னானம் – ஆசமனீயம்). உடுக்க உடை அளிக்க வேண்டும் (வஸ்திரம், உத்தரீயம்). நெற்றித் திலகம் அளிக்க வேண்டும் (சந்தனம், குங்குமம்). அழிவில்லாதவனுக்கு அட்சதை அளித்து வழிபட வேண்டும் (அஷதான்). அவருடைய அங்கங்களுக்கு ஆபரணம் அளிக்க வேண்டும் (ஆபரணான). இரண்டு கைகளாலும் புஷ்பத்தை அள்ளி அளிக்க வேண்டும் (புஷ்பாணி).
நறுமணத்துக்கு தூபம் அளிக்க வேண்டும் (தூபம்). கண்களுக்கு தீப ஒளியைக் காட்ட வேண்டும் (தீபம்). அறுசுவை உணவை அளிக்க வேண்டும் (நைவேத்தியம்). தாம்பூலம் அளிக்க வேண்டும். அலங்கார தீபம், பஞ்சமுக தீபம் போன்றவற்றைக் காட்டி மகிழ்விக்க வேண்டும். உபசாரத்தில் மகிழ்ந்த முகத்தைப் பார்க்க கற்பூரத்தைக் காட்ட வேண்டும் (கற்பூரநீராஜனம்). இறை வடிவத்தின் உள்ளே ஒளி வடிவாக உறைந்திருக்கும் இறைவனை நினைவுகூரும் எண்ணத்துடன் ஜோதி வடிவில் கற்பூரத்தைக் காட்ட வேண்டும். ஜோதியில் கை வைத்து அதன் வெப்பத்தை ஏற்று,
நமது உடம்பிலும் இறைவனை இணைத்துக் கொள்ள வேண்டும்.
மந்திரம் ஓதி புஷ்பத்தை அளிக்க வேண்டும் (மந்திர புஷ்பம்). மங்கலப் பொருளான தங்கத்தை அளிக்க வேண்டும் (சுவர்ண புஷ்பம்). அவரது பெருமைகளைச் சொல்லி புஷ்பத்தை அளிக்க வேண்டும் (அர்ச்சனை). அவனை வலம் வந்து வணங்க வேண்டும் (பிரார்த்தனை).
அவருடைய பாத நீரைப் பெற்றுக் கொண்டு, அவரின் பாதத்தில் இருக்கும் புஷ்பத்தையும் நம் சிரஸ்ஸில் அணிய வேண்டும் (தீர்த்தம், ப்ரசாதம்). இது, முழு பணிவிடையாக அமைந்துவிடும்.
இத்துடன் நிற்காமல் சிறப்பு உபசாரங்களையும் அளிக்கலாம். வெண்கொற்றக் குடையை அவனுக்கு அளிக்கவேண்டும் (சத்ரம்). இருபுறமும் வெண்சாமரம் வீச வேண்டும். நாட்டியம் ஆடி மகிழ்விக்க வேண்டும் (நாட்யம்). தாளத்துக்கு ஒப்பான நிருத்யத்தை அளிக்க வேண்டும் (நிருத்தம்). பொன்னூஞ்சலில் அமரச் செய்து ஆனந்தத்தை ஊட்ட வேண்டும் (ஆந்தோளிகாம்). தேரில் அமரச் செய்து மகிழ வேண்டும். குதிரையிலும், யானையிலும் பவனி வரச் செய்ய வேண்டும். (அச்வான், கஜான்). அரசனுக்கு உகந்த உபசாரம், தேவர்கள் மகிழும் உபசாரம், வேதம் உரைக்கும் உபசாரம்… எதெல்லாம் உபசாரமாகத் திகழுமோ அத்தனையையும் அளிக்க வேண்டும்.
உடலுக்கும், உள்ளத்துக்கும், புலன்களுக்கும் எவையெல்லாம் மகிழ்ச்சி அளிப்பதாக நாம் உணரு கிறோமோ… நாம் பெற்ற இன்பம் அத்தனையும் இறைவனுக்கும் தரும் நல்லெண்ணமே உபசாரமாக மலர்கிறது. நிறைவை அடைந்தவன், ஆனந்த வடிவினன் என்பதை உபசாரம் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். உருவமற்றவனுக்கான உபசாரங்களை உருவம் வாயிலாக நிறைவேற்றுகிறோம். நம்மிடம் இருக்கும் அத்தனைப் பொருட்களும் அவனது படைப்பு; அவனுக்குச் சொந்தம். அவனுக்கான பணிவிடையில் மலரும் பக்தியே நமக்குச் சொந்தம். பக்தியை வெளிக்காட்ட 16 உபசாரங்கள் அவசியம். தினம் தினம் பணிவிடையில் கவனம் செலுத்தினால் இறைவன் தேவைப்படும்போது நம்மை கவனிப்பான்.
நண்பர்களே! சிந்தித்துப் பாருங்கள். நாம் வெளிப்படுத்தும் பக்தியை ஏற்க உபசாரம் வாயிலாக விண்ணப்பிக்கிறோம். வழிபடுகிறோம். வழிபடுவோம்! 16 உபசாரங்களை முறையோடு செயல்படுத்துங்கள்; பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வீர்கள்.
வாழ்க வளமுடன்!!!
நண்பர்களே , ஓர் அன்பான வேண்டுகோள், நீங்கள் எங்கள் பதிவுகளை உங்கள் முக நூல் சுவரில் மீள் பதிவு செய்ய விரும்பினால் (share) அதை அப்படியே பகிருங்கள். மேலேயும் வெட்டி கீழேயும் வெட்டி உங்கள் முக நூல் சுவரில் பகிர்வது நல்ல செயலாகாது . எங்கள் நிறுவனம் பல ஆன்மீக நூல்களில் இருந்து நல்ல விடயங்களை தேடி எடுத்து தொகுத்து பதிவிடும்போது, அதன் நேரம் பொறுப்பு ஆகியவற்றை உணர்ந்து அறிந்து எங்கள் பதிவுகளை, தொகுப்புகளை அப்படியே பகிருங்கள். மிக்க நன்றி!!!
பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
Comments by Dr. N. Somash Kurukkal