விரதம் : அறிந்து கொள்வோம். Print E-mail
Written by Dr. Somash   

விரதம் : அறிந்து கொள்வோம்.

வாரத்துக்கு ஒருநாள் நோன்பு இருப்பவர்கள் அல்லது சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ப வர்கள் மற்றவர்களைக்காட்டிலும் ஆரோக்கியமாக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பது, திட உணவைத் தவிர்த்து தண்ணீர், பழரசங்கள் போன்றவற்றை கொஞ்சமாக எடுத்துக்கொண்டு விரதம் இருப்பது என விரதம் இருப்பதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பது சரியானது அல்ல. வாரத்துக்கு ஒருநாள், தண்ணீர், பழரசம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரதம் இருப்பவர்களின் வாழ்நாள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடலின் செரிமான மண்டலத்துக்கு ஒருநாள் ஓய்வு அளிப்பதன் மூலம், அதிகப்படியான ஆற்றல் செலவாவது தவிர்க்கப்படுகிறது.

மேலும் உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்கள் சேருவது தவிர்க்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவு, வாரத்துக்கு ஒருநாள் விரதம் என்று இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்தக் குழாய்களில் அடைப்பு, உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. தண்ணீர்கூட அருந்தாமல், தொடர் விரதம் இருப்பவர்களுக்கு உடலில் நீர் அளவு குறைந்து நீரிழப்பு ஏற்படலாம். மேலும் சிறுநீரக செயல்பாட்டில் பிரச்னை ஏற்படலாம். ஆரோக்கியமான நபர்கள் யார் வேண்டுமானாலும் வாரத்துக்கு  ஒருநாள் விரதம் இருக்கலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், பயணம் மேற்கொள்வோர் விரதம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.''