மாநிறமா மயங்க வேண்டாம் கருப்பு நிறமா கவலை வேண்டாம்! Print E-mail
Written by Dr. Somash   

மாநிறமா மயங்க வேண்டாம் கருப்பு நிறமா கவலை வேண்டாம்!

நம்மில் பலருக்கும் சிவப்பு அல்லது வெள்ளை நிறத் தோலின்மீது எப்போதுமே தீராத ஒரு கிறக்கம். குறிப்பாகப் பெண்கள் சிவப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.  ஆனால் மேலை நாட்டவர்களுக்கோ தங்களின் வெள்ளை வெளேர் நிறம் பிடிப்பதில்லை. அதைக் கருப்பாக்கிக் கொள்வதற்காகக் கடற்கரைகளில் சூரிய ஒளியில் புரளுகிறார்கள். இதை 'டானிங்’ என்றும் (Tanning) சூரியக் குளியல் (Sun bath)  என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

நம்மவர்களில் பலர் தாங்கள் மாநிறமாக இருப்பதாகவோ அல்லது கருப்பு நிறம் கொண்டவர்களாக இருப்பதாகவோ நினைத்து லேசான மன உளைச்சலுடனே இருக்கிறார்கள். சந்தையில் விற்கப்படும் பலவிதமான, சரும நிறத்தை மாற்றும் (Fairness Cream) கிரீம்களையும் அள்ளிப் பூசிக்கொள்கிறார்கள். அடுத்த நாளே நிறம் மாறிவிட்டோமா? என்று கண்ணாடி முன் நின்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

சரி! தோலின் நிறத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள்? கிரீம்கள் உண்மையிலேயே தோலைச் சிவப்பாக்கிவிடுமா?

''மனிதர்களின் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலில் இருக்கும் 'மெலனின்’ என்ற நிறமிகள்தான். மெலனின் அதிகம் உள்ளவர்கள் கருப்பாகவும் மெலனின் அளவு குறைந்தவர்கள் வெளுப்பாகவும் இருப்பார்கள். உடம்பில்கூட வெயில் படுகின்ற இடங்களுக்கும், எப்போதும் ஆடையால் மூடப்பட்டிருக்கும் பாகங்களுக்கும் நிற வேறுபாடு இருப்பதைப் பார்க்கலாம்.

தோலின் கீழ் அடுக்கில் உள்ள 'மெலனோஸைட்’ (Melanocytes)  என்னும் வகையைச் சேர்ந்த         செல்கள்தான் மெலனினை உற்பத்தி செய்கின்றன. இந்த மெலனின்தான் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோலுக்குள் ஊடுருவும் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இவை அதிகமாகும்போது தோலுக்குக் கெடுதல் விளைவிக்கக்கூடும். மெலனின் உற்பத்தி    குறைவானவர்களுக்குத் தோல் நோய்கள் வரும்  வாய்ப்புகளும் அதிகம். தோல் புற்றுநோய்கூட வர வாய்ப்பு உண்டு. சுருக்கமாகச் சொன்னால் வெள்ளையாக இருப்பவர்களைவிடக் கருப்பாக இருப்பவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இயற்கையிலேயே அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் புற ஊதாக் கதிர்கள் உடலில் உள்ள 'ஃபோலிக்’ அமிலத்துடன் வினைபுரிந்து, அமிலத்தைச் சேதப்படுத்தி, பல கெடுதல்களை உடலுக்கு ஏற்படுத்துவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நண்பகல் நேரத்தில் புற உதாக் கதிர்கள் மிக அதிகமாக ஊடுருவும் வாய்ப்பு இருப்பதால், எந்த நிறத்தவர்களாக இருந்தாலும் அப்போது சூரிய ஒளி படும்படியாக அதிக நேரம் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொப்பி, முழுக்கைச் சட்டை போன்றவற்றை அணிவதும் நல்லது. குடையையும் பயன்படுத்தலாம்.''

சிவப்பழகைத் தருமா ஃபேர்னெஸ் கிரீம்கள்?

பல கிரீம்களில் ஸ்டீராய்டு மருந்துகளைக் கலந்திருப்பார்கள். இவை ஆரம்பத்தில் ஓரளவு பயன் தரலாம். தரம் குறைந்த கிரீம்கள் நேரடியாகத் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக் கூடும். இன்னும் சில, மெலனின் உற்பத்தியைக் குறைக்கும் அல்லது நிறுத்திவிடும்.  மெலனின் குறைந்தாலே தோல் வெளுக்கும்தானே! ஆனால் இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சருமத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடும். மேலும் முன்பிருந்த நிறம் மாறி மிகவும் கருப்பாக ஆகிவிடவும் வாய்ப்பு உண்டு. அந்த நிலைமைக்கு 'ஆக்ரொனோசிஸ்’ (Ochronosis) என்று பெயர். இதைக் குணப்படுத்துவது கஷ்டமே! ஆகவே, நண்பர்களே இயற்கை தந்த அழகுடன் சந்தோஷாமாக திருப்தியுடன் வாழ  கற்றுகொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.