மன அழுத்தம்-தனிமைக்கு இடம் கொடாதீர்கள்! Print E-mail
Written by Dr. Somash   

மன அழுத்தம்-தனிமைக்கு இடம் கொடாதீர்கள்!

மனிதன் ஒரு சமூகப்பிராணி. உயிர் வாழ்வதன் அடிப்படை தேவை களுக்கு அடுத்தபடியாக வருவது, சக சமூகத்தின் அங்கீகாரம். இது கிடைக்காது போகும்போது வாழ்வில் வெறுமை சூழும். மன அழுத்தம் அதிகமாகி, அன்றாட நடவடிக்கைகள் தடம்புரள ஆரம்பிக்கும். உங்கள் பிரச்னையைத் தெளிவாக அடையாளம் காண முடிந்த வகையில் நீங்கள் இதை மேலும் ஆழமாகக் கவனித்து சில திருத்தங்களை மேற்கொண்டால், சீக்கிரமே வெளிவந்துவிடலாம்.

பொதுவாக, 5 முதல் 12 வயதிலான வளர்ப்புச்சூழலே, குழந்தைகளின் பிற்காலத்திய சமூகச்சூழலின் இணக்கத்துக்கு அடித்தளமாகிறது. பெற்றோர் மற்றும் குடும்பத்தாரின் அங்கீகாரம் இந்த வயதுக் குழந்தைகளுக்குப் பரிவாகவும் அரவணைப்பாகவும் கிடைத்தாக வேண்டும். இதில் சமநிலை தவறும்போது, குழந்தைப் பிராயம்தொட்டே தாழ்வு மனப்பான்மை முளைவிட்டு, இவர்கள் நாளடைவில் கூச்ச சுபாவியாக உருவெடுப்பார்கள். இது, தனி ஆளுமைத்திறனைப் பாதித்து, எப்போதும் சிறு வட்டத்துக்குள்ளேயே உழல்பவர்களாக அவர்களை மாற்றிப் போட்டுவிடும். பிற்பாடு இந்த தனிமை தரும் அழுத்தம், பகல் கனவு போன்ற வடிகால்களை அவர்களுக்கு திறந்துவிட, தனிமை இன்னமும் ஆழமாகும். பகல் கனவு கூறுகள் தரும் எதிர்பார்ப்புகள், நிஜத்தில் முரண்பட்டு நிற்க, சக சமூகத்தினரோடு சதா பிரச்னைதான். தான் நினைப்பதை, சொல்வதை பிறர் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்கிற பிடிவாதம் இவர்களுக்குள் வேரூன்றி இருக்கும்.

வளர்ப்பு மட்டுமல்லாது... தன்னிடம் இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கருதும் ஒரு சில குறைபாடுகளுமே அவர்களை சக மனிதர்களிடம் இருந்து துண்டிக்கக்கூடும். உடல்ரீதியான குறைபாடு, அழகு, திறமை என சக வயதினரோடு தன்னைத்தானே ஒப்பிட்டுக் கொள்ளும்போது தலையெடுக்கும் தாழ்வு மனப்பான்மையும் இதில் சேரும். தனிமை, தாழ்வு மனப்பான்மை எல்லாமே கலந்துகட்டி, ஒரு கட்டத்தில் சமூகத்தோடு இயைந்துபோகாத 'அட்ஜஸ்ட்மென்ட் பிராப்ளம்' என்கிற பெயரில் மனநல குறைபாடாக உருவெடுக்க வாய்ப்புண்டு.  வாழ்க்கையே நரகமாகிவிடும்.

அந்தளவுக்கு பிரச்னையை வளரவிடாமல்,  சில மாற்றங்கள் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். சக நண்பர்களிடம்  நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ... அதை வஞ்னையின்றி அவர் களுக்கு வாரி வழங்குங்கள். உங்கள் புன்னகையைப் பரப்புங்கள். உங்களிடம் இருப்பதை பிறரிடம் பகிர்ந்து கொள்ளுங் கள். உணவு, உடை, அலங்காரம், நல்ல விஷயம்... எதுவானாலும் மனமுவந்து பாராட்டுங்கள். சந்திப்புகள், விசாரிப்புகள், நிகழ்வுகள் எது நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

உங்களை ஏற்றுக் கொள்ளும், உங்களை மதிக்கும் நண்பர்கள், உறவினர்களை  அடையாளம் கண்டு அந்த உறுப்பினர்களோடு கூடுதல் நேரம் செலவழியுங்கள். நேரில் பார்க்க நேரமின்றி போனாலும்,தொலைபேசி ... எஸ்.எம்.எஸ், சமூக தளங்கள் என்று எப்போதும் தொடர்பை உயிர்ப்போடு வைத்திருங்கள். சக நண்பர்கள்  ஏதாவது குறையை சுட்டிக்காட்டினால்... சரிசெய்ய முனையுங்கள். உங்களது தனித்தன்மை மற்றும் தனிநபர் திறனை வளர்த்துக் கொள்ள தோதான உபாயங்களில் இறங்குங்கள். உள்ளுக்குள் அடிவாங்கியிருக்கும் சுயமதிப்பு செழித்து வளர ஆரம்பித்ததும்... தானாகவே தனிமையும் விலகி ஓடுவதைப் பார்ப்பீர்கள்.