ரொமான்ஸ் ரகசியங்கள்! Print E-mail
Written by Dr. Somash   

ரொமான்ஸ் ரகசியங்கள்!

மீண்டும் மீண்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம், மனிதர்கள் நினைப்பதுபோல காதல், கல்யாணம் என்பன வெல்லாம், யாரோ இருவர் சும்மா கொஞ்சம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று இயற்கை கொடுத்த உந்துதல்கள் அல்ல.  மிக அப்பட்டமாகவே காதலும், திருமணமும் வம்சாவிருத்திக்காக இயற்கை ஏற்படுத்திய சடங்குகள் மட்டுமே. இந்த 'பிஸினஸ் ஆஃப் ரீபுரொடக்ஷன்'  (Business of reproduction) என்பதை செவ்வனே செய்ய, ஆண் என்னென்ன கடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும், பெண் எந்தெந்த கடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்குமே தெளிவு வேண்டும்!

முன்பெல்லாம் ஆண் என்றால் உணவு, உறைவிடம், பாதுகாப்பு ஆகியவற்றைத் தர வேண்டியவன்; பெண் என்றால், பேணுதல், அன்பு காட்டுதல், பராமரிப்பு செய்பவள் என்று இருந்தது. இன்று, துணைவருக்கு துரதிஷ்டவசமாக ஏதும் நேராவிட்டாலும்... காலம், சூழல், தேவை, வசதிகளைக் கருதி பராமரித்தல், பேணுதல் என்கிற இந்த இரண்டு கடமைகளையும், பாலின பிரிவினை இல்லாமல், ஆணும் பெண்ணும் சரிசமமாகச் செய்யப் பழகுகிறார்கள். இதுதான் இன்றைய என் வேலை, இதை செய்தாக வேண்டியது அவசியம் என்று உணர்ந்துவிட்டால், எப்படி யும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு அந்தப் பணியை நல்லபடியாக செய்து முடிப்பதுதானே புத்திசாலித்தனமும் கூட..!

திருமணத்துக்கு முன்பு காலை பத்து மணிக்கு எழுந்து பெட் காபி குடித்துப் பழகிய பெண், திருமணமான பிறகும் இதே பழக்கத்தை மேற்கொள்வது சரியா? அல்லது திருமணத்துக்கு முன், வெட்டியாக பல மணி நேரம் நண்பர்களுடன் போனில், ஃபேஸ்புக்கில், மொக்கை போட்டுக் கொண்டிருந்ததை இன்னமும் அப்படியே தொடர்ந்து செய்துகொண்டு இருந்தால் அது சரியா?

நிச்சயம் இல்லை. இப்படி தன் 'கம்ஃபோர்ட் ஸோன்' (Comfort zone) என்பதை விட்டு வெளியே வராமல் விடாப்பிடியாக இருப்பவர்,  personal life-பர்சனல் லைஃபை விடுங்கள்... பொதுவாழ்வில் கூட ஈடேற முடியாதே!

இன்னொரு பொதுவான உதாரணத்தை எடுத்துக் கொள்வோமே... 'திருமணத்துக்கு முன் நான் வாரா வாரம் இப்படிதான் ஊர் சுற்றுவேன் , இனிமேலும் அதையே தொடர்வேன். இல்லை என்றால் என் நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள்’ என்று நினைக்கும் ஓர் ஆணை எடுத்துக்கொள்வோம். கணவனும் மனைவியும் கூடி கொஞ்சிக் கொண்டிருக்க கிடைப்பதே வாரத்துக்கு ஒரு நாள்தான், அந்த ஒரே ஒரு நாளிலும் கணவன், தன் சொந்த சந்தோஷத்துக்காக எங்கோ போய்விட்டு, வரும்போது தன் சுயத்தையும் இழந்து வந்தால், அது மனைவிக்கு எவ்வளவு பெரிய புறக்கணிப்பாக தோன்றும்?!

சில ஆண்கள் அந்த ஒரு நாளிலும், 'சண்டே நிச்சயம் நான் என் அம்மாவை பார்த்தே தீர வேண்டும்’ என்று, அங்கேயே சாப்பிட்டு விட்டும் வந்துவிடுவார்கள். மனைவி, அவனுக்காக ஆசையாகப் பார்த்து பார்த்து சமைத்ததை எல்லாம் சட்டை செய்யாமல் இவன்பாட்டுக்கு வாராவாரம் கிடைக்கும் அந்த ஒரே ஒரு ஓய்வு நாளிலும்கூட அம்மா வீட்டிலேயே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்... 'எதற்கு முதலில் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்? கடைசி வரை தாய்க்கு ஒரு நல்ல மகனாக மட்டுமே இருந்து, பிறவிப் பயனை நிறைவு செய்திருக்கலாமே?' என்றுதானே மனைவிக்கு நினைக்கத் தோன்றும்!

திருமணம், மனைவி, குழந்தைகள் என்று ஏற்பட்டுவிட்டால், அவனுடையது ஒரு தனி கூடு. இந்தக் கூடுதான் இனி அவன் பிரதேசம். இன்னும் இன்னும் இவன் தன் தாய் தந்தையின் பிரதேசத்துக்குப் போய் வசித்துவிட்டு வர முயல்வது, அவன் இன்னமும் முதிர்ச்சியடைய வில்லை என்று எடுத்துக் காட்டிவிடும். முதிர்ச்சியற்ற 'மூன்றாம்பிறை தன்மை’கள் எல்லாம் சினிமாவுக்கு வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால், இயல்பு வாழ்வில் அது சரியான இம்சையாகத்தான் தோன்றும்.

அதனால், எப்படி கல்லூரிக்கு, அலுவலகத்துக்கு நம்மை தினம் தினம் தயார்படுத்தி வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறோமே, அதேபோல திருமண உறவு என்று வரும்போதும், அதன் இலக்கை அடைய செய்ய வேண்டியவற்றை சளைக்காமல் செய்தே ஆகவேண்டும். அதற்காக சில விஷயங்களை விட்டுக்கொடுத்து, சில விஷயங் களை மாற்றிக்கொண்டு, சில விஷயங்களை சகித்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

'அதெல்லாம் முடியாது' என்று எந்த ஜீவராசியுமே இங்கே சொல்ல முடியாது. காரணம், மாற மறுக்கும் உயிரினங்களை... இயற்கை, தன் survival- சர்வைவல் ஆட்டத்தில் இருந்து அகற்றிவிட்டு, காலத்துக்கு ஏற்ப மாறும் ஆற்றலை கொண்டவற்றை மட்டுமே வாழவிடுகிறது. 'ஒன்லி த ஃபிட்டஸ்ட் கேன் சர்வைவ்' (Only the fittest can survive).இதில் fit-'ஃபிட்' என்று சொல்வது வல்லமையை அல்ல, சூழலுக்கு ஏற்ப தன்னைப் பொருத்திக்கொள்ளும் தன்மையை. இப்படி தன்னை பொருத்தமாக்கிக் கொள்ள வேண்டுமானால் மாறிக்கொண்டே இருந்தால் தானே முடியும். மாற்றம் என்பதுதானே ஒரே மாறாத விதி!

ரொமான்ஸ் மலர்ந்துகொண்டே இருக்க வேண்டுமானால்... சூழலுக்கு ஏற்றாற்போல மாறிக்கொண்டே இருங்கள், பொறுத்துக்கொண்டே இருங்கள்...  அப்புறம் பாருங்கள் உங்கள் இல்வாழ்வில் நீங்கள் ஜெயித்துக்கொண்டே வருவீர்கள்!  have a happy life!!!