‘ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி’ என்பதைத்தான் நாம் அறுபதாம் கல்யாணம் என்கிறோம். அறுபது வயது நிறைவு பெறும்போது செய்யப்படுகின்ற ஒரு சாந்தி பரிகார பூஜை இது. ,அறுபது என்பது ஒரு சுழற்சி. இந்த அடிப்படையில் அறுபது ஆண்டு முடிவடையும் தருவாயில் மனிதன் புனர்ஜென்மம் பெறுகிறான்.
எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மறுபிறவி என்றுகூட சொல்லலாம். அறுபது வயதுவரை தான், தனது குடும்பம் என்று வாழ்ந்து வந்த மனிதன், அதற்குப் பிறகு ஞான மார்க்கத்தை நாடி தனது இந்த பிறப்பிற்கான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும், தன்னைச் சுற்றியுள்ளோருக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவும், இந்தப் பிறப்பினில் அவரது ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுவதே இந்த ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி. வயதில் மட்டுமல்லாது, குணத்திலும் சீனியர் சிட்டிசன் ஆக பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வு இது.
பெண்ணின் மாங்கல்ய பலத்தினால் கணவனின் ஆயுளும் நீடிக்கும் என்ற நம்பிக்கையில் தாலி கட்டும் சம்பிரதாயமும் உண்டு,. தாலி கட்டுவதால் அறுபது ஆண்டு நிறைவு சாந்தி என்பது அறுபதாம் கல்யாணம் என்று பெயர் பெற்றுவிட்டது. உண்மையில் கல்யாணம் என்ற வார்த்தைக்கு பலபேர் கூடி ஒன்றாக இணைந்து செய்கின்ற மங்களகரமான நிகழ்வு என்றுதான் பொருள். பாலகனாக இருந்த சிறுவன் பிரம்மச்சரியத்திற்குள் நுழையும்போது செய்யப்படுகின்ற உபநயனம் என்பதைக்கூட பூணூல் கல்யாணம் என்றுதான் சொல்வார்கள்.
மனிதனின் வாழ்க்கையில் அவசியம் செய்யப்பட வேண்டிய சாந்தி பூஜை இது என்று சாஸ்திரங்களும் கூறுகின்றன. சொல்லப் பட்ட சாந்தி விதிகளுடன், கற்று அறிந்த சாஸ்திரிகளின் வழிகாட்டலில் இந்த சாந்தியை செய்யும் போது மிகுந்த பலன்,பலம் உண்டு நண்பர்களே!
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ( E Magazine Editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Org,
www.modermhinduculture.com
Comments by Dr. N. Somash Kurukkal