அக்ஷய திருதியை Print E-mail
Written by Dr. Somash   

மாசந்தோறும் வருகின்ற திதிகளிலே ஒரு சில மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வளர்பிறைத் திதிகளிலே சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி திரயோதசி, பூரணை, முதலானவைகளும்,, தேய்பிறைத் திதிகளிலே சதுர்த்தி, திரயோதசி, அமாவாசை ஆதியனவும் விசேஷமானவை. இவற்றுள் சில பூஜா-ஹோமங்களுக்கும், வேறு சில பிதிர் வழிபாடு தர்ப்பணங்களுக்கும் சிறப்புடைய விரதநாட்களாக அமைகின்றன.

 

ஆனால் சித்திரைமாத வளர்பிறைக்காலத்தில் மூன்றாம் நாளாகிய திருதியைத் தினம், குறைவடையாத விருத்தியைத் தரும் சிறப்புநாளாகக் கருதப்படுகின்றது. இதனை அக்ஷய திருதியை என்று அழைப்பர். சயம் என்றால் குறைவடைதல் எனவும், அட்சயம் என்றால் குறைவடையாதது எனவும் பொருள்படும். அன்று ஒவ்வொருவரும் தமக்கு சகல செல்வங்களையும் பெருக்குவதற்காக மஹாலட்சுமியை வழிபடுவர். அன்றையதினம் பொன்னையும் வேறு தமக்குப் பிடித்தமான பொருளையும் வாங்கிக் குவிப்பர். ஏழைகள்கூட அன்றையதினம் ஒரு குண்டுமணியளவு பொன்னை வாங்கிச்சேர்த்தால், மஹாலட்சுமியின் நல்லருளால் நாளடைவில் தமக்கு வேண்டியளவு பொன்னும், மணியும், பொங்கிவழியச் செய்வாள் என்பது நம்பிக்கை. வசதிபடைத்தவர்கள் பொற்காசுகளையும், பொற்பாளங்களையும் வாங்கி வங்கிகளில பத்திரப்படுத்துவர். வருடாவருடம் சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை அனைவருக்கும் குறைவிலா நிறைவையளிக்க நாமும் பிரார்த்திப்போம். சுபம்.