தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆவணி மாத சிறப்புகள் சிலவற்றை பாப்போம்!
இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் இரண்டே இரண்டு நட்சத்திரங்கள்தான் திரு என்ற அடைமொழியுடன் உள்ளன. முதலாவது திருவாதிரை. அது சிவனுக்குரியது. அடுத்தது திருவோணம். அது பெருமாளுக்குரியது.
வடமொழியில் சிரவண நட்சத்திரம் என்றழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி வருவதால் சிரவண மாதம், ஆவணி மாதம் ஆகியது. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் முதலான நான்கு புருஷார்த்தங்களையும் தரக்கூடியதாக திருமாலின் நட்சத்திரமாக திருவோணம் அமைந்துள்ளது.
சிம்ம ராசிக்குரியவர் சூரியனாதலால் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவணியை சிங்க மாதம் என்று கூறுகிறார்கள். அம்மாதத்தையே அவர்கள் ஆண்டின் முதல் மாதமாகவும் கருதுகின்றனர்.
ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் ஆண்களுக்காகக் கொண்டாடப்படும் பண்டிகைதான் ஆவணி அவிட்டம். யஜுர் வேதத்தைப் பின்பற்றுகிறவர்கள் இந்தச் சடங்கைக் கொண்டாட இயலாதபடி ஏதாவது குறைபாடு இருந்தால் புரட்டாசி மாத பௌர்ணமியில் அதை மேற்கொள்வது வழக்கம். ரிக் வேதிகள் சிரவண நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது இதனை அனுசரிக்கிறார்கள். சாமவேதிகள் ஹஸ்த நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய நாளில் உபாகர்மம் நடத்துகின்றனர். வேறு விதமாக உபாகர்மம் கொண்டாடும் சாமவேதிகளும் உண்டு
புதுப் பூணூல் அணிந்து கொள்வதால் இப்பிறவியிலேயே மற்றொரு பிறவி எடுத்ததாக பொருள். அதனால்தான் பூணூல் அணிபவர்களை துவிஜர்( இரு பிறப்பாளர்) என்று குறிப்பிடுவார்கள்.
ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.
ஆதலினால்தான் ஆவணிமாத ஞாயிறு சிறப்பாகிறது. ஞாயிறு என்றால் சூரியன் என்று பொருள்.