எங்களை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து வளர்த்து ஆளாக்கி சகலமும் செய்த எங்கள் மறைந்த மூதாதையர், பெற்றவர்கள்
,பெரியவர்கள் எல்லோரையும் வழிபடுவோம். இல்லை என்றால் அவர்களுக்கு எப்படி நன்றி செலுத்தப் போகிறோம் நண்பர்களே???
பித்ருலோகம் என்று அழைக்கப்படும் முன்னோர்களின் உலகத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கும் மூன்று ஆசனங்கள் உண்டு. இந்த மூன்று ஆசனங்களிலும் மூன்று வடிவத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு முறையே வஸூ, ருத்ர, ஆதித்ய ரூபம் என்று பெயர். அதாவது தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா இவர்கள் மூவரும் முறையே வஸூ, ருத்ர, ஆதித்ய ரூபங்களில் முன்னோர்களின் உலகத்தில் வசிப்பார்கள். இவர்கள் மூவருக்கும் உணவளிக்க வேண்டிய கடமை அந்த வம்சத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உண்டு.
எனவே தான் சிராத்தம் செய்யும்போது இவர்கள் மூவரின் பெயர்களைச் சொல்லி பிண்டங்களை வைக்கிறார்கள். தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு கொள்ளுத் தாத்தாவின் பெயர் சரியாகத் தெரிவதில்லை. அவ்வாறு பெயர் தெரியாத பட்சத்தில் அந்த உறவுமுறையின் பெயரைச் சொல்லி அதாவது ப்ரபிதாமஹம் ஆதித்ய ரூபம் என்று சொல்லிச் செய்ய வேண்டும். பெற்ற தகப்பனுக்கு சிராத்தம் செய்யும்போது, தந்தை – பிதரம் – வஸூ ரூபம், தாத்தா (தந்தையின் தந்தை) – பிதாமஹம் – ருத்ர ரூபம், கொள்ளுதாத்தா
(தாத்தாவின் தந்தை) – ப்ரபிதாமஹம் – ஆதித்ய ரூபம் என்ற வரிசையில் அவர்களின் பெயர்களைச் சொல்லி மூன்று பிண்டங்கள் வைக்க வேண்டும். பெயர் தெரிந்தால் சொல்லலாம். தெரியாதவர்கள் உறவுமுறையையும், அவருக்கு உரிய ரூபத்தின் பெயரையும் சொல்லிச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. பெயர் தெரியவில்லை என்ற காரணத்திற்காக சிராத்தம் செய்யாமல் விட்டால்தான் தவறு. சிராத்தம் செய்யாமல் விட்டால் அதற்குரிய பாவம் நிச்சயம் வந்து சேரும். இந்த மூன்று ரூபங்கள் தகப்பன் வழிக்கு மட்டுமல்ல,
தாயார் (மாதரம் – வஸூ ரூபம்), பாட்டி (தாயாரின் மாமியார் – பிதாமஹி – ருத்ர ரூபம்), கொள்ளு பாட்டி (பாட்டிக்கு மாமியார் – ப்ரபிரதாமஹி – ஆதித்ய ரூபம்) என்று பெண்கள் வழியிலும் உண்டு. இறந்து போன தாயாருக்கு சிராத்தம் செய்யும்போது மேற்சொன்ன மூவரின் பெயர்களையும் சொல்லி பிண்டம் வைத்து வழிபட வேண்டும். முன்னோர்கள் உலகில் இந்த மூவரின் ஆன்மாவும் வசித்து வருகிறது என்ற நம்பிக்கையில்தான் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களின் பெயர்களை திதி கொடுக்கும்போது சொல்கிறார்கள்.
என்றும் பெரியவர்களுடைய ஆசிகளை வேண்டுவோம்.
 

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization.
www.modernhinduculture.com